ஆணவப் படுகொலை:
நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்!
பூவிழியன்
சனவரி 10,2017, ஆணவக்கொலை வழக்கில் முதன் முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள். துணிச்சல் மிகுந்த இத்தீர்ப்பை நீதியரசர் அப்துல்காதர் அவர்கள் திருநெல்வேலி நீதிமன்றத்தில் அறிவித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் சாதி வெறியர்களையும் அதிர்ச்சிற்குள் ஆழ்த்தினார். அவரைப் பாராட்டி நெகிழ்ந்துகொள்ளும் அதைவேளையில், நீதித்துறை மீது நம்பிக்கை இழந்து நகரும் எளிய மக்களுக்குள் புத்துணர்ச்சியை நட்டுவைத்திருக்கிறது இத்தீர்ப்பு.
மேலும், வழக்குப் பதியப்பட்ட எட்டு மாதங்களில் கொடுக்கப்பட்ட விரைவுத்தீர்ப்பும் சாதி வெறியர்களின் முகத்தில் அச்சத்தைப் பாய்ச்சும் வெளிச்சமும் இது. சாதியச் சமூகத்தின் கொடூரப்போக்குகளைக் கடந்து அனிச்சைச் செயலாக நிகழும் இதுபோன்ற சனநாயகம் நிரம்பிய நிகழ்வுகளைக் கொண்டாடத்துடிக்கும் மகிழ்ச்சி கவ்விய மனநிலையில் இத்தீர்ப்பை இசுலாமியர் என்பதால் மட்டுமே கிடைத்த நீதியா என நமக்குள் சிறு நெருடல் முளைக்கிறது.
இந்து நீதிபதிகள் விசாரித்த ஆணவக்கொலை வழக்கு களில், அவர்களின் சிந்தனையை ஆக்கிரமிக்காத இம் முடிவு, நீதியரசர் அப்துல்காதருக்குள் மட்டும் எப்படி நிலைபெற்றது. துணிந்து வெளிப்பட்டது. இதனை உணரும் புள்ளியில் இருந்து தான் நீதித்துறையில் படிந்திருக்கும் சாதி ஆணவப் போக்கைப் புரிந்துகொள்ள முடியும். தலைக்கவசம்(கெல்மெட்) அணிவதற்குக் காட்டிய தமிழக நீதித்துறையின் அக்கறையும், வழங்கிய நெருக்கடி நிறைந்த அதிரடித் தீர்ப்பும் சாதி ஒழிப்புக்களத்தில் வெளிப்படாமல் கள்ளமௌனமாக மாறிவிடுவதுதான் நீதித் துறையில் பரவியிருக்கும் சாதி ஆதிக்கத்தின் பேராபத்தாகும். மேலும், ஒரு மாநிலத்தின் முதல்வரையே குற்றத்தின் அடிப்படையில் தண்டித்து சிறைப்படுத்த துணியும் இதன் தன்னிச்சை அதிகாரம் சேரிக்குள் மட்டும் நுழைய மறுப்பது கவலையையும் நம்பிக்கையின்மையையும் நமக்குள் திணிக்கிறது.
இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு 1000 பேர் சாதி ஆணவத்திற்குப் பலியாவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. உலகில் ஐந்து சாதி ஆணவக் கொலைகள் நடந்தால் அதில் ஒன்று இந்தியாவில் நடக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் தமிழகத்தில் 80க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்திருப் பதாக தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இவை முன்னெப்போதையும் விட அதிகம். ஆனால் இந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைகள் நிகழவே இல்லையா? என்றால் 2003இல் கூட கண்ணகி-முருகேசன் கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால் அன்றைய அரசியல் பின்புலம் வேறு. இன்றைக்கு தலித் எதிர்ப்பை வலிமைப்படுத்தும் வெறுப்புப் பிரச்சாரமாக மாறி யிருக்கிற சாதி அடையாள அரசியல் உத்திகள் தான் ஆணவக்கொலைகள் துளிர்ப்பதற்கான அத்துமீறலை ஊட்டுகிறது.
ஆணவக்கொலைகளைத் தடுப் பதற்குத் தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, மத்திய மாநில அரசுகளின் செவி களைத் திருகினாலும், விலகிச் செல்லும் அரசியல் சூழலில் இது போன்ற தீர்ப்பு மட்டுமே நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது. மனித உரிமைத்தளத்தில் மரண தண்டனையை எதிர்த்து குரல் எழுப்பி வரும் அதேநிலையில் சாதிய வன் கொடுமைகளுக்கு மரண தண்டனை விதிப்பதில் தவறில்லை என மனதிற்குள் வரம்பைக் கடந்த கோரிக்கை ஒன்று உச்சம் பெறுகிறது. அப்போதாவது சாதிய பாகுபாடும் படுகொலைச் செயல்களும் குறைந்து விடாதா என்னும் தலித்திய உணர்வின் சுயநலம் இது.
இந்த அரசியல் மற்றும் சாதிய நெருக் கடிகளுக்கிடையில், விருத்தாச்சலம் கண்ணகி - முருகேசன், தருமபுரி இளவரசன், சென்னிநத்தம் கோபால கிருஷ்ணன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலை சங்கர், அரியலூர் நந்தினி என சில படுகொலைகள் மட்டுமே ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நமக்குள்ளும் அவை அடையாளப்பட்டு வடுவாக வடிவம் பெற்றிருக்கிறது. இவை தவிர்த்து பெரும்பாலான ஆணவக் கொலைகள் பொதுச்சமூகத்தின் கண்களுக்குள் சிக்காமல் கரைந்துவிடுகிறது.
திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, இளங்கோ நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்(27). ரயில்வே ஊழியர். இவரும் நெல்லை தச்சநல்லூர், சங்கர நாராயணன் மகள் காவேரியும் காதலித்து வந்தனர். தங்கள் குடும்பத்திற்குள் நிலவும் சாதிவெறிப்போக்கை உணர்ந்த இவர்கள், 2016 மே மாதம் 3 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி வெளியூர் சென்று திருமணம் செய்துகொண்டனர். மகளைத் தேடிய சங்கரநாராயணன், அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர், வண்ணார்பேட்டையில் உள்ள விஸ்வநாதன் வீட்டிற்குச்சென்று விசாரித்தனர். வீட்டில் இருந்த விஸ்வநாதனின் அக்காள் கல்பனா, தெரியவில்லை எனப் பதில் கூற ஆத்திரமுற்ற சங்கரநாராயணனும், அவரது மனைவி செல்லம்மாளும், கல்பனாவை வீட்டுக்குள் வைத்து வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பினர். இறந்த கல்பனா கர்ப்பிணி. கொலையாளி சங்கரநாராயணன், தச்சநல்லூர், கிராம தலையாரி. வேறு ஜாதியை சேர்ந்தவர். அவரது மகள் காவேரியை தலித் வகுப்பை சேர்ந்த விஸ்வநாதன் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட சாதி ஆணவத்தில் நடந்து முடிந்ததுதான் இக்கொலை.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கரநாராயணன், செல்லம் மாள் ஆகியோரைக் கைதுசெய்தனர். நெல்லை இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்ற இவ்வழக்கில் நீதிபதி அப்துல்காதர் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிவாஜியை ஆறு வருடங்களாக காதலித்து வந்தார். திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு இருவரும் வெளியேறினார்கள். இதனையறிந்த ஆதிக்கச் சாதியினர் ஒரு கட்டத்தில் சிவாஜியைக் கடத்தி கொலை செய்து சாதி திமிரை தீர்த்துக் கொண்டனர். இந்தச் சம்பவம் நடந்தது 2008 ஆம் ஆண்டு. இப்போது லெட்சுமியும் அவருடைய எட்டு வயது மகனும் சிவாஜி வீட்டிலேயே வசிக்கிறார்கள். சிவாஜியின் அம்மாவும் தம்பிகளும்தான் லெட்சுமிக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
கண்ணீரில் முகம் கழுவியபடி பேசிய லட்சுமி “மூணு பொண்ணுங்க, மூணு பசங்கனு எங்க வீட்ல மொத்தம் ஆறு புள்ளைங்க. நான் சின்னப்புள்ளயா இருக்கும் போதே எங்க அப்பா, அம்மா இறந்துட்டாங்க. அண்ணன், அக்காங்கதான் என்ன வளத்தாங்க. அம்மாபேட்டையில நான் ஸ்கூலுக்குப் போய்க்கிட்டு இருந்தப்பத்தான் பஸ்ல சிவாஜிய பாத்தேன். அவரு அப்ப ஐ.டி.ஐ படிச்சிக்கிட்டு இருந்தார். ஆறு வருஷம் லவ் பண்ணுனோம். அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு உறுதியா இருந்தேன். அதனால ரெண்டு பேரும் ஒண்ணா இருந்துட்டோம். வயித்துல குழந்த வளர ஆரம்பிச்சிடுச்சு. நாலு மாசம். வீட்ல கண்டுபுடிச்சிட்டாங்க.
‘அவன் என்ன சாதி... நாம என்ன சாதி? அவன மறந்துடு’னு அடிச்சு துன்புறுத்துனாங்க. ஒரு கட்டத்துல திண்டுக்கல்ல அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வீட்டுல போய் தங்கினோம். நாலு மாசம் அங்க நிம்மதியா இருந்தோம். ஆனா, எங்க அண்ணனுங்க எப்படியோ கண்டுபுடிச்சுகிட்டு வந்துட்டாங்க. அன்னிக்கு காலையில ஆறரை மணி இருக்கும். கதவு தட்டுற சத்தம் கேட்டு, நான் எழுந்திருச்சு திறக்கப் போனேன். ‘நீ போக வேண்டாம்... நான் பார்க்கிறேன்’னு அவரு போய் கதவத் தொறந்தாரு. வெளியில நின்ன ரெண்டு, மூணு பேரு அவரு மூஞ்சியில துணியப்போட்டு தூக்கிகிட்டுப் போயிட்டாங்க. கொஞ்ச நேரத்துல எங்க அண்ணனுங்க வந்தாங்க. நான் ஓடி ஒளிஞ்சுக்கிட்டேன். அப்புறம் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர், என்னை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டு போனாரு. `சிவாஜியை கல்லணையில வெச்சி கொன்னுட்டாங்க'னு ஸ்டேஷன்ல இருக்கும்போது போன் வந்துச்சு. என் உயிரையே உருவிப்போட்ட மாதிரி இருந்துச்சு. அப்போ வயித்துல எட்டு மாச சிசுவா இருந்தான் இவன்...’’ என மரணத்தின் வலியோடு தன் காதலன் மரணத்தின் அவஸ்தையை பரிமாறினார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த பரமசிவம், மாரியம்மாளின் மகன் முத்துக்குமார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரும், ஒட்டன்சத்திரம், விருப்பாச்சியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்திருக்கிறார்கள். இதனை அறிந்து ஆத்திரமடைந்த மல்லிகாவின் பெற்றோர், முத்துக்குமாரைக் கொலை செய்து விட்டார்கள். கொலைகாரர் களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் முத்துக்குமாரின் பெற்றோர். முத்துக்குமாரின் அம்மா மாரியம்மாள் கூறும்போது, “எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. நாங்க கூலி வேலை செஞ்சு ரேஷன் அரிசி சாப்புட்டுத்தான் புள்ளைய படிக்க வெச்சோம். முத்துகுமாரும் எம்.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு, பி.எட் பண்ணி கிட்டு இருந்துச்சு. பேங்க் பரீட்சை எழுதி பாஸாகிட்டதா மெசேஜெல்லாம் வந்துருந்துச்சு. அன்னிக்கு சாயங்காலம்தான் அந்தப் புள்ளைக்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘எங்கக்கூட படிக்கிற பொண்ணுக்குப் பொறந்தநாளு. கூடப் படிச்ச ஃப்ரெண்ட்ஸுங்க எல்லாம் நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போறோம்’னு சொல்லிச்சு என் புள்ள. ஃப்ரெண்டு சுரேஷ்கூடத்தான் போறேன்னு சொல்லிச்சு.
மறுநாள் ரொம்ப நேரமா ஆளைக் காணோமேனு போன் பண்ணினப்போ சுவிட்ச் ஆஃப்னு வந்துச்சு. சுரேஷுக்கு போன் பண்ணுனேன். ‘அவனை முன்னாடியே அனுப்பி விட்டுட் டேம்மா’னு சொன்னான். சுரேஷுக்கு மறுபடியும் மறுபடியும் போன் பண்ண, அவன் மாத்தி மாத்தி சொன்னான். ‘கண்ணு... என் மகன் எங்க கண்ணு?’னு அவன்கிட்ட அழ ஆரம்பிச்சுட்டேன். அப்பதான் அவன், ‘நீங்களும் அப்பாவும் மட்டும் விருப்பாச்சிக்கு கிளம்பி வாங்கம்மா’னு சொன்னான். எங்களுக்கு ஒண்ணுமே புரியல. பதறி அடிச்சிகிட்டு கார் எடுத்துகிட்டு ஓடுனோம்.
அங்க போய் பார்த்தா... எம்புள்ள கிணத்துக்குள்ள மிதக்குது!’’ என்னதான் நடந்ததுன்னு கேட்டா, ‘கோழி திருட வந்தான், துரத்துனோம், தவறி கிணத்துல விழுந்துட்டான்’னு ஊரே சேர்ந்து அப்பட்டமா பொய் சொன்னாங்க. அதுக்குப் பொறகுதான் என் புள்ளையும் அந்தப் பொண்ணும் விரும்பின வெவரமே எங்களுக்குத் தெரியவந்துச்சு. அதுக்கு அவுங்க வீட்ல மாப்பிள்ளை பாத்துருக்காங்க. அப்பதான் முத்துக்குமாரை காதலிக்கிறதா அது வீட்டுல சொல்லியிருக்கு. நாங்க தாழ்த்தப்பட்ட சாதிங்கிறதால, பிளான் பண்ணி, முத்துக்குமாரை விருப்பாச்சிக்கு வரவெச்சு, கிணத்துல தள்ளி கொன்னுருக்காங்க. அவளையும் மறைச்சுட்டாங்க” என்று ரத்தக்கதறலைக் கொட்டித் தீர்த்தார். தலித்தாகப் பிறந்தது குற்றமா என்கிற வேதனையே இப்போதுவதை நம் இருதயத்தை இயங்க விடாமல் நசுக்குகிறது.
2014ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த விமலாதேவியும், திலிப்குமாரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களை வலுக்கட்டாயமாகப் பிரித்த உசிலம்பட்டி மற்றும் வத்தலக்குண்டு காவல்துறையினர் விமலாதேவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் சில தினங்களில் விமலா தேவி சாதி ஆணவக்கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் உருத்தெரியாமல் எரிக்கப் பட்டது.
திலிப்குமாருக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால், அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி, ரிட் மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கில் நீதிபதி இராம சுப்பிரமணியம், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டதோடு, காவல்துறை செய்த தவறுகள் குறித்து ஐ.ஜி. விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஐ.ஜி.யும் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில், விமலாதேவி தொடர்பான வழக்கு, நீதிபதி இராமசுப்பிரமணியம் தலைமையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பல அதிரடியான உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்தார்.
விமலாதேவி வழக்கைப் பொறுத்தவரை, இதில் தவறு செய்த காவல் ஆய்வாளர்கள் ஆனந்தி, ராணி உள்பட 5 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்த வேண்டும்; 24 மணி நேரமும் செயல்படக் கூடிய இலவச தொலைபேசி எண் (ஹெல்ப் லைன்) அறிவித்திட வேண்டும்; புகார்களை இணையம் வழியாகவும் பதிவு செய்யும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். நேரடியாக வழங்கப்படும்
புகார்களைப் பெற்றுக் கொள்ளும் காவல்நிலையம், மேற்படி பிரச்சினை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.
இதைப் பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்; பெற்றோர்கள் மற்றும் தம்பதியினர் மற்றும் காதலர்களை அச்சுறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேவைப்படும் வழக்குகளில் பெற்றோருக்கு சட்டத்தை எடுத்துரைப்பதற்கான ஏற்பாடும், அச்சுறுத்தலில் உள்ள சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியர் மற்றும் காதலர்கள் தங்குவதற்கு மாவட்டங்கள் தோறும் குறுகிய கால காப்பக வசதியும் செய்து தரப்பட வேண்டும்; இதற்கான நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்திட வேண்டும் என்று பல அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி இராமசுப்பிரமணியம், மேற்கண்ட அனைத்து உத்தரவுகளையும் மூன்று மாத காலத்திற்குள் செயல்படுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசுக்குக்கெடு விதித்தார். புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக வலியுறுத்தப்பட்ட இந்த உத்தரவுகளும் அரசாலும், ஆட்சி யாளர் களாலும் தீண்டாப் பொருளாகவே புறக்கணிக்கப்பட்டு கிடப்பில் போடப் பட்டது.
கடந்த ஜூலை 2015இல், கோகுல்ராஜ் கொலை நடந்த போதே, தேசிய எஸ்சி நல ஆணையம், தலித்துகள் மீதான வன் முறையைத் தடுக்க சில பரிந்துரைகளை தமிழக அரசிற்கு அளித்தது. அதாவது, தலித்துகளுக்கு எதிரான வன்முறை நடக்கும் மாநிலங்களில், தமிழ்நாடு முதல் 5 இடங்களில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று. காவல்துறை நிர்வாகம், இந்த வன்முறைகளைத் தடுக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என ஆணையம் அந்தப் பரிந்துரைகளில் தமிழக அரசிடம் கூறியிருந்தது.
மேலும் அது, “தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டிக் கப்படும் விகிதம் வெறும் 10 சதவீதமாகவே உள்ளது. இது தேசிய அளவிலான சராசரி 30 சதவீதத்தைவிடக் குறைவாகவே உள்ளது. தமிழக அரசு, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை கிடைத்து, தண்டனைக்கான விகிதம் கூடுவதற்கு, போதிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசியல் சூழலில் எவ்வித நகர்வும் இல்லாமல் அமைதியைச் சுமப்பது சாதிவெறி நிகழ்வுகளை முறியடிப்பதற்கு முயற்சிசெய்ய விரும்பவில்லை என்பதையே உணர்த்துகிறது. அதுவே அதிர்ச்சியூட்டுகிறது.
இதுதவிர, தமிழகத்தில், எஸ்சி ஆணையம் இல்லை. ஆதிதிராவிடர் நலத்துறை என்ற அரசு துறையே உள்ளது. இதன் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. எஸ்சி ஆணையம், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பழமையான ஆணையம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆணையத்தை உருவாக்க அரசு தயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற ஆணையங்களை எல்லாம் அரசு உருவாக்கி வைத்துள்ளது. இது தலித்துகள் மீதான அரசின் வெறுப்பையே வெளிப்படுத்துகிறது. கடந்த 2014 இல் சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசிடம் எஸ்சி ஆணையத்தை உருவாக்கும்படி கூறியது. ஆனால் தமிழக அரசு அதனைப் பின்பற்றவில்லை.
தேசிய எஸ்சி ஆணைய கணக்குப்படி, தமிழகத்தில் 20 சதவீதம் எஸ்சி மக்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், ஒரு ஆணையத்தை உருவாக்க தமிழக அரசு தயாராக இல்லை. சட்டமன்றத்தில் இதைப் பற்றி உறுப்பினர்கள் சிலர் பேசும் போதெல்லாம், நலத்திட்டங்களைப் பற்றிப் பேசி கவனத்தை மடைமாற்றிவிடுகிறார்கள் ஆட்சியாளர்கள். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் நிலவும் ஆணவக் கொலைகளைப் பற்றி பிரச்சினை எழும்பியபோது, அப்போதைய நிதியமைச்சர், பன்னீர் செல்வம் ஆணவக் கொலைகள் தமிழகத்தில் நடைபெறவில்லை எனவும் தனிச்சட்டம் தேவையில்லை எனவும் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பதிலளித்தார்.
2016ஆம் ஆண்டு நடந்த திருநாள் கொண்டச்சேரிப் போராட்டத்தில் தலித்துகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் ஆணை வழங்கியது. ஆனால், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் அந்த ஆணையை அவமதிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்த மறுத்தது. இப்படி உயர்நீதி மன்ற மாண்பைக் கொச்சைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பொதுப்பாதை உரிமையை முழங்கிய தலித்துகளை காவல்துறையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தி சாதிவெறியர்களாய் தங்களையும் அடையாளப்படுத்திக்கொண்டது.
எளிய மக்களுக்கான நீதி அரசு எந்திரங் களால் இவ்வாறு நசுக்கப்படும் அவலம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் 2013 சூலை 4 அன்று பிணமாக மீட்கப்பட்ட தருமபுரி இளவரசன் இறப்பைத் தற்கொலையெனக் கூறி 21-2-2017 அன்று வழக்கையே முடித்தது சென்னை உயர்நீதிமன்றம். சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் இம்முடிவை அறிவித்த தாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டது நீதித்துறை. சனநாயகமற்ற இதுபோன்ற நகர்வுகள் நம் மனசாட்சியை நிலை குலையச் செய்கிறது.
இப்படி ஆளும் வர்க்கமும், நீதித்துறையும் தலித்துகளை சாதியப் பார்வையோடு அணுகுகிற ஓரவஞ்சனைப் போக்குகள் அப்பட்டமாய் தென்படுவதால் ஆணவப் படுகொலைகள் அதிகரிக்கிறது. சட்டம் மற்றும் தண்டனை சார்ந்த அச்சம் முற்றிலும் ஆதிக்கச்சாதியினரிடம் இல்லை என்பதையே தொடர் படு கொலைகள் நிருபிக்கிறது. தலித் படு கொலைகள், சேரி தாக்குதல்கள் குறித்து ஓய்வுப்பெற்ற நீதிபதிகளைக் கொண்டு நியமிக்கப்படும் ஆணையங்கள் கூட ஆட்சியாளர்களைத் திருப்திப் படுத்துகிற ஒன்றாக வெளிப்படுவதை அதன் அறிக்கைகள் மூலம் அறியமுடிகிறது. கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட எந்த ஆணையமும் தலித் இழப்புகளையும் வலிகளையும் பற்றி பேசியதில்லை. மாறாக ஆட்சி யாளர்களின் செயல்களை நியாயப் படுத்தும் குரலாக ஓங்கி ஒலித்தன. சமீபத்தில் சாதி ஆணவத்தினால் கொடூரமாகச் சிதைத்து படுகொலை செய்யப்பட்டார் அரியலூர் நந்தினி. நாடக் காதல் என்று சாதி வெறுப்பைத் தூவும் இராமதாசின் வன்னிய இளைஞனால் நடந்த போலிக்காதல் படுகொலையே இது. புழுக்கள் நெளிந்த உடலாய் கிணற்றுக்குள் கிடந்த நந்தினியின் அழுகிய உடல் 15.01.2017 அன்று மீட்கப்பட்டது. இருப்பினும் காவல்துறையின் அலட்சியப்போக்கே நந்தினியின் உயிரைப் பறித்தது. இந்து முன்னணியைச் சார்ந்த மணிகண்டன் தான் நந்தினியை அழைத்துக்கொண்டு போனான் என புகார் கொடுக்கப்பட்டும் முறையான விசாரணையை மேற் கொள்ளாமல் அலைகழித்துள்ளது காவல்துறை. தொடர் வலியுறுத்தலால் ஒருமுறை மணிகண்டனையும் அழைத்து மேலோட்டமாக விசாரித்து வீட்டிற்கு அனுப்பிவிடுகிறது. பிறகு தான் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறது நந்தியின் உடல். இது தான் இன்றைய சாதியப்போக்கு.
இந்த வலிகளை எல்லாம் அறுத்து எறிவதற்கு ஆணவக்கொலைக்குத் தனிச் சட்டமும் தமிழகத்தில் தனி எஸ்.சி. ஆணையமும் உருவாக்கப்பட வேண்டும் என்பது நமது முதன்மையான கோரிக்கையாக இருந்தாலும் அது மட்டுமே நம்மைப் பாதுகாத்திடாது. ஒடுக்கப் பட்ட மக்கள் அமைப்பாவதும் அரசியல் சக்தியாய் அணிதிரள்வதும் தான் சாதியச் சமூகத்தை அச்சுறுத்தும் நம்மையும் ரத்தச் சிதறல்களில் இருந்து மீட்டெடுக்க இயலும். அடுத்த படுகொலை விழுவதற்குள் ஆயத்தமாவோம். சாதியக் கொலைகளைத் தடுப்பதற்கு மட்டுமல்ல, சாதி வெறியர்களை எதிர்ப்பதற்கும்...
நமது தமிழ்மண்/ மார்ச் 2017
No comments:
Post a Comment