Sunday, 17 December 2017

உடுமலை சங்கரின் படுகொலைத் தீர்ப்பு: நீதியின் புனிதம்

உடுமலை சங்கரின் படுகொலைத் தீர்ப்பு:

 நீதியின் புனிதம் 


பூவிழியன்



“எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதி கிடைக்க ஒன்னே முக்கால் வருடங்களாகக் காத்துக்கிடந்தேன். இந்தத் தீர்ப்பு நீதித்துறைமீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது.” என்கிறது கௌசல்யாவின் காயக்குரல்.  “சங்கரின் படுகொலையால் நாங்கள் பெருந்துயரமடைந்துள்ளோம். கவுரவக்கொலையின் கடைசிப்பலி என் மகனாக இருக்கட்டும். அரசாங்கம் இத்தகைய கொலைகளுக்கு முடிவுகட்ட வேண்டும்” என வலிநிறைந்த வார்த்தைகளால் கொட்டித்தீர்க்கிறார் உடுமலை சங்கரின் தந்தை வேலுச்சாமி. நீதியரசர் அலமேலு நடராசன் 12.12.2017 அன்று வழங்கியுள்ள ஆணவக்கொலைக்கு எதிரான இத்தீர்ப்புதான் சனநாயகத்தின் திசைநோக்கி நாம் பயணப்படுவதற்கான வெளிச்சத்தை விதைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், நிகழ்காலச்சூழலில் நீதிமன்றத்தின்மீது எளிய மக்களுக்கு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. சாதிய மிருகங்களின் ஈரக்குலையை மரணபயம் இறுகக் கவ்வியிருக்கிறது. சாதிவெறுப்பு அரசியலின் முகத்தில் அமிலம் வீசப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மேலாக கௌசல்யாவின் சாதி எதிர்ப்புப் போர்க்களத்தில் நீதி பூத்திருக்கிறது. ஆம், இனி  சாதி மறுப்புக் காதலில் அமைதி முளைக்கும்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(22). பொறியியல் கல்லூரி மாணவரான இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திண்டுக்கல் மாவட்டம், பழநி திருநகரைச் சேர்ந்த சின்னச்சாமி மகள் கவுசல்யா(19) என்ற சாதிஇந்துவைக் காதலித்து வந்தார். படுகொலைக்கு 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் திருமணத்துக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அவ்வப்போது பேச்சுவார்த்தைமூலம் பெண்ணைத் திரும்ப அழைத்துச்செல்ல கௌசல்யாவின் குடும்பத்தினர் முயன்றும் தோல்வியே இறுதியானதாக மாறியது. சாதிவெறியின் உந்துதலால் மகளைப் பிரிக்கப்போராடிய அவர்களுக்கு இது மேலும் கோபத்தைக் கொப்பளிக்க வைத்தது. இனி, தாழ்த்தப்பட்டவனோடு தன் மகள் வாழக்கூடாது என முடிவெடுத்த சின்னச்சாமி கூலிப்படையின் மூலம் சங்கரைப் படுகொலை செய்ய எண்ணினார்.

இந்நிலையில், கல்லூரியின் கடைசிநாளின் பிரியாவிடை நிகழ்வுக்காகப் புதுத்துணி எடுக்க 13.3.2016 அன்று உடுமலைப்பேட்டைக்கு சங்கரும் கௌசல்யாவும் சென்றனர். மத்தியப் பேருந்துநிலையம் எதிரில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கவுசல்யாவின் தந்தை கொடுத்து அனுப்பிய இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர் இருவரையும் பட்டப்பகலில், பொதுமக்கள் பார்வையின் நடுவே அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர். சாலை ரத்தத்தால் நனைய, எவ்விதப் பதற்றமுமின்றி தப்பினர் கொலையாளிகள். ரத்தத்தின் ஈரம் உலர்வதற்குள் ஓய்ந்தது சங்கரின் உயிர்ஓசை. அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் திரைப்படத்தைத் தோல்வியால் நிறைக்கும் அளவில் அமைந்திருந்தன. உலகின் அசைவையே ஒரு நிமிடம் உறைந்துபோக வைத்தது இது. தன் கண் முன்னே கதறக் கதறக் காதலனை வெட்டுவதை விரும்பாத கௌசல்யா சங்கரைப் பாதுகாக்க முயன்றபோது அவருக்கும் தலையிலே வெட்டுவிழுந்தது. இக்கொடுங்காயத்துடன் கவுசல்யா கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது தலையில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்கு 36 தையல்கள் போடப்பட்டன. தீவிர சிகிச்சைக்குப் பிறகு பெற்றோருடன் செல்ல மறுத்து, சங்கரின் குடும்பத்தாருடன் வசிக்க விரும்பி புறப்பட்டுச்சென்றது அவரின் உண்மைக் காதலையும் துணிச்சலையும் மீண்டுமொருமுறை மெய்ப்பித்தது.

வேலுச்சாமியின் மனைவி செல்வநாயகி மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். இந்நிலையில் 3 பிள்ளைகளையும் விவசாயக்கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தார். தனது மகன் சங்கர் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக வருவான், தன் குடும்ப வறுமையைத் துடைப்பான் எனக் காத்திருந்த நிலையில் அவருக்கு மகனின் மரணச்செய்தியும் வலியின் கொடுமையும் தொண்டையை இறுகக் கவ்வியது. இதனையடுத்துதான் ஆணவப்படுகொலையையும் சாதியின் கொடூரத்தையும் புரியவைத்தது சமூகம்.

இந்நிலையில், உடுமலைப்பேட்டைப் போலீஸார் இப்படுகொலைகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். பின், உடுமலை துணைக்காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல இடங்களுக்குத் தனிப்படைகள் விரைந்தன. கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் 14.03.2016 அன்று சரணடைந்தார். இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், பழநி மணிகண்டன்(25), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன்(31), திண்டுக்கல்லைச் சேர்ந்த மைக்கேல்(எ)மதன்(25), செல்வக்குமார்(25), பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(39) ஆகிய கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். பிறகு, கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, கௌசல்யாவின் மாமா பாண்டித்துரை, கலை தமிழ்வாணன், கொலையாளிகளுக்குத் தம்பதியை அடையாளம் காட்டிய தனராஜ், ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள்மீது 1,100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. வழக்கும் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், குற்றவாளிகள் தரப்பில் இதுவரை 58 முறை ஜாமின் கேட்டு மனு செய்து இருந்தனர். அத்தனைமுறைகளும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்குப்பிறகு 12.12.2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமிக்கு இரட்டைத் தூக்குத்தண்டனை மற்றும் ரூ.3லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை என வலியுறுத்தப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்த ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஆறாவது குற்றவாளியான செல்வகுமாருக்கும் தூக்குத்தண்டனை.  சின்னச்சாமியின் நண்பர் ஜெகதீசனுக்கு மரண தண்டனை. மைக்கேல், கலை தமிழ்வாணன், மதன் ஆகியோருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.  ஸ்டீபன்  தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள்  தண்டனை வழங்கப்பட்டது. கவுசல்யாவின் தந்தையைத்  தவிர மற்ற அனைவரும் கூலிப்படையாக செயல்பட்டவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டது.

கௌசல்யாவின் துணிச்சலான தொடர்போராட்டத்திற்கு ஆதரவாகவும் நீதி கிடைப்பதற்கும் வலிமை சேர்த்தவர்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சி.பி.எம், சி.பி.ஐ., கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோரை நினைவுகூர்ந்துள்ளார் எவிடென்ஸ் கதிர். மேலும், ‘அதை எல்லாம் மறக்க மாட்டேன். இது கூட்டுமுயற்சி. அதனால்தான் நீதி வசப்பட்டு இருக்கிறது. விசாரணை அதிகாரி, அரசு குற்ற வழக்கறிஞர்கள் பணிகள் பாராட்டப் படவேண்டியவை. அன்பு மகள் கவுசல்யா நீதியின் அடையாளம். இந்த சின்ன வயதில் நீதிக்காக உறவுகளை இழக்கின்ற செயலில் இறங்கிய அந்த மன உறுதியைக் கண்டு கண்ணீர் வருகிறது’ என தன் நெகிழ்ச்சி பகிர்ந்துள்ளார் அவர்.

தனது கணவன் சங்கர் வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்துஎ  கவுசல்யா குறிப்பிடும்போது: “எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதி கிடைக்க ஒன்னே முக்கால் வருடங்களாகக் காத்துக்கிடந்தேன். இந்தத் தீர்ப்பு  நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது. வழக்கு முடியும் வரை நீதிமன்றக்காவலில் வைத்திருந்தது அரிதினும் அரிது. சாதிய கவுரவக்கொலை வழக்கிற்கு இந்தத் தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும். தூக்குத்தண்டனை பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூக்குத்தண்டனையில் எனது கருத்து வேறாக இருப்பினும் தீர்ப்பு சாதிவெறியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக மேல்முறையீடு தொடர்வேன். தண்டனை கிடைத்தவர்கள் மேல்முறையீடு செய்தால், அதனை எதிர்த்து வழக்காடுவேன். 3 பேரின் விடுதலையை எதிர்த்து இறுதிவரை சட்டரீதியாகப் போராடுவேன். சங்கருக்கு உரிய நீதி இந்த வழக்கோடு முடிந்துவிடவில்லை. தனிச்சட்டம் படைப்பதுதான் இந்த வழக்கிற்குத் தீர்வாக அமையும். எனக்கும் சங்கரது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வன்மத்தை அசைபோடும் சூழலில், கடந்த 13.05.2016 அன்று திருநெல்வேலியில் கௌரவக்கொலை செய்யப்பட்டார் தலித் வகுப்பைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் கல்பனா. தனது அண்ணன் மாற்றுச்சமூகப் பெண்ணைக் காதல் திருமணம் செய்தார் என்பதற்காகப் பெண்ணின் பெற்றோர் இவரைப் படுகொலை செய்து சாதிவெறியைத் தீர்த்தனர். இந்நிலையில் இந்த ஆணவக்கொலை நிகழ்ந்த எட்டே மாதங்களில் 10.01.2017 அன்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் சாதி இந்துக்களான பெண்ணின் பெற்றோருக்குத் தூக்குத்தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டினார் நீதியரசர் அப்துல்காதர். இதுதான் தமிழகத்தில் ஆணவக்கொலைக்கான முதல் தூக்குத்தண்டனை. ஆனால் இதில் காதலர்கள் படுகொலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில்மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 81 க்கும் அதிகமான சாதி ஆணவக்கொலைகள் நடந்திருப்பதாகக் கூறுகிறது புள்ளிவிபரம். ஒரு ஆண்டில் இருபது கௌரவக்கொலைகள் என்பது பதிவான வழக்குகளின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், வெளியில் தெரியாமல் நடக்கும் கௌரவக்கொலைகள் ஏராளம். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் பெண்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதில் பாதிக்கு மேல் காதல் சம்பந்தப்பட்ட கௌரவக்கொலைகளே. இதேபோல் ஆண்டுக்கு 700 பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதிலும் பாதிக்குமேல் கௌரவத் தற்கொலைகள்தான். தலித் இளைஞர்களைக் காதலித்த குற்றத்துக்காகப் பெரும்பாலும் சாதி இந்துப்பெண்கள்தான் கௌரவக்கொலை செய்யப்படுகிறார்கள் என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது கௌரவ கொலைகள் தொடர்பாக தனியாக சட்டம் இயற்றப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், சட்டம் வந்தபாடில்லை. அதிமுக அரசோ தமிழகத்தில் கௌரவக்கொலைகளே நடைபெறவில்லை என்று உளறிக்கொண்டிருக்கின்றது. வட மாநிலங்களில் ’காப்’ பஞ்சாயத்துகள்தான் கௌரவக்கொலைகளுக்குக் காரணமாக இருக்கின்றன. அதேபோல் தமிழகத்தில் சாதிப் பஞ்சாயத்துகள் கௌரவக் கொலைகளும் தற்கொலைகளும் நடப்பதற்கு உந்துதலாக இருக்கின்றன. கௌரவக்கொலைக்கு எதிராக ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளைத் தேசிய பெண்கள் ஆணையமும் தேசிய சட்ட ஆணையமும் 2011லேயே மத்திய அரசுக்கு அறிக்கையாக அளித்திருக்கின்றன. ஆனாலும், மத்திய அரசு இந்த விஷயத்தில் மௌனமாகவே இருக்கிறது.

2010ஆம் ஆண்டில் உலகில் 5,000 ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த ஆணவக்கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெறுவதாகவும் கூறுகிறது ஒரு புள்ளி விபரம்.

மேலும், தமிழகத்தில் கடந்த ஜனவரி 2008ம் ஆண்டிலிருந்து ஜூன் 2010 வரைக்குமான காலகட்டத்தில் 22 மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 1,971 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 90 சதவிகிதத்தினர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இந்தத் தற்கொலைகளில் சாதி ஆணவக்கொலைகளும் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற ஆணவக்கொலைகளை தற்கொலைகள் என்று மூடிமறைப்பதில் குடும்ப உறுப்பினர்கள், ஊர் மக்கள் தவிர காவல்துறைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது.

சாதி இப்படி ஆணவத்தைப் படுகொலையாக நீட்டிக்கும்போது மரண தண்டனையில் உடன்பாடில்லாத நாமும் நீதிக்காக, சாதிவெறியின் அத்துமீறலை நசுக்குவதற்காக வலிகளின் பக்கம் நிற்பது தவிர்க்க முடியாததாகிறது. அதுமட்டுமல்லாமல், எளிய மக்களின் சனநாயகம் தன் பயணத்தை நம்பிக்கையுடன் நகர்த்துவதற்கு தூக்குத்தண்டனை போன்ற புனிதமான நீதிகள் தேவை என்பதை சாதியின் கொடூரங்களும் கொலைகளும் நமக்கு உணர்த்துகிறது. அதேவேளையில், மேல்முறையீடு உள்ளிட்ட வார்த்தைகள் நீதியின் நம்பிக்கையைச் சிதைப்பதாக அச்சுறுத்தினாலும் சாதிவெறியர்கள் இதுபோன்ற உச்சபட்ச தண்டனையில் இருந்து விடுபடாமல் இருக்க சனநாயகத்தின்மீது பற்றுள்ள ஒவ்வொருவரும் போராட்டக்களத்தில் பங்கேற்கவேண்டும். இன்றைய தீர்ப்பைக் கொண்டாடுவதற்காக மட்டுமல்ல, நாளைய படுகொலையைத் தடுப்பதற்கும்!

நமது தமிழ்மண் / டிசம்பர் 2017

No comments:

Post a Comment

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்!

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்! பூவிழியன் சனவரி 10,2017, ஆணவக்கொலை வழக்கில் முதன் முறையாக மரண தண்டனை விதிக்கப்...