Sunday, 17 December 2017

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்!

ஆணவப் படுகொலை:

நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்!


பூவிழியன்


சனவரி 10,2017, ஆணவக்கொலை வழக்கில் முதன் முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள். துணிச்சல் மிகுந்த இத்தீர்ப்பை நீதியரசர் அப்துல்காதர் அவர்கள் திருநெல்வேலி நீதிமன்றத்தில் அறிவித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் சாதி வெறியர்களையும் அதிர்ச்சிற்குள் ஆழ்த்தினார். அவரைப் பாராட்டி நெகிழ்ந்துகொள்ளும் அதைவேளையில், நீதித்துறை மீது நம்பிக்கை இழந்து நகரும் எளிய மக்களுக்குள் புத்துணர்ச்சியை நட்டுவைத்திருக்கிறது இத்தீர்ப்பு.
மேலும், வழக்குப் பதியப்பட்ட எட்டு மாதங்களில் கொடுக்கப்பட்ட விரைவுத்தீர்ப்பும் சாதி வெறியர்களின் முகத்தில் அச்சத்தைப் பாய்ச்சும் வெளிச்சமும் இது. சாதியச் சமூகத்தின் கொடூரப்போக்குகளைக் கடந்து அனிச்சைச் செயலாக நிகழும் இதுபோன்ற சனநாயகம் நிரம்பிய நிகழ்வுகளைக் கொண்டாடத்துடிக்கும் மகிழ்ச்சி கவ்விய மனநிலையில் இத்தீர்ப்பை இசுலாமியர் என்பதால் மட்டுமே கிடைத்த நீதியா என நமக்குள் சிறு நெருடல் முளைக்கிறது.

இந்து நீதிபதிகள் விசாரித்த ஆணவக்கொலை வழக்கு களில், அவர்களின் சிந்தனையை ஆக்கிரமிக்காத இம் முடிவு, நீதியரசர் அப்துல்காதருக்குள் மட்டும் எப்படி நிலைபெற்றது. துணிந்து வெளிப்பட்டது. இதனை உணரும் புள்ளியில் இருந்து தான் நீதித்துறையில் படிந்திருக்கும் சாதி ஆணவப் போக்கைப் புரிந்துகொள்ள முடியும். தலைக்கவசம்(கெல்மெட்) அணிவதற்குக் காட்டிய தமிழக நீதித்துறையின் அக்கறையும், வழங்கிய நெருக்கடி நிறைந்த அதிரடித் தீர்ப்பும் சாதி ஒழிப்புக்களத்தில் வெளிப்படாமல் கள்ளமௌனமாக மாறிவிடுவதுதான் நீதித் துறையில் பரவியிருக்கும் சாதி ஆதிக்கத்தின் பேராபத்தாகும். மேலும், ஒரு மாநிலத்தின் முதல்வரையே குற்றத்தின் அடிப்படையில் தண்டித்து சிறைப்படுத்த துணியும் இதன் தன்னிச்சை அதிகாரம் சேரிக்குள் மட்டும் நுழைய மறுப்பது கவலையையும் நம்பிக்கையின்மையையும் நமக்குள் திணிக்கிறது.

இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு 1000 பேர் சாதி ஆணவத்திற்குப் பலியாவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. உலகில் ஐந்து சாதி ஆணவக் கொலைகள் நடந்தால் அதில் ஒன்று இந்தியாவில் நடக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் தமிழகத்தில் 80க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்திருப் பதாக தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இவை முன்னெப்போதையும் விட அதிகம். ஆனால் இந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைகள் நிகழவே இல்லையா? என்றால் 2003இல் கூட கண்ணகி-முருகேசன் கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால் அன்றைய அரசியல் பின்புலம் வேறு. இன்றைக்கு தலித் எதிர்ப்பை வலிமைப்படுத்தும் வெறுப்புப் பிரச்சாரமாக மாறி யிருக்கிற சாதி அடையாள அரசியல் உத்திகள் தான் ஆணவக்கொலைகள் துளிர்ப்பதற்கான அத்துமீறலை ஊட்டுகிறது.

ஆணவக்கொலைகளைத் தடுப் பதற்குத் தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, மத்திய மாநில அரசுகளின் செவி களைத் திருகினாலும், விலகிச் செல்லும் அரசியல் சூழலில் இது போன்ற தீர்ப்பு மட்டுமே நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது. மனித உரிமைத்தளத்தில் மரண தண்டனையை எதிர்த்து குரல் எழுப்பி வரும் அதேநிலையில் சாதிய வன் கொடுமைகளுக்கு மரண தண்டனை விதிப்பதில் தவறில்லை என மனதிற்குள் வரம்பைக் கடந்த கோரிக்கை ஒன்று உச்சம் பெறுகிறது. அப்போதாவது சாதிய பாகுபாடும் படுகொலைச் செயல்களும் குறைந்து விடாதா என்னும் தலித்திய உணர்வின் சுயநலம் இது.

இந்த அரசியல் மற்றும் சாதிய நெருக் கடிகளுக்கிடையில், விருத்தாச்சலம் கண்ணகி - முருகேசன், தருமபுரி இளவரசன், சென்னிநத்தம் கோபால கிருஷ்ணன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலை சங்கர், அரியலூர் நந்தினி என சில படுகொலைகள் மட்டுமே ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நமக்குள்ளும் அவை அடையாளப்பட்டு வடுவாக வடிவம் பெற்றிருக்கிறது. இவை தவிர்த்து பெரும்பாலான ஆணவக் கொலைகள் பொதுச்சமூகத்தின் கண்களுக்குள் சிக்காமல் கரைந்துவிடுகிறது.

திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, இளங்கோ நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்(27). ரயில்வே ஊழியர். இவரும் நெல்லை தச்சநல்லூர், சங்கர நாராயணன் மகள் காவேரியும் காதலித்து வந்தனர். தங்கள் குடும்பத்திற்குள் நிலவும் சாதிவெறிப்போக்கை உணர்ந்த இவர்கள், 2016 மே மாதம் 3 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி வெளியூர் சென்று திருமணம் செய்துகொண்டனர். மகளைத் தேடிய சங்கரநாராயணன், அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர், வண்ணார்பேட்டையில் உள்ள விஸ்வநாதன் வீட்டிற்குச்சென்று விசாரித்தனர். வீட்டில் இருந்த விஸ்வநாதனின் அக்காள் கல்பனா, தெரியவில்லை எனப் பதில் கூற ஆத்திரமுற்ற சங்கரநாராயணனும், அவரது மனைவி செல்லம்மாளும், கல்பனாவை வீட்டுக்குள் வைத்து வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பினர். இறந்த கல்பனா கர்ப்பிணி. கொலையாளி சங்கரநாராயணன், தச்சநல்லூர், கிராம தலையாரி. வேறு ஜாதியை சேர்ந்தவர். அவரது மகள் காவேரியை தலித் வகுப்பை சேர்ந்த விஸ்வநாதன் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட சாதி ஆணவத்தில் நடந்து முடிந்ததுதான் இக்கொலை.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கரநாராயணன், செல்லம் மாள் ஆகியோரைக் கைதுசெய்தனர். நெல்லை இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்ற இவ்வழக்கில் நீதிபதி அப்துல்காதர் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிவாஜியை ஆறு வருடங்களாக காதலித்து வந்தார். திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு இருவரும் வெளியேறினார்கள். இதனையறிந்த ஆதிக்கச் சாதியினர் ஒரு கட்டத்தில் சிவாஜியைக் கடத்தி கொலை செய்து சாதி திமிரை தீர்த்துக் கொண்டனர். இந்தச் சம்பவம் நடந்தது 2008 ஆம் ஆண்டு. இப்போது லெட்சுமியும் அவருடைய எட்டு வயது மகனும் சிவாஜி வீட்டிலேயே வசிக்கிறார்கள். சிவாஜியின் அம்மாவும் தம்பிகளும்தான் லெட்சுமிக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

கண்ணீரில் முகம் கழுவியபடி பேசிய லட்சுமி “மூணு பொண்ணுங்க, மூணு பசங்கனு எங்க வீட்ல மொத்தம் ஆறு புள்ளைங்க. நான் சின்னப்புள்ளயா இருக்கும் போதே எங்க அப்பா, அம்மா இறந்துட்டாங்க. அண்ணன், அக்காங்கதான் என்ன வளத்தாங்க. அம்மாபேட்டையில நான் ஸ்கூலுக்குப் போய்க்கிட்டு இருந்தப்பத்தான் பஸ்ல சிவாஜிய பாத்தேன். அவரு அப்ப ஐ.டி.ஐ படிச்சிக்கிட்டு இருந்தார். ஆறு வருஷம் லவ் பண்ணுனோம். அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு உறுதியா இருந்தேன். அதனால ரெண்டு பேரும் ஒண்ணா இருந்துட்டோம். வயித்துல குழந்த வளர ஆரம்பிச்சிடுச்சு. நாலு மாசம். வீட்ல கண்டுபுடிச்சிட்டாங்க.

‘அவன் என்ன சாதி... நாம என்ன சாதி? அவன மறந்துடு’னு அடிச்சு துன்புறுத்துனாங்க. ஒரு கட்டத்துல திண்டுக்கல்ல அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வீட்டுல போய் தங்கினோம். நாலு மாசம் அங்க நிம்மதியா இருந்தோம். ஆனா, எங்க அண்ணனுங்க எப்படியோ கண்டுபுடிச்சுகிட்டு வந்துட்டாங்க. அன்னிக்கு காலையில ஆறரை மணி இருக்கும். கதவு தட்டுற சத்தம் கேட்டு, நான் எழுந்திருச்சு திறக்கப் போனேன். ‘நீ போக வேண்டாம்... நான் பார்க்கிறேன்’னு அவரு போய் கதவத் தொறந்தாரு. வெளியில நின்ன ரெண்டு, மூணு பேரு அவரு மூஞ்சியில துணியப்போட்டு தூக்கிகிட்டுப் போயிட்டாங்க. கொஞ்ச நேரத்துல எங்க அண்ணனுங்க வந்தாங்க. நான் ஓடி ஒளிஞ்சுக்கிட்டேன். அப்புறம் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர், என்னை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டு போனாரு. `சிவாஜியை கல்லணையில வெச்சி கொன்னுட்டாங்க'னு ஸ்டேஷன்ல இருக்கும்போது போன் வந்துச்சு. என் உயிரையே உருவிப்போட்ட மாதிரி இருந்துச்சு. அப்போ வயித்துல எட்டு மாச சிசுவா இருந்தான் இவன்...’’ என மரணத்தின் வலியோடு தன் காதலன் மரணத்தின் அவஸ்தையை பரிமாறினார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த பரமசிவம், மாரியம்மாளின் மகன் முத்துக்குமார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரும்,  ஒட்டன்சத்திரம், விருப்பாச்சியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்திருக்கிறார்கள். இதனை அறிந்து ஆத்திரமடைந்த மல்லிகாவின் பெற்றோர்,  முத்துக்குமாரைக் கொலை செய்து விட்டார்கள். கொலைகாரர் களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் முத்துக்குமாரின் பெற்றோர். முத்துக்குமாரின் அம்மா மாரியம்மாள் கூறும்போது, “எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. நாங்க கூலி வேலை செஞ்சு ரேஷன் அரிசி சாப்புட்டுத்தான் புள்ளைய படிக்க வெச்சோம். முத்துகுமாரும் எம்.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு, பி.எட் பண்ணி கிட்டு இருந்துச்சு. பேங்க் பரீட்சை எழுதி பாஸாகிட்டதா மெசேஜெல்லாம் வந்துருந்துச்சு. அன்னிக்கு சாயங்காலம்தான் அந்தப் புள்ளைக்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘எங்கக்கூட படிக்கிற பொண்ணுக்குப் பொறந்தநாளு. கூடப் படிச்ச ஃப்ரெண்ட்ஸுங்க எல்லாம் நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போறோம்’னு சொல்லிச்சு என் புள்ள. ஃப்ரெண்டு சுரேஷ்கூடத்தான் போறேன்னு சொல்லிச்சு.
மறுநாள் ரொம்ப நேரமா ஆளைக் காணோமேனு போன் பண்ணினப்போ சுவிட்ச் ஆஃப்னு வந்துச்சு. சுரேஷுக்கு போன் பண்ணுனேன். ‘அவனை முன்னாடியே அனுப்பி விட்டுட் டேம்மா’னு சொன்னான். சுரேஷுக்கு மறுபடியும் மறுபடியும் போன் பண்ண, அவன் மாத்தி மாத்தி சொன்னான். ‘கண்ணு... என் மகன் எங்க கண்ணு?’னு அவன்கிட்ட அழ ஆரம்பிச்சுட்டேன். அப்பதான் அவன், ‘நீங்களும் அப்பாவும் மட்டும் விருப்பாச்சிக்கு கிளம்பி வாங்கம்மா’னு சொன்னான். எங்களுக்கு ஒண்ணுமே புரியல. பதறி அடிச்சிகிட்டு கார் எடுத்துகிட்டு ஓடுனோம்.

அங்க போய் பார்த்தா... எம்புள்ள கிணத்துக்குள்ள மிதக்குது!’’ என்னதான் நடந்ததுன்னு கேட்டா, ‘கோழி திருட வந்தான், துரத்துனோம், தவறி கிணத்துல விழுந்துட்டான்’னு ஊரே சேர்ந்து அப்பட்டமா பொய் சொன்னாங்க. அதுக்குப் பொறகுதான் என் புள்ளையும் அந்தப் பொண்ணும் விரும்பின வெவரமே எங்களுக்குத் தெரியவந்துச்சு. அதுக்கு அவுங்க வீட்ல மாப்பிள்ளை பாத்துருக்காங்க. அப்பதான் முத்துக்குமாரை காதலிக்கிறதா அது வீட்டுல சொல்லியிருக்கு. நாங்க தாழ்த்தப்பட்ட சாதிங்கிறதால, பிளான் பண்ணி, முத்துக்குமாரை விருப்பாச்சிக்கு வரவெச்சு, கிணத்துல தள்ளி கொன்னுருக்காங்க. அவளையும் மறைச்சுட்டாங்க” என்று ரத்தக்கதறலைக் கொட்டித் தீர்த்தார். தலித்தாகப் பிறந்தது குற்றமா என்கிற வேதனையே இப்போதுவதை நம் இருதயத்தை இயங்க விடாமல் நசுக்குகிறது.

2014ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த விமலாதேவியும், திலிப்குமாரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களை வலுக்கட்டாயமாகப் பிரித்த உசிலம்பட்டி மற்றும் வத்தலக்குண்டு காவல்துறையினர் விமலாதேவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் சில தினங்களில் விமலா தேவி சாதி ஆணவக்கொலை செய்யப்பட்டார்.

அவரது உடல் உருத்தெரியாமல் எரிக்கப் பட்டது.
திலிப்குமாருக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால், அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி, ரிட் மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கில் நீதிபதி இராம சுப்பிரமணியம், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டதோடு, காவல்துறை செய்த தவறுகள் குறித்து ஐ.ஜி. விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஐ.ஜி.யும் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில், விமலாதேவி தொடர்பான வழக்கு, நீதிபதி இராமசுப்பிரமணியம் தலைமையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பல அதிரடியான உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்தார்.
விமலாதேவி வழக்கைப் பொறுத்தவரை, இதில் தவறு செய்த காவல் ஆய்வாளர்கள் ஆனந்தி, ராணி உள்பட 5 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்த வேண்டும்; 24 மணி நேரமும் செயல்படக் கூடிய இலவச தொலைபேசி எண் (ஹெல்ப் லைன்) அறிவித்திட வேண்டும்; புகார்களை இணையம் வழியாகவும் பதிவு செய்யும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். நேரடியாக வழங்கப்படும்

புகார்களைப் பெற்றுக் கொள்ளும் காவல்நிலையம், மேற்படி பிரச்சினை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.
இதைப் பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்; பெற்றோர்கள் மற்றும் தம்பதியினர் மற்றும் காதலர்களை அச்சுறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேவைப்படும் வழக்குகளில் பெற்றோருக்கு சட்டத்தை எடுத்துரைப்பதற்கான ஏற்பாடும், அச்சுறுத்தலில் உள்ள சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியர் மற்றும் காதலர்கள் தங்குவதற்கு மாவட்டங்கள் தோறும் குறுகிய கால காப்பக வசதியும் செய்து தரப்பட வேண்டும்; இதற்கான நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்திட வேண்டும் என்று பல அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி இராமசுப்பிரமணியம், மேற்கண்ட அனைத்து உத்தரவுகளையும் மூன்று மாத காலத்திற்குள் செயல்படுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசுக்குக்கெடு விதித்தார். புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக வலியுறுத்தப்பட்ட இந்த உத்தரவுகளும் அரசாலும், ஆட்சி யாளர் களாலும் தீண்டாப் பொருளாகவே புறக்கணிக்கப்பட்டு கிடப்பில் போடப் பட்டது.

கடந்த ஜூலை 2015இல், கோகுல்ராஜ் கொலை நடந்த போதே, தேசிய எஸ்சி  நல ஆணையம், தலித்துகள் மீதான வன் முறையைத் தடுக்க சில பரிந்துரைகளை தமிழக அரசிற்கு அளித்தது. அதாவது, தலித்துகளுக்கு எதிரான வன்முறை நடக்கும் மாநிலங்களில், தமிழ்நாடு முதல் 5 இடங்களில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று. காவல்துறை நிர்வாகம், இந்த வன்முறைகளைத் தடுக்க தக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என ஆணையம் அந்தப் பரிந்துரைகளில் தமிழக அரசிடம் கூறியிருந்தது.

மேலும் அது, “தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டிக் கப்படும் விகிதம் வெறும் 10 சதவீதமாகவே உள்ளது. இது தேசிய அளவிலான சராசரி 30 சதவீதத்தைவிடக் குறைவாகவே உள்ளது. தமிழக அரசு, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை கிடைத்து, தண்டனைக்கான விகிதம் கூடுவதற்கு, போதிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசியல் சூழலில் எவ்வித நகர்வும் இல்லாமல் அமைதியைச் சுமப்பது சாதிவெறி நிகழ்வுகளை முறியடிப்பதற்கு முயற்சிசெய்ய விரும்பவில்லை என்பதையே உணர்த்துகிறது. அதுவே அதிர்ச்சியூட்டுகிறது.

இதுதவிர, தமிழகத்தில், எஸ்சி  ஆணையம் இல்லை. ஆதிதிராவிடர் நலத்துறை என்ற அரசு துறையே உள்ளது. இதன் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. எஸ்சி  ஆணையம், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பழமையான ஆணையம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆணையத்தை உருவாக்க அரசு தயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற ஆணையங்களை எல்லாம் அரசு உருவாக்கி வைத்துள்ளது. இது தலித்துகள் மீதான அரசின் வெறுப்பையே வெளிப்படுத்துகிறது. கடந்த 2014 இல் சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசிடம் எஸ்சி ஆணையத்தை உருவாக்கும்படி கூறியது. ஆனால் தமிழக அரசு அதனைப் பின்பற்றவில்லை.

தேசிய எஸ்சி ஆணைய கணக்குப்படி, தமிழகத்தில் 20 சதவீதம் எஸ்சி மக்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், ஒரு ஆணையத்தை உருவாக்க தமிழக அரசு தயாராக இல்லை. சட்டமன்றத்தில் இதைப் பற்றி உறுப்பினர்கள் சிலர் பேசும் போதெல்லாம், நலத்திட்டங்களைப் பற்றிப் பேசி கவனத்தை மடைமாற்றிவிடுகிறார்கள் ஆட்சியாளர்கள். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் நிலவும் ஆணவக் கொலைகளைப் பற்றி பிரச்சினை எழும்பியபோது, அப்போதைய நிதியமைச்சர், பன்னீர் செல்வம் ஆணவக் கொலைகள் தமிழகத்தில் நடைபெறவில்லை எனவும் தனிச்சட்டம் தேவையில்லை எனவும் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பதிலளித்தார்.

2016ஆம் ஆண்டு நடந்த திருநாள் கொண்டச்சேரிப் போராட்டத்தில் தலித்துகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் ஆணை வழங்கியது. ஆனால், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் அந்த ஆணையை அவமதிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்த மறுத்தது. இப்படி உயர்நீதி மன்ற மாண்பைக் கொச்சைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பொதுப்பாதை உரிமையை முழங்கிய தலித்துகளை காவல்துறையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தி சாதிவெறியர்களாய் தங்களையும் அடையாளப்படுத்திக்கொண்டது.

எளிய மக்களுக்கான நீதி அரசு எந்திரங் களால் இவ்வாறு நசுக்கப்படும் அவலம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் 2013 சூலை 4 அன்று பிணமாக மீட்கப்பட்ட தருமபுரி இளவரசன் இறப்பைத் தற்கொலையெனக் கூறி 21-2-2017 அன்று வழக்கையே முடித்தது சென்னை உயர்நீதிமன்றம். சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் இம்முடிவை அறிவித்த தாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டது நீதித்துறை. சனநாயகமற்ற இதுபோன்ற நகர்வுகள் நம் மனசாட்சியை நிலை குலையச் செய்கிறது.

இப்படி ஆளும் வர்க்கமும், நீதித்துறையும் தலித்துகளை சாதியப் பார்வையோடு அணுகுகிற ஓரவஞ்சனைப் போக்குகள் அப்பட்டமாய் தென்படுவதால் ஆணவப் படுகொலைகள் அதிகரிக்கிறது. சட்டம் மற்றும் தண்டனை சார்ந்த அச்சம் முற்றிலும் ஆதிக்கச்சாதியினரிடம் இல்லை என்பதையே தொடர் படு கொலைகள் நிருபிக்கிறது. தலித் படு கொலைகள், சேரி தாக்குதல்கள் குறித்து ஓய்வுப்பெற்ற நீதிபதிகளைக் கொண்டு நியமிக்கப்படும் ஆணையங்கள் கூட ஆட்சியாளர்களைத் திருப்திப் படுத்துகிற ஒன்றாக வெளிப்படுவதை அதன் அறிக்கைகள் மூலம் அறியமுடிகிறது. கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட எந்த ஆணையமும் தலித் இழப்புகளையும் வலிகளையும் பற்றி பேசியதில்லை. மாறாக ஆட்சி யாளர்களின் செயல்களை நியாயப் படுத்தும் குரலாக ஓங்கி ஒலித்தன. சமீபத்தில் சாதி ஆணவத்தினால் கொடூரமாகச் சிதைத்து படுகொலை செய்யப்பட்டார் அரியலூர் நந்தினி. நாடக் காதல் என்று சாதி வெறுப்பைத் தூவும் இராமதாசின் வன்னிய இளைஞனால் நடந்த போலிக்காதல் படுகொலையே இது. புழுக்கள் நெளிந்த உடலாய் கிணற்றுக்குள் கிடந்த நந்தினியின் அழுகிய உடல் 15.01.2017 அன்று மீட்கப்பட்டது. இருப்பினும் காவல்துறையின் அலட்சியப்போக்கே நந்தினியின் உயிரைப் பறித்தது. இந்து முன்னணியைச் சார்ந்த மணிகண்டன் தான் நந்தினியை அழைத்துக்கொண்டு போனான் என புகார் கொடுக்கப்பட்டும் முறையான விசாரணையை மேற் கொள்ளாமல் அலைகழித்துள்ளது காவல்துறை. தொடர் வலியுறுத்தலால் ஒருமுறை மணிகண்டனையும் அழைத்து  மேலோட்டமாக விசாரித்து வீட்டிற்கு அனுப்பிவிடுகிறது. பிறகு தான் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறது நந்தியின் உடல். இது தான் இன்றைய சாதியப்போக்கு.

இந்த வலிகளை எல்லாம் அறுத்து எறிவதற்கு ஆணவக்கொலைக்குத் தனிச் சட்டமும் தமிழகத்தில் தனி எஸ்.சி. ஆணையமும் உருவாக்கப்பட வேண்டும் என்பது நமது முதன்மையான கோரிக்கையாக இருந்தாலும் அது மட்டுமே நம்மைப் பாதுகாத்திடாது. ஒடுக்கப் பட்ட மக்கள் அமைப்பாவதும் அரசியல் சக்தியாய் அணிதிரள்வதும் தான் சாதியச் சமூகத்தை அச்சுறுத்தும் நம்மையும் ரத்தச் சிதறல்களில் இருந்து மீட்டெடுக்க இயலும். அடுத்த படுகொலை விழுவதற்குள் ஆயத்தமாவோம். சாதியக் கொலைகளைத் தடுப்பதற்கு மட்டுமல்ல, சாதி வெறியர்களை எதிர்ப்பதற்கும்...

நமது தமிழ்மண்/ மார்ச் 2017

உடுமலை சங்கரின் படுகொலைத் தீர்ப்பு: நீதியின் புனிதம்

உடுமலை சங்கரின் படுகொலைத் தீர்ப்பு:

 நீதியின் புனிதம் 


பூவிழியன்



“எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதி கிடைக்க ஒன்னே முக்கால் வருடங்களாகக் காத்துக்கிடந்தேன். இந்தத் தீர்ப்பு நீதித்துறைமீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது.” என்கிறது கௌசல்யாவின் காயக்குரல்.  “சங்கரின் படுகொலையால் நாங்கள் பெருந்துயரமடைந்துள்ளோம். கவுரவக்கொலையின் கடைசிப்பலி என் மகனாக இருக்கட்டும். அரசாங்கம் இத்தகைய கொலைகளுக்கு முடிவுகட்ட வேண்டும்” என வலிநிறைந்த வார்த்தைகளால் கொட்டித்தீர்க்கிறார் உடுமலை சங்கரின் தந்தை வேலுச்சாமி. நீதியரசர் அலமேலு நடராசன் 12.12.2017 அன்று வழங்கியுள்ள ஆணவக்கொலைக்கு எதிரான இத்தீர்ப்புதான் சனநாயகத்தின் திசைநோக்கி நாம் பயணப்படுவதற்கான வெளிச்சத்தை விதைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், நிகழ்காலச்சூழலில் நீதிமன்றத்தின்மீது எளிய மக்களுக்கு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. சாதிய மிருகங்களின் ஈரக்குலையை மரணபயம் இறுகக் கவ்வியிருக்கிறது. சாதிவெறுப்பு அரசியலின் முகத்தில் அமிலம் வீசப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மேலாக கௌசல்யாவின் சாதி எதிர்ப்புப் போர்க்களத்தில் நீதி பூத்திருக்கிறது. ஆம், இனி  சாதி மறுப்புக் காதலில் அமைதி முளைக்கும்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(22). பொறியியல் கல்லூரி மாணவரான இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திண்டுக்கல் மாவட்டம், பழநி திருநகரைச் சேர்ந்த சின்னச்சாமி மகள் கவுசல்யா(19) என்ற சாதிஇந்துவைக் காதலித்து வந்தார். படுகொலைக்கு 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் திருமணத்துக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அவ்வப்போது பேச்சுவார்த்தைமூலம் பெண்ணைத் திரும்ப அழைத்துச்செல்ல கௌசல்யாவின் குடும்பத்தினர் முயன்றும் தோல்வியே இறுதியானதாக மாறியது. சாதிவெறியின் உந்துதலால் மகளைப் பிரிக்கப்போராடிய அவர்களுக்கு இது மேலும் கோபத்தைக் கொப்பளிக்க வைத்தது. இனி, தாழ்த்தப்பட்டவனோடு தன் மகள் வாழக்கூடாது என முடிவெடுத்த சின்னச்சாமி கூலிப்படையின் மூலம் சங்கரைப் படுகொலை செய்ய எண்ணினார்.

இந்நிலையில், கல்லூரியின் கடைசிநாளின் பிரியாவிடை நிகழ்வுக்காகப் புதுத்துணி எடுக்க 13.3.2016 அன்று உடுமலைப்பேட்டைக்கு சங்கரும் கௌசல்யாவும் சென்றனர். மத்தியப் பேருந்துநிலையம் எதிரில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கவுசல்யாவின் தந்தை கொடுத்து அனுப்பிய இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர் இருவரையும் பட்டப்பகலில், பொதுமக்கள் பார்வையின் நடுவே அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர். சாலை ரத்தத்தால் நனைய, எவ்விதப் பதற்றமுமின்றி தப்பினர் கொலையாளிகள். ரத்தத்தின் ஈரம் உலர்வதற்குள் ஓய்ந்தது சங்கரின் உயிர்ஓசை. அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் திரைப்படத்தைத் தோல்வியால் நிறைக்கும் அளவில் அமைந்திருந்தன. உலகின் அசைவையே ஒரு நிமிடம் உறைந்துபோக வைத்தது இது. தன் கண் முன்னே கதறக் கதறக் காதலனை வெட்டுவதை விரும்பாத கௌசல்யா சங்கரைப் பாதுகாக்க முயன்றபோது அவருக்கும் தலையிலே வெட்டுவிழுந்தது. இக்கொடுங்காயத்துடன் கவுசல்யா கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது தலையில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்கு 36 தையல்கள் போடப்பட்டன. தீவிர சிகிச்சைக்குப் பிறகு பெற்றோருடன் செல்ல மறுத்து, சங்கரின் குடும்பத்தாருடன் வசிக்க விரும்பி புறப்பட்டுச்சென்றது அவரின் உண்மைக் காதலையும் துணிச்சலையும் மீண்டுமொருமுறை மெய்ப்பித்தது.

வேலுச்சாமியின் மனைவி செல்வநாயகி மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். இந்நிலையில் 3 பிள்ளைகளையும் விவசாயக்கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தார். தனது மகன் சங்கர் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக வருவான், தன் குடும்ப வறுமையைத் துடைப்பான் எனக் காத்திருந்த நிலையில் அவருக்கு மகனின் மரணச்செய்தியும் வலியின் கொடுமையும் தொண்டையை இறுகக் கவ்வியது. இதனையடுத்துதான் ஆணவப்படுகொலையையும் சாதியின் கொடூரத்தையும் புரியவைத்தது சமூகம்.

இந்நிலையில், உடுமலைப்பேட்டைப் போலீஸார் இப்படுகொலைகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். பின், உடுமலை துணைக்காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல இடங்களுக்குத் தனிப்படைகள் விரைந்தன. கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் 14.03.2016 அன்று சரணடைந்தார். இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், பழநி மணிகண்டன்(25), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன்(31), திண்டுக்கல்லைச் சேர்ந்த மைக்கேல்(எ)மதன்(25), செல்வக்குமார்(25), பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(39) ஆகிய கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். பிறகு, கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, கௌசல்யாவின் மாமா பாண்டித்துரை, கலை தமிழ்வாணன், கொலையாளிகளுக்குத் தம்பதியை அடையாளம் காட்டிய தனராஜ், ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள்மீது 1,100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. வழக்கும் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், குற்றவாளிகள் தரப்பில் இதுவரை 58 முறை ஜாமின் கேட்டு மனு செய்து இருந்தனர். அத்தனைமுறைகளும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்குப்பிறகு 12.12.2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமிக்கு இரட்டைத் தூக்குத்தண்டனை மற்றும் ரூ.3லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை என வலியுறுத்தப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்த ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஆறாவது குற்றவாளியான செல்வகுமாருக்கும் தூக்குத்தண்டனை.  சின்னச்சாமியின் நண்பர் ஜெகதீசனுக்கு மரண தண்டனை. மைக்கேல், கலை தமிழ்வாணன், மதன் ஆகியோருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.  ஸ்டீபன்  தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள்  தண்டனை வழங்கப்பட்டது. கவுசல்யாவின் தந்தையைத்  தவிர மற்ற அனைவரும் கூலிப்படையாக செயல்பட்டவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டது.

கௌசல்யாவின் துணிச்சலான தொடர்போராட்டத்திற்கு ஆதரவாகவும் நீதி கிடைப்பதற்கும் வலிமை சேர்த்தவர்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சி.பி.எம், சி.பி.ஐ., கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோரை நினைவுகூர்ந்துள்ளார் எவிடென்ஸ் கதிர். மேலும், ‘அதை எல்லாம் மறக்க மாட்டேன். இது கூட்டுமுயற்சி. அதனால்தான் நீதி வசப்பட்டு இருக்கிறது. விசாரணை அதிகாரி, அரசு குற்ற வழக்கறிஞர்கள் பணிகள் பாராட்டப் படவேண்டியவை. அன்பு மகள் கவுசல்யா நீதியின் அடையாளம். இந்த சின்ன வயதில் நீதிக்காக உறவுகளை இழக்கின்ற செயலில் இறங்கிய அந்த மன உறுதியைக் கண்டு கண்ணீர் வருகிறது’ என தன் நெகிழ்ச்சி பகிர்ந்துள்ளார் அவர்.

தனது கணவன் சங்கர் வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்துஎ  கவுசல்யா குறிப்பிடும்போது: “எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதி கிடைக்க ஒன்னே முக்கால் வருடங்களாகக் காத்துக்கிடந்தேன். இந்தத் தீர்ப்பு  நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது. வழக்கு முடியும் வரை நீதிமன்றக்காவலில் வைத்திருந்தது அரிதினும் அரிது. சாதிய கவுரவக்கொலை வழக்கிற்கு இந்தத் தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும். தூக்குத்தண்டனை பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூக்குத்தண்டனையில் எனது கருத்து வேறாக இருப்பினும் தீர்ப்பு சாதிவெறியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக மேல்முறையீடு தொடர்வேன். தண்டனை கிடைத்தவர்கள் மேல்முறையீடு செய்தால், அதனை எதிர்த்து வழக்காடுவேன். 3 பேரின் விடுதலையை எதிர்த்து இறுதிவரை சட்டரீதியாகப் போராடுவேன். சங்கருக்கு உரிய நீதி இந்த வழக்கோடு முடிந்துவிடவில்லை. தனிச்சட்டம் படைப்பதுதான் இந்த வழக்கிற்குத் தீர்வாக அமையும். எனக்கும் சங்கரது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வன்மத்தை அசைபோடும் சூழலில், கடந்த 13.05.2016 அன்று திருநெல்வேலியில் கௌரவக்கொலை செய்யப்பட்டார் தலித் வகுப்பைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் கல்பனா. தனது அண்ணன் மாற்றுச்சமூகப் பெண்ணைக் காதல் திருமணம் செய்தார் என்பதற்காகப் பெண்ணின் பெற்றோர் இவரைப் படுகொலை செய்து சாதிவெறியைத் தீர்த்தனர். இந்நிலையில் இந்த ஆணவக்கொலை நிகழ்ந்த எட்டே மாதங்களில் 10.01.2017 அன்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் சாதி இந்துக்களான பெண்ணின் பெற்றோருக்குத் தூக்குத்தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டினார் நீதியரசர் அப்துல்காதர். இதுதான் தமிழகத்தில் ஆணவக்கொலைக்கான முதல் தூக்குத்தண்டனை. ஆனால் இதில் காதலர்கள் படுகொலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில்மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 81 க்கும் அதிகமான சாதி ஆணவக்கொலைகள் நடந்திருப்பதாகக் கூறுகிறது புள்ளிவிபரம். ஒரு ஆண்டில் இருபது கௌரவக்கொலைகள் என்பது பதிவான வழக்குகளின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், வெளியில் தெரியாமல் நடக்கும் கௌரவக்கொலைகள் ஏராளம். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் பெண்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதில் பாதிக்கு மேல் காதல் சம்பந்தப்பட்ட கௌரவக்கொலைகளே. இதேபோல் ஆண்டுக்கு 700 பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதிலும் பாதிக்குமேல் கௌரவத் தற்கொலைகள்தான். தலித் இளைஞர்களைக் காதலித்த குற்றத்துக்காகப் பெரும்பாலும் சாதி இந்துப்பெண்கள்தான் கௌரவக்கொலை செய்யப்படுகிறார்கள் என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது கௌரவ கொலைகள் தொடர்பாக தனியாக சட்டம் இயற்றப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், சட்டம் வந்தபாடில்லை. அதிமுக அரசோ தமிழகத்தில் கௌரவக்கொலைகளே நடைபெறவில்லை என்று உளறிக்கொண்டிருக்கின்றது. வட மாநிலங்களில் ’காப்’ பஞ்சாயத்துகள்தான் கௌரவக்கொலைகளுக்குக் காரணமாக இருக்கின்றன. அதேபோல் தமிழகத்தில் சாதிப் பஞ்சாயத்துகள் கௌரவக் கொலைகளும் தற்கொலைகளும் நடப்பதற்கு உந்துதலாக இருக்கின்றன. கௌரவக்கொலைக்கு எதிராக ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளைத் தேசிய பெண்கள் ஆணையமும் தேசிய சட்ட ஆணையமும் 2011லேயே மத்திய அரசுக்கு அறிக்கையாக அளித்திருக்கின்றன. ஆனாலும், மத்திய அரசு இந்த விஷயத்தில் மௌனமாகவே இருக்கிறது.

2010ஆம் ஆண்டில் உலகில் 5,000 ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த ஆணவக்கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெறுவதாகவும் கூறுகிறது ஒரு புள்ளி விபரம்.

மேலும், தமிழகத்தில் கடந்த ஜனவரி 2008ம் ஆண்டிலிருந்து ஜூன் 2010 வரைக்குமான காலகட்டத்தில் 22 மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 1,971 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 90 சதவிகிதத்தினர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இந்தத் தற்கொலைகளில் சாதி ஆணவக்கொலைகளும் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற ஆணவக்கொலைகளை தற்கொலைகள் என்று மூடிமறைப்பதில் குடும்ப உறுப்பினர்கள், ஊர் மக்கள் தவிர காவல்துறைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது.

சாதி இப்படி ஆணவத்தைப் படுகொலையாக நீட்டிக்கும்போது மரண தண்டனையில் உடன்பாடில்லாத நாமும் நீதிக்காக, சாதிவெறியின் அத்துமீறலை நசுக்குவதற்காக வலிகளின் பக்கம் நிற்பது தவிர்க்க முடியாததாகிறது. அதுமட்டுமல்லாமல், எளிய மக்களின் சனநாயகம் தன் பயணத்தை நம்பிக்கையுடன் நகர்த்துவதற்கு தூக்குத்தண்டனை போன்ற புனிதமான நீதிகள் தேவை என்பதை சாதியின் கொடூரங்களும் கொலைகளும் நமக்கு உணர்த்துகிறது. அதேவேளையில், மேல்முறையீடு உள்ளிட்ட வார்த்தைகள் நீதியின் நம்பிக்கையைச் சிதைப்பதாக அச்சுறுத்தினாலும் சாதிவெறியர்கள் இதுபோன்ற உச்சபட்ச தண்டனையில் இருந்து விடுபடாமல் இருக்க சனநாயகத்தின்மீது பற்றுள்ள ஒவ்வொருவரும் போராட்டக்களத்தில் பங்கேற்கவேண்டும். இன்றைய தீர்ப்பைக் கொண்டாடுவதற்காக மட்டுமல்ல, நாளைய படுகொலையைத் தடுப்பதற்கும்!

நமது தமிழ்மண் / டிசம்பர் 2017

Saturday, 25 November 2017

சேரிகள் கழிவுத் தொட்டிகள் அல்ல!

சேரிகள் கழிவுத் தொட்டிகள் அல்ல!


பூவிழியன்


சேரி வாழ்க்கை-வாழ்வதற்காக அல்ல; போராடுவதற்காகத்தான் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி கிளம்பிய போராட்டம்தான் சீர்காழி வட்டம் திட்டை ஊராட்சியில் மக்களை எழுச்சி கொள்ள வைத்திருக்கிறது. போராளி கே.பி.எஸ். மணி பிறந்த மண் சீர்காழி. இது, நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இருபத்தி நான்கு வார்டுகளைக் கொண்ட சீர்காழி நகராட்சிக்குள் சுமார் 12,000 குடும்பங்கள் உள்ளன. ‘சீர்காழி டவுன்ல உள்ள 36,000 மக்களோட கழிவ எல்லாம் கொண்டு வந்து எங்கச் சேரியில தான் உடனுமா? ஊருல மத்தவங்க வாழுற இடத்துல எல்லாம் விட்டா என்ன?’ என்கிற கேள்வியோடு இந்தப் போராட்டம் கிளம்பியுள்ளது.

பாதாள சாக்கடைத் திட்டத்தை அமைப் பதற்கு சீர்காழி நகராட்சி கடந்த ஆண்டி லிருந்து முயற்சிகள் எடுத்தாலும், தற்போது தான் அதனை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. மக்கள் தொகையின் பெருக்கத்திற்கேற்ப, நகரத்தின் மேம்பாடும் உயர்ந்து கொண்டே செல்ல, சீர்காழி நகராட்சியை அழகுபடுத்தும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது. அதாவது, சோடியம் விளக்குகளை வரிசையாக அமைப்பது, குப்பைகளை ஓரிடத்தில் சேகரிப்பது, மழைநீர் ஓடுவதற்கென்று கான்கிரீட் அமைப்பது போன்றவை. இதில் ஒன்றுதான் திறந்தவெளியில் ஓடும் சாக்கடையை, பாதாள சாக்கடைத் திட்டமாக மாற்றுவது.

நோய் பரவாமல் தடுப்பது, கழிவு நீர் பாதையில் இருந்து வழிந்து சாலையில் ஓடுவதைத் தடுப்பது, கழிவு நீர் வெளியேறு வதில் உள்ள சிக்கல் எனப் பல காரணங்களைக் கொண்டுதான் பாதாள சாக்கடைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, முக்கிய சாலைகளின் நடுவே வாய்க்கால் போன்று சுமார் பத்து அடி ஆழத்திற்கு வெட்டி, கான்கிரீட்டால் மூடிவிடுவார்கள். இந்தப் பெரிய சாக்கடைப் பாதைக்குள் தெருவிற்குள் இருந்து வரும் கிளை சாக்கடைப் பாதைகள் இணையும். இறுதியாக, சாக்கடை எல்லாம் சுத்திகரிக்கப்பட்டு பெரிய பெரிய தொட்டிகளில் சேகரிக்கப்படும்.

பாதாள சாக்கடைக்கான தொட்டிகள் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்ட திட்டை ஊராட்சியில் உள்ள மக்களில் 80 சதவிகிதம் பேர் தலித்துகள். பிற சாதியினர் 20 சதவிகிதம். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் எல்லாம் சுமார் அரை கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில்தான் இருக் கின்றன. குளங்கரை, ஆறுமுகவெளி, வடக்குவெளி, மேல சிவனார் வளாகம், புளியந்தோப்பு, திட்டை கன்னிக்கோயில் தெரு என முழுவதும் தலித்துகள் வாழ்கிற பகுதிகளையே இக்கழிவுகளைக் கொட்ட தேர்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து சம்பத் (முன்னாள் திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கவிதாவின் கணவர்) கூறும்போது, ‘எங்க ஊராட்சியில யானைக்கால் போன்ற கொடூரமான நோய் யாருக்குமே கிடையாது. இங்கு அந்தத் தொட்டி வந்தால் எல்லா நோயும் வரும். இன்னும் குறிப்பாக சொன்னா, இங்க அதிகமாக தாழ்த்தப்பட்டவங்கதான் இருக்காங்க. அதனால் தொட்டிகளை இங்கக் கட்டினா யாரும் கண்டுகொள்ள மாட்டாங்கன்னுதான் செய்யுறாங்க’ என்றார்.

கழுமலையாறு பாசன சங்கத் தலைவர் கோவி. நடராசன், ‘பாதாள சாக்கடைத் தொட்டிகள் சேரிகளில் அமைக்கப்படுவதை, கடுமையாக எதிர்க்கிறோம். இதனால் குடி தண்ணீர், சாகுபடி போன்றவை பாதிக்கப்படும்’ என்றார். இது தவிர, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புதுத்துறை, வெள்ளப் பள்ளம், காரைமேடு போன்ற தலித் கிராமங்களும் இந்தப் பாதிப்பை சுமக்க வாய்ப்புள்ளது. சீர்காழி நகரத்தையொட்டி தொட்டி கட்டினால் செலவு குறையும் என திட்டமிட்டவர்கள், பெரும்பான்மையான தலித் மக்களின் வாழ்நிலையைக் கணக்கில் கொள்ளவில்லை.

மக்கள் வாழ்விற்கு தொல்லையில்லாத இடத்தைத்தான் தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், பணத்தைவிட தலித் உயிர்கள் மதிப்பு மிக்கவை. மேடான இடத்தைத் தேர்வு செய்வதில் எந்தச் சிக்கலுமில்லை. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப அதிக அழுத்தம் உள்ள பம்புகளைக் கொண்டு சாக்கடையைத் தொட்டிக்கு அனுப்பலாம் என்கிற முடிவுக்கு அதிகாரிகளும், அரசும் வர வேண்டும். இல்லையெனில், கழிவுகள் தங்கள் பகுதியில் கொட்டப்படுவதற்கு எதிராக தலித்துகள் போராடுவதைத் தவிர்க்க முடியாது.

தலித் முரசு
ஜூன் 2007

இந்தியாவில் மட்டும் ‘ஜாதி கிரிக்கெட்

இந்தியாவில் மட்டும் ‘ஜாதி கிரிக்கெட்


பூவிழியன்


கடலூர் மாவட்டம் சேடப்பாளையம் கிராமத்தில் கிரிக்கெட் தொடர்பாக நடைபெற்ற சாதிவெறித் தாக்குதலில் சிவா என்ற இளைஞர், வன்னியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சனவரி மாதத்தில் நிகழ்ந்த இப்படுகொலையைத் தொடர்ந்து, இதே மாவட்டத்தில் கிரிக்கெட்டால் இன்னொரு படுகொலை நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் கீழ் அனுவம்பட்டு கிராமம். கோடை விடுமுறையின்போது இளைஞர்கள் கிரிக்கெட், கபாடி போன்ற விளையாட்டுகளை நடத்துவது இயல்பு. இக்கிராம தலித் இளைஞர்கள் சென்ற ஆண்டு ‘யூத் குரூப்' என்கிற பெயரில் கிரிக்கெட் போட்டியை நடத்தத் தொடங்கினர். இந்த ஆண்டின் போட்டி, சாதிவெறித் தாக்குதலுக்கான விளையாட்டாக கொடூரம் அடைந்தது. 29.5.07 அன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பல ஊர்களிலும் உள்ள பல்வேறு அணிகளும் போட்டியில் களமிறங்கினர்.

29.5.07 அன்று மாலை 3 மணிக்குத் தொடங்கிய கிரிக்கெட் போட்டியில், சி. மானம்பாடி அணியும் முட்லூர் அணியும் மோதத் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே பிரச்சனை செய்து கொண்டே இருந்தனர் முட்லூர் அணியினர். வன்னியச் சாதியைச் சேர்ந்த இவர்கள் போதையில் இருந்ததால், சாதித் திமிருடன் போதைத் திமிரும் இணைந்து கலவரம் செய்யத் தூண்டியது. அருள் ஜோதி, பிரசாத் இரண்டு பேர்தான் நடுவர்களாக இருந்தனர். இவர்கள் தலித்துகள் என்பதால் ஏளனத்துடன் கூடிய கேலியும், பிரச்சனையும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் வன்னியர்களுக்கும் நடுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படும் சூழல் உருவானதால், இதனைத் தவிர்ப்பதற்காக அருள் ஜோதியை நடுவர் பொறுப்பில் இருந்து விலக்கி விட்டு, அந்த இடத்தில் எழில் பிரகாஷ் அமர்ந்தார்.

அதன் பிறகும், வன்னிய இளைஞர்கள் நடுவர்களுடன் தகராறு செய்வதை விடவில்லை. இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் பாதை திசை மாறியது. அப்போது முட்லூர் அணியின் கேப்டன் பானுசந்தர் போதையில் தடுமாறிக் கொண்டே ஸ்கோர் சொல்லும் இடத்திற்குச் சென்றான். அங்கிருந்த கோவிந்தராஜிடம் "எனக்காக ஒரு முறை ஸ்கோரை வேகமாகச் சொல்லு'' எனக் கேட்டான். கோவிந்தராஜியோ ஓவர் முடிஞ்ச பிறகு சொல்கிறேன் என பதில் சொன்னார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத வன்னியர் அணியின் கேப்டனுக்கு கோபம் சாதி வெறியாக மாறியது. "ஏண்டா கேப்டன் கேட்கிறேன் ஸ்கோர் சொல்ல மாட்டீங்களா'' என்று கெட்ட வார்த்தைகளால் திட்டத் தொடங்கினான்.

நடுவர் அருள் ஜோதி இதனை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றும் முட்லூர் அணியின் சீனுவாசனும், சரவணனும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பேசிக் கொண்டிருந்த தலித் இளைஞனான அருள்ஜோதியை கிரிக்கெட் மட்டையால் அடிக்கத் தொடங்கினர். என்னடா நம்ம நடத்துற போட்டியில விளையாட வந்த வெளியூறு பசங்க, நம்ம பசங்களையே அடிக்கிறாங்க எனக் கோபப்பட்ட பிரசாத், வன்னியர்களை கண்டித்ததோடு, மன்னிப்பும் கேட்கச் சொன்னார். இதனால் கோபத்தின் உச்ச வெறிக்கு சென்றனர் வன்னியர்கள். பிரசாத் தலையில் மட்டையால் அடித்து கடுமையாக தாக்கினார்கள். மயங்கிய பிரசாத் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மூன்று நாட்கள் கழித்து இறந்து போனார்.

தலித் சமூகம் பொருளாதார வலிமை கொண்ட சமூகம் அல்ல. கல்வியின் மூலம்தான் ஒட்டுமொத்த மாற்றத்தையும் கண்டாக வேண்டும். அப்படியொரு எண்ணத்தில் பிரசாத்தை படிக்க வைத்தனர், கூலித் தொழிலாளர்களான பெற்றோர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறையில் முதுகலை அறிவியல் பட்டம் படித்து வந்த சூழலில், எந்த மாற்றத்தையும் பார்க்காமல் மரணமானார் பிரசாத். காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார் போலிசாரால் தாக்கப்பட்டதற்கு, கிரிக்கெட் தொடர்பாக நடந்த படுகொலைதான் காரணம். கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் கிராமத்தில் வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர்பாக இருந்த பகையே அது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் காவியச் செல்வன் கூறும்போது, "விளையாட்டுகள் சமூக வேறுபாட்டைக் களைந்து ஒற்றுமையை விதைக்க வேண்டும். ஆனால், இன்றைய சூழலில் சாதிவெறிப் படுகொலைதான் நிகழ்கிறது. விளையாட்டுகள் ஆதிக்க சாதியினரின் அதிகாரப் போட்டியாகவே மாறிவிட்டது. ஆகவே, தலித்துகள் திறமையாக விளையாடினாலும், போட்டிகள் நடத்தினாலும் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் பிரசாத் வன்னிய இளைஞர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டாலும், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் நெருக்கடியால் வழக்கை பதிவு செய்ய முடியவில்லை. அதனையும் மீறித்தான் வழக்குப் போட வைத்திருக்கிறோம்'' என்றார்.

எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக் குற்றவாளிகளான சரவணன், சீனுவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலித் மக்களை சமத்துவ நோக்கில் பார்க்க விரும்பாத இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலமாகத்தான் முன்னேற்றத்தை அடைய முடியும். மாறாக ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் என்றால், படுகொலையின் விகிதமும் ஆர்ப்பாட்டத்தின் விகிதமும் சமமாகவே இருக்கும். இனி, இந்து மதத்தைப் புறக்கணிப்போம்; படுகொலையில் இருந்து சேரிகளைப் பாதுகாப்போம்.

தலித் முரசு
ஜூலை 2007

தீண்டாமை குற்றமல்ல

தீண்டாமை குற்றமல்ல


பூவிழியன்



பறப்பசங்க எல்லாம் கொடி ஏத்துனத பார்த்தோமா, மிட்டாய் வாங்குனோமா, வீட்டுக்குப் போனோமாண்ணு இருக்கணும். அத விட்டுட்டு பள்ளிக்கூடத்துல நடக்கிற டான்ஸ் போட்டியில எல்லாம் கலந்து கொள்ளக் கூடாது'' - கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் வட்டத்திற்கு உட்பட்ட அம்புஜவல்லிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த குடியரசு நாள் விழா வில் வன்னியர் சாதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருடைய சாதிவெறிப் பேச்சு இது. சுமார் 175 மாணவ, மாணவிகள் படிக் கின்ற அம்புஜவல்லிப் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26.1.2007 அன்று குடியரசு தினத்திற்கான கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் மூன்று நாட்களுக்கு முன்பாக முத்தமிழ்ச் செல்வன் என்ற ஆசிரியரிடம் தங்கள் பெயரை கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த மாணவர்கள், தாங்கள் ஈடுபடவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ள பெயரினைப் பதிவு செய்தனர்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் காட்டுமன்னார் கோயிலுக்கு அருகில் உள்ள லால்பேட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர். முத்தமிழ்ச் செல்வன், தனது உறவினரான கிருஷ்ண மூர்த்தியுடன் (ஓய்வு பெற்ற காவலர்) சேர்ந்து கொண்டு செய்கிற தொல்லைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தலைமை ஆசிரியர் அடிக்கடி விடுமுறையில் சென்று விடுவார். இதனால் பள்ளியின் நிர்வாகத்தைக் கவனிக்கிற பொறுப்பை முத்தமிழ்ச் செல்வன் எடுத்துக் கொள்வார். இந்நிலையில் குடியரசு தினத்தன்று நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வந்த அவர், பள்ளியில் கொடியேற்றி முடித்தவுடன் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பிறகு, இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டபடி பேசியிருக்கிறார். இதனைக் கேட்ட மற்ற ஆசிரியர்களுக்கெல்லாம் ஒரே பயம். ‘இப்படிப் பேசுறாரே அடுத்து என்ன நடக்குமோ' என ஒருவரை ஒருவர் பார்த்து முணுமுணுக்கத் தொடங்கினர். நடனம் ஆடுவதில் ஆர்வத்தோடும், இரட்டிப்பு மகிழ்ச்சியோடும் இருந்த தலித் மாணவர்களும், இப்படியொரு வார்த்தை வரும் என எதிர்பார்க்கவில்லை.

"சார், வல்லவன் படத்துல உள்ள பாடலுக்கு ஆடுறோம்னு உங்கக்கிட்டே சொன்னோம். நீங்களும் கேசட்கூட எடுத்துட்டு வாங்கண்ணு சொன்னீங்க. இப்ப என்னென்னா நாங்க மட்டும் டான்ஸ் ஆடக் கூடாதுனு சொல்றீங்களே'' என கேட்டனர்.

"நீங்கல்லாம் டான்சும் ஆட வேண்டாம். ஒரு மயிரும் ஆட வேண்டாம்'' என்றார் முத்தமிழ்ச் செல்வன். "அந்தப் பாட்ட நிறைய முறை போட்டு ஆடிப் பார்த்திருக்கிறோம். எங்கள ஆட விடுங்க என தலித் மாணவர்கள் மீண்டும் கேட்க கோபமடைந்த ஆசிரியர், "பறப்பசங்களுக்கெல்லாம் தேவடியா ஆட்டம்தான் ஆடத் தெரியும். அத உங்கத் தெருவுல போய் ஆடுங்க'' என தலித் மாணவர்களை இழிவாகப் பேசி விரட்டியடித்தார். டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லையே என மன வருத்தமடைந்த மாணவர்கள், நேராக வீட்டுக்குச் சென்று தங்கள் பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் அழுது கொண்டே சொன்னார்கள்.

பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சில் இப்படி சாதிவெறியைத் தூவி இருக்கிறானே என கொதிப்படைந்த சேரி மக்கள், அம்புஜவல்லிப்பேட்டை நடுநிலைப் பள்ளிக்குத் திரண்டனர். முத்தமிழ்ச் செல்வனிடம், "ஏன் எங்கள் குழந்தைகளை மட்டும் டான்ஸ் ஆடக் கூடாதென விரட்டியடித்தீர்கள்'' எனக் கேட்டதற்கு, "உங்களால் என்ன செய்ய முடியும்? நான் அப்படித்தான் செய்வேன்'' என சாதித் திமிரோடு பேசியிருக்கிறார். இதனால் பெரிய பிரச்சனை உருவாகும்.

அமைதியாகச் செல்லுங்கள் என மற்ற ஆசிரியர்கள் சொன்ன பிறகு, தலித் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு என சொல்லி எவர்சில்வர் தட்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளார். "நாங்கள் எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால் எங்களுக்குப் பரிசுகள் தேவையில்லை'' என செவிளில் அறைந்தது போல் சொல்லி பரிசுப் பொருட்களை திருப்பி அளித்தனர் தலித் மாணவர்கள்.

அம்புஜவல்லிப்பேட்டையில் இருக்கின்ற தலித்துகளில் இருந்து வேறுபட்டு காணப்பட்டவர் சண்முகம். வெளியூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர், விடுமுறையில் வந்தபோது இந்தக் கொடுமையை கேள்விப்பட்டு அதை ஒரு மனுவாக எழுதி, ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருபுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமாரிடம் கொடுத்தார். "நான் மனு கொடுப்பதால், என் உயிரையே வன்னியர்கள் எடுத்தாலும் பரவாயில்லை, சாதி வெறி பிடித்தவர்களை தண்டிக்க வேண்டும்'' என்று கூறிய சண்முகத்தின் மனுவைப் படித்து அதிர்ந்து போனார் ஊராட்சி மன்றத் தலைவர். தான் அதே வன்னிய வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், நீதி கிடைக்க போராடுவேன் என்றார், ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார். இந்த மனுவுடன் தனது கடிதத்தையும் இணைத்து, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்தார்.

27.1.2007 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுக்கப்பட்ட மனுவைத் தொடர்ந்து, அடுத்த நாளே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கும் தொலைபேசி மூலம் செய்தியைத் தெரிவித்துள்ளார், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர். பிறகு 29.1.2007 அன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கும் தொலைபேசி செய்தி வந்துள்ளது.

இதனையடுத்து, 29.1.2007 அன்று (G.O. எண். 536/அ2/2007) ஓர் ஆணையை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் வெளியிட்டார். இதில் "இடைநிலை ஆசிரியர் திரு. எம். முத்தமிழ்ச் செல்வன் என்பவர் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், மேற்படி பள்ளியில் தலித் மாணவர்களைப் பங்கேற்க அனுமதி மறுத்து, சாதிப் பெயரைச் சொல்லி மாணவர்களை இழிவுபடுத்தியுள்ளார்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் சாதியைச் சொல்லி மாணவர்களை இழிவு படுத்தியுள்ளார் என அரசே உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இந்தக் குற்றத்திற்கெல்லாம் தண்டனை - அம்புஜவல்லிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து இடம் மாற்றி, கருப்பேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பணியாற்ற வேண்டும். ஆனால், இந்தப் பணியிட மாற்றம், எப்படி தீண்டாமைக் கொடுமைக்கான சரியான தண்டனையாக இருக்க முடியும்?

இது தவிர, மாணவர்களுக்கு வருகின்ற உதவித் தொகையைப் பெறுவதற்கு வங்கிக் கணக்குப் புத்தகம் வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் முத்தமிழ்ச் செல்வன். தலித் மாணவர்களின் பெற்றோர்கள் அதையும் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால், புத்தகத்தை அவரே வைத்துக் கொண்டு உதவித் தொகையைத் தருவதேயில்லை. இப்படி ஊழல்வாதியாக செயல்பட்ட இந்த ஆசிரியர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் பணியிட மாறுதலை மட்டும் அறிவித்துள்ளது.

எல்லோரும் கூடியிருக்கின்ற குடியரசு தின விழாவில் தலித் மாணவர்களை மட்டும் சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியது ‘தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்' - 1989 இன் பிரிவு 3(1) (10) இன்படி குற்றச் செயல். இதனை கடலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் வெளியிட்ட ஆணை உறுதி செய்கிறது. இந்நிலையில், முத்தமிழ்ச் செல்வனை இந்த அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதுதான் இதற்கான தண்டனையாக இருக்க முடியும். அப்போது தான் இதைப்போன்ற ஆசிரியர்களுக்கும் இது அச்சுறுத்தலை உருவாக்கும்.

ஆனால், சாதி வெறியர்களுக்கு சாதகமாக அரசு நடந்து கொள்வதால், இதை முறியடிப்பதற்கு இப்பிரச்சனையை சட்ட ரீதியாக சந்திக்க முன்வந்துள்ளார், தலித் விடுதலைக்கான மனித உரிமை அமைப்பின் மாநில அமைப்பாளர் பா. ரவிச்சந்திரன். அவர் இது குறித்துப் பேசும்போது, "தீண்டாமை ஒரு பாவச் செயல், அது ஒரு குற்றச் செயல் என்று பாடநூல்களில் அச்சிட்டு வருவது வெறும் சடங்காகத்தான் இருக்கிறது. இக்குற்றத்தை செய்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்காததன் மூலம் - 'தீண்டாமை ஒரு குற்றமல்ல' என்று அரசே நினைப்பதாகத் தெரிகிறது. ஆனால், நாங்கள் சட்ட ரீதியாக இதற்கு தீர்வு காண்போம் என்றார் உறுதியான குரலில்.

தலித் முரசு
மார்ச் 2007

ஒரு மீனவ மாட்டுக்கு பத்து சேரிக்காரன் சமம்

ஒரு மீனவ மாட்டுக்கு பத்து சேரிக்காரன் சமம்

பூவிழியன்


இயற்கையின் கொடூரத் தாக்குதல்கள் பூகம்பம், சுனாமி, நிலச்சரிவு, கடல் கொந்தளிப்பு, வெள்ளம், புயல் என வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து மனித இனத்தை அச்சுறுத்தி வருகின்றன. இதுபோன்ற இயற்கைப் பேரழிவுகள் நடக்கும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைப்பதில் இருந்து நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளைச் செய்வதுவரை அரசும், அரசு சாரா நிறுவனங்களும், பிற சமூகத்தினரும் பாதிப்பிற்குள்ளான சேரி மக்கள் மீது தொடர்ந்து பாகுபாட்டையே கடைப்பிடித்து வருகின்றன.

இயற்கைப் பேரழிவு ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்தாலும், அது தலித் மக்கள் மீது மீண்டும் மீண்டும் சாதிய வன்கொடுமையை ஏவுகிற ஒரு நிகழ்வாகவே மாறிவிடுகிறது. கடந்த நவம்பர் கடைசி வாரத்தில் பெய்யத் தொடங்கிய கனமழை, தமிழகத்தையே வெள்ளக்காடாக மாற்றியது. அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் கட்டுக்கடங்காத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், இந்தத் தொடர் கனமழையிலும், வெள்ளப் பெருக்கிலும் அல்லலுறும் சேரி மக்கள் மீது சாதி ரீதியானப் பாகுபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன என்பது, கள ஆய்வு செய்து பார்க்கும்போது தெரிய வந்தன.

தமிழகத்தில் 23.11.2005 அன்று பெய்யத் தொடங்கிய தொடர் கனமழை, தொடக்கத்தில் 12 மாவட்டங்களை வெள்ளக்காடாக மாற்றியது. பிறகு இதன் பாதிப்பு 22 மாவட்டங்களைத் தாக்கியது. இதனால் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்தும் தொடர்ந்து அதிகரித்ததால், கொள்ளிடம் ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டது. நாகை மாவட்டத்தில் கொள்ளிட ஆற்றின் கரைகளில் ஏற்பட்டுள்ள உடைப்பு, புதிதாக உருவானதல்ல. கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உடைந்த பகுதிகள்தான். ஆனால் அந்தக் கரைகளை உயர்த்தி, கான்கிரீட் தடுப்புச் சுவர்களை உருவாக்கி உடைப்பைத் தடுக்கிற வேலையை அரசு செய்யவில்லை. இந்தத் தாழ்வான பகுதிகளில் தலித் மக்கள்தான் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். எனவேதான், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டுகிறது.

25.11.2005 அன்று தலித் மக்களை முன்னெச்சரிக்கை காரணமாக வெளியேற்றியபோது, தலித் மக்களின் உயரிய சொத்தான மாடுகளையும், ஆடுகளையும் பாதுகாக்கிற நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லை. தலித் மக்களைப் பள்ளிகளில் தங்க வைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் வகுப்பறைகளைத் திறந்துவிடாமல், வராண்டாவில் கும்பல் கும்பலாகத் தங்க வைத்துள்ளனர். சீர்காழி புத்தூர் பாலிடெக்னிக், சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சபாநாயக (முதலியார்) இந்து மேல்நிலைப் பள்ளி, புதுப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், தலித் பெண்கள் உறங்குவதற்கும், உடைகள் மாற்றுவதற்கும் வசதிகள் ஏற்படுத்தித் தராமல் கேவலப்படுத்தி உள்ளன. இது தவிர, ஆரப்பள்ளத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களை, ஆச்சாள்புரம் பெரிய கோவிலிலும் பிற்படுத்தப்பட்ட மக்களை, சபரி ராசா திருமண மண்டபத்திலும் பிரித்து தங்க வைத்துள்ளனர்.

தாண்டவன்குளம் தலித் மக்களை, அங்குள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தங்குவதற்கு அனுமதி மறுத்துள்ளார், பள்ளியின் தாளாளர் அருளழகன். மேலும் "பறப்பயலும், பள்ளப் பயலும் தங்குவதற்கு நான் என்ன சத்திரமா கட்டி வைத்துள்ளேன்' என்று கேவலமாகப் பேசியுள்ளார். புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், புளியந்துறை கிராம தலித்துகள் சுமார் 1500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாலை 6 மணிக்கு தலித்துகளை வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றி வராண்டாவில் படுக்கச் சொல்லியும், மின்சாரத்தைத் துண்டித்தும், கழிவறைகளைப் பூட்டியும் மக்களை அலைக்கழித்தனர்.

கடந்த 2004 டிசம்பர் 26 அன்று உலகத்தையே உலுக்கிய ஆழிப்பேரலை (சுனாமி), கடற்கரைச் சமூகத்தையே விழுங்கியது. ஆனால், மீனவச் சமூகம் மட்டுமே கடற்கரைச் சமூகம்; கடலுக்குச் சொந்தமானவர்கள் என்கிற வதந்தியும் இங்கு இடையறாது பரப்பப்பட்டது. தலித்துகளும் மீனவர்களைப் போல, கடற்கரை வாழிடங்களையும், கடற் தொழிலையும் முதல் நிலைத் தொழிலாகக் கொண்டு வாழ்கிறார்கள் (தூத்துக்குடி, தரங்கம்பாடி, வானகி, திருல்லைவாசல், பிச்சாவரம் கிள்ளை, கல்பாக்கம், சென்னை). ஆனால், ஆழிப்பேரலை முகாம், நிவாரணம், மறுவாழ்வுப் பணிகள் மீனவர்களை மட்டுமே தன்மைப்படுத்தி நடந்தது. அடுத்த நிலையில் பாதிப்பிற்குள்ளாகிய தலித்துகளை அது சற்றும் திரும்பிப் பார்க்கவில்லை. அன்று புறக்கணிக்கப்பட்ட நிலை, இன்று வெள்ளம் மற்றும் கொள்ளிடக்கரை உடைப்பினால் ஏற்பட்டுள்ள பேரழிவு வரை பாதித்துள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சாதியத் தன்மையுடன் வெளிப்படுகிறது. சுனாமி நடந்த அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமிழக அரசு ஓர் ஆணையை வெளியிட்டது. முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணமாகத் தர வேண்டும் (அரசாணை நிலை எண். 574, தேதி : 28.12.2004) என்று அறிவிக்கப்பட்டது. அன்றைக்கு வெளியிடப்பட்ட இன்னொரு அரசாணையில் (அரசாணை நிலை எண் 575, தேதி : 28.12.2004) உடனடி நிவாரணமாக மாநில இயற்கைச் சீற்ற நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கீழ்க்கண்டவைகளை வழங்க வேண்டுமென்பதுதான் அது : ஒரு வேட்டி, ஒரு புடவை, இரண்டு கம்பளிப் போர்வை, 60 கிலோ அசி, 3 லிட்டர் மண்ணெண்ணெய், ஆயிரம் ரூபாய் பருப்பு, எண்ணெய், மற்ற மளிகைச் சாமான்களுக்கு; ரூபாய் ஆயிரம் சமையல் அடுப்பு பாத்திரங்களுக்காக; தற்காலிகக் குடியிருப்பு ஏற்படுத்த ரூபாய் இரண்டாயிரம்.

அது தவிர, 31.12.2004 அன்று மீனவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கும் ஆணையையும் (நிலை எண்.583) அரசு வெளியிட்டது. அதாவது, ஒரு வேட்டி, ஒரு புடவை, இரண்டு கம்பளிப் போர்வை வீதம், 60 கிலோ அசி, 3 லிட்டர் மண்ணெண்ணெய், ரூபாய் இரண்டாயிரம் மளிகைப் பொருட்கள், எண்ணெய், பாத்திரங்கள் வாங்க என அது கூறுகிறது. சுனாமியால் பெரும்பான்மையான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது உண்மை. அதே போல, வெள்ளப் பெருக்கு மற்றும் கொள்ளிடக் கரை உடைப்பு ஏற்பட்டதால், முழுபாதிப்படைந்தவர்கள் தலித்துகள் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். சுனாமியில் மீனவர் என்று ஒரு அடையாளத்தை வைத்து ஆணை வெளியிடும் அரசு, வெள்ளப் பாதிப்பில் தலித்துகளுக்கென்று நிவாரணம் குறித்த அரசாணையை ஏன் வெளியிடவில்லை?

சுனாமி தாக்கிய பிறகு 28.12.04 அன்று வெளியிட்ட அரசாணையில், சமையல் அடுப்பு வாங்குவதற்கு ஆயிரம் ரூபாயை தர சம்மதித்து ஆணையிடுகிற ஆட்சியாளர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீட்டை முற்றிலும் இழந்து தெருவுக்கு வந்த தலித்துகளுக்கும் இழப்பீட்டுத் தொகை ரூபாய் 1000 என அறிவித்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆக,ஒரு மீனவன் ஒரு அடுப்பின் மதிப்புதான் ஒரு சேரிக்காரனின் மொத்த வாழ்க்கையே என்பது, சாதியப் பாகுபாடின்றி வேறென்ன? அதே போன்று சுனாமியால் இறந்துபோன மாட்டிற்கு ரூ. 10,000 வழங்கிய அரசு, முழுவதும் இடிந்துபோன வீட்டிற்கு 2,000 ரூபாய் என்றும், லேசான பாதிப்பு என்றால் 1,000 ரூபாய் என்றும் கூறுகிறது. பத்து சேரிக்காரனின் மொத்த மதிப்பு, ஒரு மீனவ மாட்டிற்குச் சமம் என அரசு சொல்கிறதா?

மேலும், 6.1.2005 அன்று வெளியிட்ட அரசாணை (நிலை எண்.10) இல் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள தற்காலிகக் குடியிருப்பு கட்டித்த தர மற்றும் இடம் தேர்வு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது . ஆனால், தலித்துகளின் வாழ்நிலையை அடையாளம் கண்டு, தற்காலிகக் குடியிருப்புகளை அமைக்காதது ஏன்? அதே அரசாணையில் தற்காலிகக் குடியிருப்புகள் அமைப்பதற்கும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு, பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளப்பாதிப்பில் தலித் மக்கள் பாதிக்கப்பட்டபோது, முகாம் மற்றும் நிவாரணங்களில் தொண்டு நிறுவனங்கள் தலித் மக்களுக்கு உதவி செய்யக் கூடாது (நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன்) எனத் தடுத்தது ஏன்?

அண்மையில் நடைபெற்ற கடைசி சட்டமன்ற விவாதங்களில்கூட, முதலமைச்சரும் எதிர்க்கட்சியினரும் பல தனிப்பட்ட விரோதங்களுக்காக ஆவேசமாக மோதிக் கொண்டனர்; பலமுறை வெளிநடப்புச் செய்தனர். ஆனால், தலித் மக்கள் மீதான சாதிப் பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்கவோ, வெளிநடப்புச் செய்யவோ எவருமே தயாராக இல்லை

தலித் முரசு
பிப்ரவரி 2006

தமிழ்த் திரையுலகின் தோற்றமும் தடுமாற்றமும்



தமிழ்த் திரையுலகின்
தோற்றமும் தடுமாற்றமும்


பூவிழியன்


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1919-லிருந்தே தமிழகத் திரைத்துறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தாலும் அது தன் அடையாளத்தைப் பெற்றது 1931ல்தான். திரையில் தமிழ் மொழியை உச்சரிக்க ஆரம்பித்த பின்னரே இம்மாற்றம் நிகழ்ந்தது. முதல் படமான கீசக வதம் 1916-ல் தமிழகத்தில் வெளி வந்த போது அதற்கு மொழி கிடையாது. வெறும் மவுனப் படம் மட்டுமே. அந்த ஆரம்பகாலப் படங்களும் சூரிய ஒளியிலேயே படம் பிடிக்கப்பட்டது.

படங்கள் அனைத்தும் கொளுத்தும் வெயிலில் எடுக்கப்பட்டன என்பதால் நடிகர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்தோடும். சூரியக் கதிர்கள் கண்களை கூசச் செய்யும். எனவே, நடிப்பவர்கள் கண்களைச் சுருக்குவதும், இமைகளை அடிக்கடி மூடுவது என்பதும் இயல்பாக இருந்தது. கூடவே புராணப் படங்கள் என்பதால் காலில் செருப்பு அணிய முடியாமல் தரைச் சூட்டில் கால்கள் கொப்பளிக்கும் நிலை. மகிழ்ச்சி, காதல், உற்சாகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டங்களில்கூட சுடும் தரையில், கொப்பளித்த கால்களில் ஏற்பட்ட வலியால் முகச்சுளிப்பையும் சேர்த்தே படம் பிடிக்க வேண்டி இருந்தது.

பெருத்த வேதனையில் படப்பிடிப்பு நடந்த அந்நாட்களில் பெண்கள் படங்களில் நடிக்கத் தயங்கினர். நாடக நடிகைகளும் புகைப்படக் கருவி தங்களின் அழகை அபகரித்து விடும் என்ற நம்பிக்கையில் நடிக்க மறுத்து விட்டனர். எனவே, ஆரம்ப காலத்தில் துணிந்து நடிக்க வந்த ஐரோப்பியப் பெண்களையும், ஆங்கிலோ-இந்தியப் பெண்களையுமே நடிக்க வைத்தனர். இதனால்தான் 1917-ல் நடராச முதலியார் தயாரித்து இயக்கிய ‘திரௌபதி வஸ்திராபரணம்' மவுனப் படத்தில் துச்சாதனனால் துகிலுரியப்படும் திரௌபதியாக நடித்தவர் ஒரு ஐரோப்பியப் பெண். அக்காலத்தில் மிக அதிகமாக ஊதியம் பெற்று நடித்தவர் ‘லியோச்சனா' எனும் ஆங்கிலோ இந்தியப் பெண். இவரின் இயற்பெயர் மரைன் ஹில்.

மேலைநாட்டினர் செய்த ஆராய்ச்சியின் விளைவாக ஊமைப்படங்கள் பேசும் படங்களாக உருமாறின. பம்பாய் பட நிறுவனமான ‘இம்பீரியல் மூவிடோன்' அதிபர் அர்தே ஷீயர் ஈரானி இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம்ஆரா'வைத் தயாரித்தார். இவரே தமிழின் முதல் பேசும் படமான "காளிதாஸ்' திரைப்படத்தைத் தயாரித்தவர். சென்னை சென்ட்ரல் திரையரங்கில் 21-10-1931-ம் நாள் இப்படம் திரையிடப் பட்டது.

1934-ல் ராஜா சான்டோ இயக்கத்தில் வெளிவந்த ‘மேனகா' திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சி கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. இவ்வாறு இத்தனை வலிகளையும் வேதனைகளையும் சுமந்துதான் தமிழ்த்திரைப்படம் பேசத்தொடங்கி முழுமை பெற்றது.

பெண்கள் நடிக்கப் பயந்து போய் ஓடி ஒளிந்ததும் மறுத்ததுமான காலத்தைக் கடந்து இன்று தமிழ் சினிமா முழுவதுமே பெண்களின் கவர்ச்சிக் காட்சிகளால் நிரம்பி வழிகின்றன.

அந்தக் கவர்ச்சியின் ஓர் அத்துமீறல்தான் அண்மையில் வெளிவந்த ‘பருத்திவீரன்' திரைப்படத்தில் பெண்மையை பொத்தாம் பொதுவாகக் கேவலப்படுத்தி இருப்பது. நாயகியை ஐந்திற்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும் பாலியல் வல்லுறவு கொள்வதாகக் காண்பிக்கப்படும் அக்காட்சி படுகேவலம். ஆடைகளை அவிழ்ப்பதும், உள்ளாடைகளைக் களைவதும் என்பதாக அமைந்திருக்கும் அந்தக் காட்சியின் முடிவு தமிழ்ச்சினிமாவினை உமிழத் தோன்றுகிறது. இத்தகைய காட்சி எந்தத் தமிழ்ச் சினிமாவிலும் இதுவரையில் வரவில்லை.

திரைப்படங்கள் எதார்த்தம் கலந்தாக இருக்க வேண்டும் என்பது சரியானதுதான் என்ற போதும் அவை கலாச்சார, பண்பாட்டுத் தளத்தினைச் செப்பணிடுவதாக இருக்க வேண்டும் என்பதுவும் முக்கியம். பெண்கள் மத்தியில் ‘பருத்திவீரன்' படம் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், பெண்கள் அமைப்புகள் இத்திரைப்படத்தை எதிர்க்காமல் போனது வியப்பாகவே இருக்கிறது. சமூகப் பொறுப்பு என்கிற வரையறைக்கு கட்டுப்படாதவர்கள்தான் இத்தகைய படங்களை எடுக்கவும் முடியும். அமீர் அந்தப் பட்டியலில் முதல் நபராக இருக்கிறார்.

நான்கு சுவர்களுக்குள் நடக்கிற படுக்கையறைக் காட்சியை நாடெங்கும் திரையில் ‘நீலப்படம்' போன்று காட்டுவதில் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் காலாவதியாகிப் போனது என்பதை இப்படம் நிரூபித்து இருக்கிறது. சமூகப் பொறுப்பில்லாத படங்கள் பொழுது போக்குச் சாதனம் என்கிற சராசரியான வடிவத்தை மீறி ‘காமத்திற்கு வடிகால்' என்று உருவம் கொள்வது கண்டனத்திற்கு உரியது.

பருத்திவீரன் படத்தில் வரும் காட்சியை எல்லாம் காண்பித்து சமூகத்தில் ஒரு மாற்றமும் நடக்கப்போவதில்லை. ஆனால், சமூகச் சீரழிவு அதிகம் என்பதாலேயே இதைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

சமூக உணர்வுள்ளோரும், பெண்கள் அமைப்புகளும் எதிர்க்காமல் விட்டதால், இது போன்ற படங்களால் ஏற்படும் கொச்சைத்தனம் உச்சம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

உணர்வு பெறுவோம்!
உறுதியுடன் எதிர்ப்போம்!!
இப்போக்கு வளராமல் தடுப்போம்!!!

பெண்ணியம்
ஜூலை 2007

தீண்டாத சாதி தீண்டும் போலீஸ்

தீண்டாத சாதி தீண்டும் போலீஸ்

பூவிழியன்


‘ஒரு மனிதன் – ஒரு மதிப்பு’ என்பது தான் சனநாயகத்தின் ஆன்மா. துரதிருஷ்ட்டவசமாக சனநாயகம் தனது அரசியல் கட்டமைப்பில் மட்டுமே ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதுடன் நின்றுவிட்டது. மேலும் ஒருமைப்பாட்டின் கட்டமைப்பை வடிவமைக்க சனநாயகத்தின் ஆன்மா தவறிவிட்டது” என்று தனது வேதனையை வெளிப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர்.
தலித்துகளின் போராட்ட வாழ்நாட்களில் எதிர்கொள்கிற எதிர்ப்புகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் மேற்கண்ட வரிகள் இன்றும் பொருந்திப்போவது பொறுக்க முடியாத வலிகளை விதைக்கிறது. சாதியச்சமூகம் ஏற்றத்தாழ்வு மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சாதியக்கட்டமைப்புத்தான் சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்து சிதைத்துவிடுகிறது. ஆனால் மக்களால் உருவாக்கப்பட்டிருக்கிற அரசும் அதன் கீழ் இயங்குகிற நிர்வாகக்கட்டமைப்புகளும் சாதியச் சிந்தனைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒன்றாக இருக்கவேண்டும் என்பது அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பினை எரித்துச் சாம்பலாக்குகிற ஒன்றாக அமைந்துவிடுகிறது காவல்துறை தலித்துகள் மீது குறிவைத்துத் தொடுக்கும் தாக்குதலின் வன்மம்.

சட்டம் ஒழுங்கை நிர்வாகம் செய்வதன் வாயிலாக மண்ணின் அமைதியையும் மக்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்வதுதான் காவல்துறை. ஆனால், காவல்துறையின் அதிகாரப் போக்கும் ஆணவப்பண்பும் சேரிகளை மட்டும் சிதைப்பது என்பது அந்தப் பாதுகாப்புத்துறை மீதான நம்பிக்கையைக் கரைத்துவிடுகிறது. அடக்குமுறை – தீண்டாமை – பொருளாதார வறட்சி ஆகியவற்றிற்குள் தொடர்ந்து சுழல்வதற்கான சூழலைத் தலித்துகள் மீது வலிந்து திணிக்கிறது. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாதபடி வன்முறைகளாலும் கொடூர அணுகுமுறைகளாலும் எளிய ஒடுக்கப்பட்ட மக்களைத் தீண்டிக்கொண்டே இயங்குகிறது போலீஸ். சாதிய மோதல் – கலவரம் – சமூக அமைதி – பதற்றம் ஆகிய சொல்லாடல்களைக் கையில் வைத்துக்கொண்டு மென்மையான செயல்பாட்டிற்குள் நுழையாமல் சின்ன சின்ன தலித் நிகழ்வுகளைக்கூடத் துப்பாக்கிச்சூட்டைக் கொண்டே கட்டுப்படுத்துகிறது இத்துறை. அதனால்தான் இந்தப் பார்வை நமக்குள் துளிர்விடுகிறது. இதற்கு எண்ணிலடங்காத் தலித் விரோதப்போக்குகளையும் போலீஸ் தாக்குதல்களையும் மக்கள் முன் குவிக்க முடியும்.

சூலை 23, 1999இல் திருநெல்வேலியில் மாஞ்சோலைத் தோட்டத்தொழிலாளர்கள் 17 பேர் தாமிரப்பரணி ஆற்றில் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டார்கள். இதில் 11 பேர் தலித்துகள். தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேரணியாகச் சென்றதுதான் அவர்கள் செய்த தவறு. இதற்காக 17 பேரைப் பலிக்கொண்டது காவல்துறை. நீதிபதி மோகன் தலைமையின் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டது. அதன் தீர்ப்பும் போலீசைத்தான் காப்பாற்றியதே தவிர மக்களை அல்ல. அதாவது காவல்துறை தடியடி நடத்தவில்லையென்றால் பேரணியில் ஈடுபட்டவர்களால் திருநெல்வேலி நகரமே பெருத்த சேதத்தைச் சந்தித்திருக்கும் எனக் கூறி இறப்பை நியாயப்படுத்தியது.

செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 தலித்துகள் பிணமாக்கப்பட்டார்கள். நெஞ்சை உலுக்கும் கொடூரத்தாக்குதல் அது. இறந்த விலங்குகளைச் சவுக்குப் போன்ற மரத்தில் கட்டித்தூக்கிச் செல்வது போல் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களை எடுத்துச்செல்லும் வன்மம் – நாயைத்தூக்கி எறிவது போல் போலீஸ் வாகனத்திற்குள் வீசும் காட்சிகள் இன்றும் மனதிற்குள் இனம்புரியாத ஒருவிதப் பதற் றத்தையே பரவச் செய்கிறது.

தியாகி இம்மானு வேல் சேகரன் நினைவு நாளான அன்று ஜான்பாண்டியனைக் காவல்துறை கைது செய்தது. இதனைக் கண்டித்தும் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு நினைவஞ்சலி செலுத்த அவரை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து அவரது அமைப்பினர் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவ்வளவுதான் இதற்காகத் தடியடி – துப்பாக்கிச்சூடு. நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் போடப்பட்டது. ஆட்சியாளர் களையும் காவல்துறையினரையும் வழக்கம்போல் குற்றமற்றவர்களாகக் காண்பித்து தலித்துகளின் இறப்பை மதிக்காமல் தீர்ப்பை முடித்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது குண்டுப்பட்டி. 1998 நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்பதற்காகக் குண்டுப்பட்டியில் உள்ள விடுதலை நகர், பாரதிநகர் பி.காலனி ஆகிய இரண்டு பகுதிகளை போலீஸ் கும்பல் அடித்து நொறுக்கியது. சுமார் 50 இலட்சம் மதிப்பிலான சொத்துகள் சூறையாடப்பட்டன. 16 பெண்கள் உட்பட 32 தலித்துகள் காவல்துறையினரால் பிடித்துச்செல்லப்பட்டு இரண்டு வாரங்கள் சட்ட விரோதக்காவலில் அடைத்து வைக்கப்பட்டனர். போலீசின் கொலைவெறித் தாக்குதலில் மூன்று பெண்கள் கருச்சிதைவுக்கு உள்ளானார்கள். குழந்தைகள், பெண்கள் என எவரையும் விட்டு விடாமல் உச்சக்கட்ட தாக்குதலைத் தொடுத்தது போலீஸ். தேர்தல் புறக்கணிப்புச் செய்ததற்காகத் தலித்துகள் இவ்வளவு பெரிய கொடுமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்கிற போது மனது கனக்கிறது.
சூன் 20, 1992இல் தருமபுரி மாவட்டம் வாச்சாத்திக் கிராமத்தையே காவல்துறையினர் நாசப்படுத்தியதையும் விசாரணை என்கிற பெயரில் 18 பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்து சிதைத்ததையும் நினைத்தால் இன்றும் உயிருக்குள் வலியை ஊற்றுகிறது அதன் வேதனை.

மலைக்கிராமமான வாச்சாத்தியில் வசிக்கும் பழங்குடி மக்கள் சந்தன மரங்களை வெட்டிப் பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளடக்கிய காவல்துறையினரின் கூட்டுநடவடிக்கையில் தான் இந்த நாற்றமெடுக்கும் செயல் நடந்தேறியது. இந்த வழக்கு மையப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றப்பட்டு இதனை விசாரிக்க தனி நீதிமன்றமும் உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 28, 2011 அன்று தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குற்றம் சுமத்தப்பட்ட 269 பேரில் தற்போது உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் என உறுதிசெய்தது. இதில் 126 பேர் வனத்துறையினர், 84 பேர் காவல்துறையினர், 5 பேர் வருவாய்த்துறையினர். இவர்களுக்கு ஒரு வருடம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
காவல்துறை இதன்பிறகாவது மானம் மரியாதை யோடு தலித்துகளிடத்தில் நடந்துகொண்டதா என்றால் ஏமாற்றமே எதிரே காத்திருக்கும். சூன் 3, 1992இல் சிதம்பரம் அருகிலுள்ள அண்ணா மலை நகர் காவல்நிலையத்தில் வைத்து பத்மினி என்கிற தலித் பெண்ணைப் பாலியல் வன்புணர்ச்சி செய்தனர் போலீசார். இப்படித் தலித் விரோதப்போக்கில் காவல்துறையின் தொடர் அத்துமீறல் தேசிய அவமானத்தைக் காவல்துறை மீது கட்டியெழுப்பியது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர்கள் கவலைக்கொண்டதாக அறிவிக்கவில்லை அடுத்தடுத்துத் தொடரும் செயல்கள்.

1993இல் விழுப்புரம் மாவட்டம் அத்தியூரைச் சார்ந்த விஜயாவை விசாரணை என்கிற பெயரில் அழைத்துச்சென்றது புதுச்சேரிக் காவல்துறை. அப்போது பணியில் இருந்த ஆறு போலீசாரும் மாறி மாறி விஜயாவை வன்புணர்ச்சி செய்தனர். இந்தக் குற்றம் குறித்துத் தொடரப்பட்ட வழக்கில் ஆறு போலீசாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். அதே மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள மண்டபம் கிராமத்தைச் சார்ந்த நான்கு பழங்குடி இருளர் பெண்களை விசாரணை என்கிற பெயரில் அழைத்துச்சென்ற திருக்கோவிலூர் போலீசார் 26.11.2011 அன்று இரவு முழுவதும் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி காவல்துறை மீது அசிங்கத்தை வாரி அப்பிக்கொண்டனர் இவர்கள்.

விடுதலைச் சிறுத்தைகளின் “அடங்க மறு – அத்து மீறு – திமிறி எழு – திருப்பி அடி” என்கிற மைய முழக்கம் வடிவம் பெறுவதற்கு காவல்துறையின் அடக்குமுறைதான் வேராக வெளிப்பட்டது. பிப்ரவரி 22, 1994இல் விடுதலைச் சிறுத்தைகள் மதுரையில் அறிவித்த ரயில் மறியல் போராட்டம் தான் இதற்கான சூழலை அடைகாத்தது. மராட்டிய மாநிலத்தில் மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்டுவதற்குத் தடையாக இருந்த சிவசேனாவைக் கண்டித்து மேற்கொள்ளப்பட்டது அந்தப் போராட்டம். அவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருந்த ரயில் மறியல் போராட்டத்தில் போலீசார் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இயக்கப் பெண்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோரின் மண்டை உடைக்கப்பட்டு ரத்தம் வழிந்தோடியது. 350க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து வழக்குப்போட்டனர். ஆடைகளின் நிறத்தை ரத்தம் மாற்றிய நிலையிலும் அவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. ரயில் நிலையமே போர்க்களமாகக் காட்சியளித்தது. அந்த உச்சநிலை கொடூரத்தாக்குதலை நேரில் கண்டு கொதிப்படைந்த அவ்வமைப்பில் அமைப்பாளர் இரா.திருமாவளவன் அப்போது எழுதிய முழக்கங்கள்தான் அவை. விடுதலைச் சிறுத்தைகளின் வீரியத்தையும் அடிமைத்தனத்திற்கு எதிரான கலகக்குரலையும் மக்களிடத்தில் சுமந்து சென்றதில் இந்த வரிகளின் பங்களிப்பு முதன்மையானது.

அக்டோபர் 10, 1994 இல் செங்கல்பட்டுத் துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர் காரணை கிராமத்தைச் சார்ந்த தலித் மக்கள். தங்களது பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்பது தான் அவர்களது நீண்ட நாள் கோரிக்கை. அரசு அதிகாரிகளால் அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வந்ததால் போராட்ட வடிவத்தை மாற்றி வீதிக்கு வந்தனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோர் சுட்டுவீழ்த்தப்பட்டனர். அதேபோன்று சனவரி 20, 1995 அன்று தலித் குடியிருப்புகள் சூறையாடப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதற்காக போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் திட்டக்குடி சண்முகம், தொளார் ரமேஷ் ஆகியோர் துப்பாக்கிக்குண்டுக்கு இரையாயினர்.

கொடியங்குளத்தில் ஆகஸ்ட் 31, 1995 இல் போலீஸ் நடத்திய தொடர்த்தாக்குதல் என்பது நெஞ்சில் ஆறாத காயங்களை இன்றும் அவிழ்த்துவிடுகிறது. அந்நிய நாட்டின் மீது படையெடுப்பதைப் போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சோதனை என்கிற பெயரில் தலித் பகுதிக்குள் நுழைந்தனர். பெண்கள், குழந்தைகள் என வகைப்படுத்தி யாரையும் ஒதுக்காமல் அனைவரின் மீதும் கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்தனர். தலித் குடியிருப்புகளையே தரைமட்டமாக்கும் எண்ண ஓட்டத்தின் விளைவாய்க் கண்ணில் தென்பட்டவற்றை எல்லாம் அடித்து நொறுக்கினர். பொருட்களையெல்லாம் சூறையாடினர். இதற்கும் நீதிபதி கோமதிநாயகம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அறிவிக்கப்பட்டது. மற்றவை வழக்கம் போல் என்பதைப்போல் எல்லாம் நடந்து முடிந்தது.
சனவரி 16, 1996 இல் அருப்புக்கோட்டையில் உள்ள சத்யவாணி முத்து காலனியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சாதி இந்துக்கள் விழாவைச் சீர்குலைக்கிற செயல்களில் இறங்கினர். அப்போது கட்டவிழ்க்கப்பட்ட சாதிவெறியாட்டத்தில் தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. குடிசைகளைக் கொளுத்திவிட்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். இந்தச் சாதிய கலவரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். சமீபத்தில் திருநாள்கொண்டச்சேரி தாக்குதலும் எனக் காட்சிகள் தொடர்கின்றன. இப்படி தலித்துகளுக்கும் காவல்துறைக்கும் நிகழ்ந்த முரண்பாட்டு நிகழ்வுகளை ஏரளாமாக வரிசைப்படுத்த முடியும்.

இளவரசன் – திவ்யா காதலையொட்டி நவம்பர் 7, 2012இல் தருமபுரி நாயக்கன்கொட்டாய், அண்ணா நகர் உள்ளிட்ட மூன்று தலித் கிராமங்கள் மாலை நேர வெளிச்சத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. பெட்ரோல் குண்டுகள் வீசி கான்கிரீட் வீடுகள் தகர்க்கப்பட்டன. மூன்று மணி நேரத் தாக்குதலின் உச்சமாய் குடிசைகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தக் கட்டுப்பாடற்ற சாதிய வன்முறையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர – கலவரக்கும்பலை விரட்டியடிக்க ஏன் காவல்துறையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. குறைந்தபட்சம் தடியடிக்கான முயற்சிகள் கூட எடுக்கப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் தலித் மக்கள் வழிபடக்கூடிய தெய்வம் மாரியம்மன். அந்தத் சாமியைத் தேரில் வைத்துப் பொதுச்சாலையின் வழியே ஊர்வலமாகக் கொண்டு வருவதற்குக் கடந்த சில ஆண்டுகளாகச் சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 16, 2015 அன்று தேர் இழுப்பதற்கு அரசு அதிகாரிகளின் அமைதிப்பேச்சுவார்த்தையின் முடிவில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சுதந்திரத் தினத்தன்று காவல்துறை முன்னிலையில் எப்படிச் சேரி சாம்பலாக்கப்பட்டது. பெட்ரோல் குண்டுகள் வீசி தேர் எரிக்கப்பட்டது. இதில் போலீசாரும் தாக்குதலுக்கு உள்ளான சூழலில் கூட அவர்கள் மீது ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட வில்லை.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் (1989) பலவீனப் படுத்தப்படுவதும் வழக்குகள் நீர்த்துப்போய் எதிரிகள் வெற்றியைச் சுமப்பதற்கும் காவல்துறையின் பங்களிப்பு வலிமையானது. உதாரணமாக 1990 – 2000 வரை தமிழகத்தில் இருந்த காவல்நிலையங்களின் எண்ணிக்கை 13000. இதில் தலித் வன்கொடுமைகள் குறித்துப் பதிவான மொத்த வழக்குகள் 7362. இவற்றில் பல்வேறு காரணங்களைச் சொல்லி தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகள் 3399. மீதமுள்ள வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை வெறும் 164. ஒவ்வொரு வருடமும் ஒரு காவல்நிலையத்திற்கு ஒரு வழக்கு என வைத்துக்கொண்டாலே வருடத்திற்கு 13000 வழக்குகள். ஆனால் 11 ஆண்டுகளுக்குச் சேர்த்தே 7362 தான் என்றால் வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் குறைந்துவிட்டது என்று பொருளா? அல்லது வன்கொடுமைத் தடு¢ப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவதில்லையா? என்கிற காரணத்தை தலித் செயல்பாட்டாளர்கள் உணர்வார்கள். ஒரு வழக்குப்பதிவிற்கு எத்தனை போராட்டங்களையும் மனுக்களையும் உருவாக்கவேண்டியுள்ளது என்பதை அவர்களின் அனுபவமே உணர்த்தும்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளாக மாறுகிற போக்குப் பெரும் எண்ணிக்கையில் தலித்துகளிடத் திலே நிகழ்கிறது. தலித்துகள் என்றால் கேட்பாரற்றுக் கிடக்கும் சமூகம் – பொதுத்தளத்தில் புறக்கணிக்கப் பட்டவர்கள். அதனால் இவர்கள் மீது எந்தவொரு வன்முறைத் தாக்குதலையும் அச்சமின்றி அவிழ்த்து விடலாம் என்கிற சாதியப்போக்கும் ஆதிக்க மனநிலையும் தான் இதன் மூலக்கூறு. உங்களின் நண்பன் எனச் சொல்லும் காவல்துறை தலித்துகள் நீங்கலாக எனத் தோற்றமளிப்பதை இங்கே சுட்டிக்காட்டப்பட்ட சில நிகழ்வுகளே அதை வழிமொழிகிறது. இது சாதி இந்துகளுக்கு சாதகமாக வலிமைப்பெற்று வருவதைக் கணக்கில் கொள்ளவேண்டும். மேலும் காவல்துறை தனது மென்மையான அணுகுமுறையால் தலித்துகளைத் தீண்டாமல் வன்முறைகளால் மட்டுமே தீண்டுவது எந்த ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு என்பதை காலம் வரையும் ஓவியத்தில் காட்சியாய் இடம்பெறும் என்பது மட்டும் உறுதி…

அதிர்வெண்
பிப்ரவரி 2016

மீண்டெழுமா இரட்டை வாக்குரிமை

மீண்டெழுமா இரட்டை வாக்குரிமை!



அம்பேத்கரின் தனித்தொகுதியும்
காந்தியின் மரண அரசியலும்

 பூவிழியன்


ஒருவர் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்தும்படி செய்வது அதிகாரம்தான். அவ்வாறிருப்பதால் அதிகாரத்தை ஒழித்துக்கட்ட அதிகாரம் தேவை” என்கிறார் டாக்டர் அம்பேத்கர். இன்றை அரசியல் நகர்வுநிலையில் இந்துத்துவத்தின் மேலாதிக்கமும் சாதியக்கட்டமைப்பும் ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்குவது என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ஆச்சரியமும் அதிர்ச்சியும் தவிர்க்கப்பட்டு ஆதிக்க மனநிலை தன்னெழுச்சி பெற்றுவருகிறது. ஒருபுறம், டாக்டர் அம்பேத்கர் லண்டனில் வசித்த (1921 – 1922) வீட்டை 31 கோடிக்கு விலைக்கு வாங்கி, சர்வதேச நினைவகமாக மாற்றி பாதுகாப்பதாகச் சொல்லிக்கொள்கிறது பாரதிய சனதா அரசு. மற்றொரு நிலையில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘அம்பேத்கர் மாணவர் சங்கத்திற்கு’ எதிராகச் செயல்பட்டு, சமூக ஒதுக்குதல் முறையைக் கல்விநிறுவனத்தில் பின்பற்றி ஐந்து தலித் மாணவர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களின் மீது தீண்டாமையைத் திணித்தது. இதற்குக் அடித்தளமிட்ட பி.ஜே.பி.யின் மாணவர் அமைப்பான ‘அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித்’ உடன் இணைந்து செயல்பட்ட பி.ஜே.பி.யின் மத்திய அமைச்சர்களின் சாதிய உணர்வுத்திணிப்பால் ரோகித் வெமுலா என்கிற முனைவர் பட்ட ஆய்வு மாணவரின் மரணமே சனவரி 17, 2016 அன்று மிஞ்சியது.

இதுதவிர, நாகை மாவட்டம் திருநாள்கொண்டச்சேரிக் கிராமத்தில் இறந்த தலித் முதியவர் உடலைப் பொதுப்பாதை வழியே எடுத்துச்செல்லலாம் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டபோதிலும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்த மாவட்ட நிர்வாகம் காவல்துறையினரைக் கொண்டு தலித்துகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தி அவர்களைக் கைது செய்தது. பின், தலித் பிணத்தைப் பறித்து – காவல்துறையினரைக் கொண்டு மூன்று கிலோ மீட்டர் தூக்கிச்சென்று அரசே அடக்கம் செய்த அரசப் பயங்கரவாதமும் அரச வன்முறையும் சனவரி 6, 2016 அன்று அரங்கேறியது. இப்படிச் சாதிவெறியர்களுக்குப் பயந்து, பணிந்து செயல்பட்ட மாவட்ட நிர்வாகம், தலித் துகளை ஒடுக்குவதற்காக உயர்நீதிமன்ற ஆணையையே கொச்சைப்படுத்தக்கூடிய அளவிற்குத் துணிந்தது. இதனால், நீதிமன்றத்தின் மீது தலித்துகளுக்கு இருந்த மரியாதை விலக்கிக்கொள்ளப்பட்டதோடு, குற்றவாளிகளான சாதிவெறியர்களுக்கு நீதிமன்றத்தின் மீது குவிந்திருந்த தண்டனை குறித்த அச்சத்தையும் அது சிதைத்துவிட்டது. சுதந்திர இந்தியாவில் அரசு – நீதித்துறை – ஆட்சியாளர்கள் ஆகிய ஆளுமையின் குறியீட்டு வடிவங்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்பதையே இவை உறுதிப்படுத்துகிறது. ஆகவே, நமக்கான பாதுகாப்பையும் சனநாயகத்தையும் எங்கிருந்து பெறுவது? என்கிற கேள்வி நமக்குள் கனத்துக் கிடக்கிறது.

விடுதலை இந்தியாவாக மாறுவதற்கு முன்பு, இங்கு எழுப்பப்பட்ட தீண்டப்படாதோர் அரசியல் கோரிக்கைகள் – அதற்கு எதிராக வெடித்த சிக்கல்கள் – காந்தியின் பச்சைத்துரோக நடவடிக்கைகள் – டாக்டர் அம்பேத்கரின் எதிர்த்தாக்குதல்கள் – அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் ஆகியவை இன்றும் தலித்துகளின் கவனத்தை அசைக்க வேண்டியவை. லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளால் வகுப்புப்பிரச்சினைக்கு ஓர் உடன்பாடான தீர்வு காண இயலவில்லை. இந்த மாநாட்டு அனுபவங்களை அம்பேத்கர் விவரிக்கும் போது, “வட்டமேசை மாநாடு தோல்வியடைந்தது என்றால் அதற்கு முற்றிலும் திரு.காந்தியின் தவறே காரணம். இது மிக முக்கியமான மாநாடு. இந்தியாவின் பலதரப்பட்ட நலன்களை இணங்க வைக்கும் பல்வேறு இன மக்களின் ஆர்வ விருப்பங்களை, உகந்த அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கென்று, வகுப்பதற்கென்று கூட்டப்பட்ட மாநாடு இது. இத்தகைய சிறப்புமிக்க ஒரு மாநாட்டுக்கு திரு. காந்தியைவிடவும் அறியாமையில் மூழ்கிப்போன, பெரிதும் நியாயமற்ற வேறொரு பிரதிநிதியை அனுப்பியிருக்க முடியாது. அந்த அளவிற்கு திரு.காந்தி அரசியல் சாசன சட்டத்தைப் பற்றியோ, நிதி விவகாரங்களைப் பற்றியோ அறவே அறியாதவர், புரியாதவர். உண்மையைக்கூறுவதாயின், நாட்டின், மக்களின், சமுதாயத்தின் இடர்பாடுகளுக்கு, இன்னல்களுக்குத் தீர்வு காணுவதில் அவரது பங்கு பூஜ்யமாகவே இருந்து வந்திருக்கிறது” என்றார்.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு இந்தியா திரும்பியதும் திரு.காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். எரவாடா சிறைக்குச் சென்ற பிறகும் கூட, பிரிட்டிஷ் அரசு ஒப்புக்கொண்ட தனிப்பிரதிநிதித்துவ உரிமை தீண்டப்படாதோருக்குக் கிடைத்து விடாதபடி தடுக்க அவர் மறந்துவிடவில்லை. அந்த வட்டமேசை மாநாட்டிலே அவர் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். “என் உயிரைக் கொடுத்தேனும் இதை எதிர்ப்பேன்” என்று அப்போது சூளுரைத்தார். மேலும், “தனித்தொகுதி முறையானது இந்துசமயத்தை உடைத்துத் தகர்த்துக் கூறுபோட்டுவிடும்” என்று வெளிப்படையாகக் கூறினார். அத்துடன் நின்றுவிடாமல் “தனித்தொகுதி முறையின் அரசியல் முக்கியத்துவம் முக்கியமானதே என்றாலும் சமயப்பிரச்சினையுடன் ஒப்பிடும் போது அந்த முக்கியத்துவம் ஒடுங்கி, சுருங்கி குன்றிவிடுகிறது” என இந்துத்துவத்தின் மீதான பாசத்தைப் பதிப்பதன் வாயிலாக ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் கோரிக்கையைத் தன் மரணத்தால் முடக்கிவிட முயன்றார் காந்தி.

எரவாடா சிறையில் இருந்து, இந்திய மந்திரியாக இருந்த சர் சாமுவேல்ஹோருக்கு 1932 மார்ச் 11 அன்று ஒரு கடிதத்தை எழுதுகிறார் காந்தி. அதில், “ திட்டமிட்டு நூற்றாண்டுகள் காலமாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளுக்கு, இழிவுகளுக்கு, அவமதிப்புகளுக்கு இந்துக்கள் என்னத்தான் பிராயசித்தம் செய்தாலும் அதனை ஈடுகட்ட முடியாது என்பதை உணர்கிறேன். ஆனால் இம்மக்கள் கசக்கிப் பிழியப்பட்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அல்லல்பட்டு ஆற்றாது விடும் கண்ணீருக்குத் தனித்தொகுதி முறை ஒரு பரிகார மாகவோ, நோய்த்தீர்க்கும் மருந்தாகவோ இருக்கமுடியாது என்பதை அறிவேன். இருப்பினும் தனித்தொகுதிகள் அமைப்பதென அரசு முடிவுசெய்தால் அதனை எதிர்த்து நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்” என மன்னர்பிரான் அரசாங்கத்துக்குத் தெரிவித்தார்.

இதுகுறித்து, செப்டம்பர் 8,1932இல் பிரதமர் அவர்கள் காந்திக்குப் பதில் ஒன்றை எழுதுகிறார். அதில், “தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் அமைப்புகளிலிருந்து எங்களுக்கு எண்ணற்ற முறையீடுகள் வந்தன. அவர்கள் எத்தகைய கொடிய சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகி வேதனையும் வாதனையும் பட்டுவருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை நீங்களும் மிகப்பல சந்தர்ப்பங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான், சட்டமன்றங்களில் நியாயமான சதவிகிதத்தில் பிரதிநிதித்தும் பெறுவதற்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குள்ள உரிமைகளைப் பாது காப்பது எங்கள் கடமை என உணர்ந்தோம்” என அதில் குறிப்பிட்டார். மேலும், “குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை அவர்கள் தாங்களே தேர்ந்தெடுத்து சட்ட மன்றங்களுக்கு அனுப்புவது அவசியம் என்று நாங்கள் உணர்ந்தோம். அப்போது தான் அவர்கள் தங்கள் மனக்குறைகளையும் லட்சியங்களையும் எடுத்துரைக்க முடியும். சட்டமன்றத்திற்கு வெளியே தங்களுக்கு எதிராக முடிவுகள் எடுப்பதைத் தடுக்க முடியும்.” சுருக்கமாகக் கூறினால் “தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தாழ்த்தப்பட்ட மக்களே பேசும்படியான நிலையில் அவர்களை வைக்க முடியும் என்று கருதினோம்” என்று காந்திக்குப் பதில் அளித்தார்.

பிரதமர் முடிவில் மாற்றம் நிகழப்போவதில்லை என்பதை உணர்ந்துகொண்ட காந்தி, “தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அளவுக்கு அதிகமாகப் பிரதிநிதித்துவம் கொடுப்பதை நான் எதிர்க்கவில்லை. இந்துக்களாக அவர்கள் நீடிக்கும்வரை இந்துமதப் பிடியிலிருந்து அவர்கள் பிரிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறேன்” என்று தனது நயவஞ்சகத்தைக் கக்கினார். இருப்பினும் அவர் தொடங்கிய உண்ணாவிரதத்தை(1932 செப்டம்பர் 20) நிறுத்தி அவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற பதற்றம் இந்திய அரசியல் களத்தை வெப்பமாக்கியது. இந்நிலையை அம்பேத்கர் விளக்கும் போது, “என் முன்னால் இரண்டு வெவ்வேறான பணிகள், கடமைசார் பிரச்சினைகள் இருந்தன. மனிதத்தன்மையுடன் மரணத்திலிருந்து காந்தியைக் காப்பாற்றும் கடமை ஒருபுறம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரதமர் வழங்க முன் வந்துள்ள அரசியல் உரிமைகளை அவர்களுக்குக் காப்பாற்றித்தரும் கடமை மற்றொரு புறம். இந்நிலையில் மனிதநேயத்தின் கட்டளையை, அறைகூவலை ஏற்க முன்வந்தேன். திரு. காந்தி மனநிறைவை அடையும் வகையில் வகுப்புத்தீர்ப்பு மாற்றப்படுவதற்கு இணங்கினேன். இவ்வாறு உருவான உடன்பாடே புனா ஒப்பந்தம்” என்று தனது மனக்குமுறை வெளிப்படுத்தினார் அம்பேத்கர்.

புனா ஒப்பந்தம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்த அதேசமயம் இரட்டை வாக்குரிமையைப் பறித்துவிட்டது. இடங்கள் அதிகரிப்பு என்பது இரட்டை வாக்குரிமை இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. வகுப்புத்தீர்ப்பு வழங்கிய இரண்டாவது வாக்கு விலைமதிப்பற்ற தனிச்சலுகையாகும். ஓர் அரசியல் ஆயுதம் என்ற முறையில் அதன் மதிப்பு கணக்கிடற்கரியது என்றார் அம்பேத்கர். அதாவது தாழ்த்தப்பட்டோரை இந்துக்களின் அடிமை நுகத்தடியில் இருந்து விடுவிப்பதே இரட்டை வாக்குரிமையின் நோக்கம். ஆனால் புனா ஒப்பந்தம் இதற்கு மாறாக அவர்களை இந்துக்களின் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் திட்டம் கொண்டது என்றார்.

இன்றைய தேர்தல்களத்தின் தனித்தொகுதி முறையில் ஒருவர் போட்டியிடுவதற்கு ‘தாழ்த்தப்பட்டவர்’ என்கிற ஒற்றை அளவுகோல் மட்டுமே பின்பற்றப்படுகிறது. அவர், தாழ்த்தப்பட்டோர் தலைமையில் இயங்கும் கட்சியிலிருந்து மட்டுமே முன்மொழிய வேண்டும் எனும் கட்டுப்பாட்டிற்குள் நுழையவில்லை. அதனால் சாதி இந்துக்களின் தலைமையில் இயங்கக்கூடிய கட்சியில் இருந்தும் ஒரு தலித் களமிறக்கப்படுகிற ஆபத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஆகையால், தலித் விடுதலைக்கான போராட்டக்களத்தைக் கட்டமைக்கின்ற தலித் கட்சியின் வேட்பாளரும் தலித் விரோதப்போக்கை கொண்டுள்ள சாதியவாத சக்திகளின் சார்பாக ஒரு தலித் விலைக்கு வாங்கப்பட்டு அவருக்கு எதிராகக் களமிறக்கப்படுகிற வன்மமும் இதில் அமைந்துள்ளது. தலித் மக்களின் உண்மைப்பிரதிநிதி இதனால் தோற்கடிக்கப்பட்டு சாதி இந்துகளின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தை நிரப்புகிற ஆபத்து குவிகிறது. இதுமட்டுமல்லாமல், தனித்தொகுதியில் இருந்து வெற்றி பெறுகிற தலித் அல்லாத தலைமையின் உறுப்பினர்கள் தலித்துகளின் மேம்பாட்டிற்காகக் குரல்கொடுப்பதை மறந்து, தன்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய கட்சியின் தலைமைக்கே விசுவாசமாக இருக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தனித்தொகுதி முறையின் நோக்கம் சிதைக்கப்பட்டு, தலித்துகளின் கோரிக்கைகள் முன்வைக்கப்படாமல், விவாதிக்கப்படாமல் முடக்கப்படுவதால் அவர்களால் சமூக பொருளாதார மாற்றத்தை நுகர முடியாமல் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். இப்படித்தான் நிகழும் என்பதை அப்போதே எச்சரித்தார் அம்பேத்கர். ஆகவே, இரட்டை வாக்குரிமையைக் கைப்பற்றுவதன் வாயிலாகத்தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். அதன் வழியேதான் சமூகப் பொருளாதார மாற்றமட்டுமல்லாமல் நமது விடுதலையையும் வென்றெடுக்க இயலும்.

தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரம் எவ்வளவு பரந்ததாக, விரிந்ததாக இருந்தாலும் அவர்கள் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு இந்துக்களைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தால், அவர்கள் ஆதரவை நம்பியிருக்க வேண்டியிருந்தால் அந்த அதிகாரத்தால் எந்தப் பயனும் இருக்காது என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அம்பேத்கர். காந்தி தனது மரணத்தை முன்நிறுத்தி இரட்டை வாக்குரிமையைப் பறித்தார் என்றால் தலித்துகள் அதே மரணத்தை முன்னிறுத்தி இரட்டை வாக்குரிமையை நடைமுறைப்படுத்த களம் அமைக்கவேண்டும்.

நமது தலைநிமிர்விற்கான கடைசி ஆயுதம் அதுதான் என்பதை எப்போது உணரப்போகிறோம். இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையை முன்னெடுக்கும் அரசியலை எப்போது முழங்கப்போகிறோம்?

ஆசிரியர்-அதிர்வெண்
பிப்ரவரி 2016

இதழ்களின் பாலியல் வன்முறை

இதழ்களின் பாலியல் வன்முறை 

பூவிழியன்


ஊடகங்கள் ‘கருத்தியல் பரிமாற்றக் கருவிகள்' என்ற நிலையிலிருந்து மாறி வியாபாரம் லாபம் முதலிய இரண்டு சுயநலப் புள்ளிகளை மையப்படுத்தி இயங்கத் தொடங்கி உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு உத்தியைக் கையாள வேண்டும் என்று திட்டமிட்ட ஊடகம் இறுதியாக செக்ஸ் என்கிற தளத்தில் சிந்தனையைச் செலுத்த ஆரம்பித்ததுபொதுக் கண்ணோட்டத்தில் பாலியல் மருத்துவம், செக்ஸ் விழிப்புணர்வு, மருத்துவத் தொடர் என்கிற அடையாளங்கள் இருந்தாலும் உள்ளீடான பார்வையில் உணர்வுத் தூண்டலை ஏற்படுத்தி விற்பனையை அதிகரிப்பதற்கான ஒரு நுட்பமான செயலாகத்தான் இது தென்படுகிறது.

இன்றைய நிலையில் வெகுஜன இதழ்களாக இருந்தாலும் சரி அல்லது குறைந்த எண்ணிக்கையில் விற்பனையாகக் கூடிய சிறிய இதழ்களாக இருந்தாலும் சரி அவை செக்ஸ் தொடர் எழுதுவதைக் கட்டாயமாக வைத்திருக்கிறன. இதன் எதிர்விளைவான இளைய தலைமுறையின் பண்பாட்டுச் சீரழிவு பற்றி இவ்விதழ்கள் கொஞ்சமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.நவம்பர் 10, 2004 இந்தியாடுடேயின் அட்டையில் ‘இன்டர்நெட் செக்ஸ்' இந்திய ஆபாச அலை, என்று பெரிய எழுத்துக்களிலும் அதன் கீழே சிறிய எழுத்துக்களில் இன்டர்நெட்டில் இந்தியப் பெண்களின் ஆபாசப் படங்களுக்கு உலக அளவில் கிராக்கி கூடுகிறது என்று கவர்ஸ்டோரியின் தலைப்பும், ஆபாசமாக ஒரு பெண்ணின் படத்தையும் வெளியிட்டிருந்தது. அதில் சில இணைய தளங்களின் பெயரைக் குறிப்பிட்டு எல்லா இணைய தளங்களுமே, இந்தியப் பெண்களை ஒட்டுத் துணியில்லாமல் காண்பிப்பதாக தம்பட்டமடித்துக் கொண்டது.

இந்தத் தளங்களுக்கு சந்தாதாரராகி அவற்றைப் பேரோடும், புகழோடும் வளமாக வாழ வைப்பதும் இந்தியர்கள் என்று அந்த இதழ் இந்தியர்களின் பெருமையை வேறு வெளியிட்டது.இணைய தளங்கள் எப்படி இளைஞர்களை ஈர்க்கிறது என்பதைக் கூறி, எங்கோ சிலரால் மட்டும் பயன்படுத்தப்பட்ட செக்ஸ் இணையத் தளங்களுக்கு கவர் ஸ்டோரி எழுதுவதன் மூலம் பரவலாக்குகிற இந்தப் போக்கு இளைஞர்களை எந்தவிதமான மாற்றத்துக்கு உட்படுத்தும் என்பதை அந்த இதழ் அறியாதா என்ன? வணிகநோக்கு பெரிதாகும்போது சமூகப் பொறுப்பு காணாமல் போகிறது. நக்கீரன் நவம்பர் 13-16-2005 இதழில் ‘அதில்.. யார் முதலிடம்? கலக்கும் சர்வே' என அட்டையில் ஒரு தலைப்பு பாலியல் விழிப்புணர்வு பற்றிய கணக்கீடாம் அது. அதில் யார் முதலிடம் என்று போடுவதைத்தான் விழிப்புணர்வாகக் கருதுகிறது. மேலும் இங்கே செக்ஸ் பற்றிய தவறான புரிதலோடு வாழ்பவர்களே அதிகம் எனும் இந்தக் கட்டுரை எத்தனை பேருடன் உறவு? என்கிற கொச்சைத்தனமான சிந்தனையைப் பரவலாக்க முயற்சித்தது.

நக்கீரன் இதழைப் பொறுத்தவரை செக்ஸ் தொடர்களின் வழிகாட்டி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு தொடர்ந்து ஏதாவது ஒரு பாலியல் பிரச்சனை மையப்படுத்தி கதை எழுதுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அரசியல் இதழ்கள் என்றால் பொதுவாக வயதானவர்கள் படிக்கிற ஒரு நிலையை மாற்றி இளைஞர்களையும் படிக்க வைக்கத் தூண்டிய மாற்றம் அரசியல் ஏடுகளில் எழுதப்பட்ட செக்ஸ் தொடர்களுக்கும் பொருந்தும். நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற வார இதழ்களை வாங்கும் இளைஞர்கள் அதிகமானோர் செக்ஸ் தொடர்களைப் படிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அப்படியொரு சூழலுக்குள் இந்த இதழ்கள் இளைஞர்களைத் தள்ளியிருக்கிறது.

அரசியல் இதழ்களைக் கூட பதுக்கி வைத்துப் படிக்கிற பழக்கத்தை இது போன்ற தொடர்கள் உருவாக்கி வருகிறது.தொடக்கத்தில் நக்கீரன் மாத்ருபூதத்தையும் ஜீனியர் விகடன் நாராயண ரெட்டியையும் வைத்து செக்ஸ் தொடர்கள் எழுதத் தொடங்கின. அதனால் விற்பனை கூடவே நக்கீரனில் தொடர்ந்து பாலியல் சம்பவங்கள் இடம் பெற ஆரம்பித்தது இரண்டாயிரத்து இரண்டாமாண்டில் திரையுலகில் நடிகைகள் நடிகர்களுடன் உல்லாசமாக அலைந்தது பற்றியும் நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதாகக் கூறித் தயாரிப்பாளர்கள் செய்த பாலியல் சம்பவங்களையும் தொகுத்து ‘நடிகையின் வாக்குமூலம்' எனும் தலைப்பில் தொடராக பல மாதங்கள் வெளிவந்தது. நடிகைகளின் பாதிப்பை வெளிப்படுத்தக் கூடிய தொடர் என்பதற்கு மாறாக சமூகச் சீரழிவை ஏற்படுத்தக் கூடிய தொடராக அது இருந்தது. 2005ல் மீண்டும் "நடிகைகளின் கதை'' என தலைப்பில் கட்டுரைகளை வெளியிட்டது. இதற்கு நடிகைகளோ அல்லது நடிகர் சங்கமோ எந்தவிதமான எதிர்ப்பையும் சிறிது கூடக் காட்டவில்லை."ஆண் பெண் கவர்ச்சியின் ஆதி மூலத்தைக் தேடி ஆக்கப்பூர்வமான ஓர் அறிவியல் பயணம்'' எனும் வரிகளுடன் டாக்டர். நாராயணரெட்டி தற்பொழுது உயிர் எனும் தொடரை வார இதழ் ஒன்றில் எழுதி வருகிறார்.

அத்தொடரில் வெளியிடப்படும் படங்கள் அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்வதற்கு பதிலாக இளைஞர்களின் உணர்ச்சி மீறலுக்கே வாய்ப்பாக அமைகிறது.வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் வார இதழாக ராணி இருந்தது. அதிலும் கூட இப்போது மன்மத இரகசியம் எனும் பாலியல் தொடரும், அது தொடர்பான பாலுறவுக் காட்சிப்படங்களும் அதிக அளவிலான ஆண்களையும் அவ்விதழை விரும்பி வாங்க வைத்திருக்கிறது. இதழின் வணிக நோக்கும் நிறைவேறிவிட்டது. வார இதழ்களின் நிலை இவ்வாறிருக்க தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்களும் இதற்கெனப் பக்கங்கள் ஒதுக்கத் தொடங்கிவிட்டது. தினத்தந்தியின் ஞாயிறு இணைப்பில் ‘அந்தரங்கம் இது அந்தரங்கம்' ஒரு பெண்ணின் ரகசியங்கள் எனும் கேள்வி-பதில் தொடரும், தினமலரின் சைக்காலஜி பகுதியில் ‘குழந்தை எப்படி பிறக்குது?' என்ற தொடரும் ஆரம்பிக்கப்பட்டு வணிகப்போட்டியில் சமூக அக்கறையைத் துறந்து நிற்கின்றன.

இதே வரிசையில் ஏராளமான வார இதழ்களையும் பட்டியலிட முடியும். இதில் சர்வே என்கிற பெயரில் இந்தியா டுடேவின் அத்துமீறல் எல்லைதாண்டி விட்டது.செக்ஸ் விழிப்புணர்வு மருத்துவம் என்பது அறிவியல் கோட்பாடுகளை உண்மைகளை தெளிவுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதுபற்றிய பயத்தை நீக்குவதாகவும் அமைய வேண்டும். மாறாக, இளைஞர்களை உணர்ச்சிகளின் தளத்தில் உசுப்பி விடக் கூடியதாக இருக்கக் கூடாது. மனிதனைத் தவறுசெய்யத் தூண்டக் கூடாது. ஆனால், இன்று வரக்கூடியவை எல்லாம் இளைஞர்களை முடக்கக் கூடியதாகவும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் செக்ஸ் என்ற சொல்லுக்குள் அடிமையாகக் கிடக்க வைப்பதாகவும் இருக்கிறது.கணினியுகத்தின் இணையத் தளங்களோடு போட்டியிடும் வண்ணம் பாலியல் வன்முறை தற்போது இதழ்களிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக மாறி வருகிறது. செக்ஸ் விழிப்புணர்வு தேவைதான் மறுக்கவில்லை. ஆனால், அது வாசகர்களைப் பாலியல் ரீதியாகக் கவருவதற்கான சூத்திரமாக அமையக் கூடாது. வியாபாரத்திற்கும் லாபத்திற்காகவும் செக்சை விற்பனைக் கருவியாகப் பயன்படுத்துகிற தன்மை இதழ்களின் கேவலமான போக்காகத்தான் வெளிப்படும். ஊடகங்கள் கருத்தியல் பரிமாற்றக் கருவி என்கிற நிலையில் இருந்து காமக்கருவியாக மாறுவது கண்டிக்கத்தக்கது.

பெண்ணியம்
பிப்ரவரி 2007

அவருக்கு முன்பே மறைந்த இளையபெருமாள் அறிக்கை

அவருக்கு முன்பே மறைந்த 

இளையபெருமாள் அறிக்கை

பூவிழியன்


அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டியை இந்திய அரசு தன் முதலில் 1965 ஆம் ஆண்டு அமைத்தபோது, அதன் முதல் தலைவராக இருந்தவர் எல். இளையபெருமாள். இவர், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள காட்டுமன்னார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சோதிடத்தில் வல்லுநராக இருந்த தன் தந்தையிடம் சோதிடம் பார்ப்பதற்காக வீட்டிற்கு வரும் பார்ப்பனர்கள், உள்ளே வராமல் தோட்டத்திலேயே நிற்பதைப் பார்த்த இளைய பெருமாள், ஏன் அவர்கள் உள்ளே வர மறுக்கிறார்கள் என தனது தந்தையிடம் தொடக்கக் கல்வி பருவத்திலேயே கேள்வி கேட்கத் தொடங்கினார். சாதிய வேறுபாட்டை நேரில் பார்த்து அதன் பொருளைப் புரிந்து கொண்டதுதான் பின்னாளில் அவரைப் போராளியாக மாற்றியிருக்கிறது. இந்திய அளவில் தெரியக்கூடிய ஒரு தலைவராகவும், அரசியல் முன்னோடியாகவும் அவரை அடையாளப்படுத்தியது.

 காட்டுமன்னார்குடி ம. குளக்குடியில் இருந்த தொழிலாளர் நலப்பள்ளியில், 1930 இல் தன் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர், பிறகு காட்டுமன்னார்குடி கழக நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1935 இல் சிதம்பரம் வட்டத்தில் இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் தான் இருந்தன. பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியும், ராமசாமி (செட்டியார்) பெயரில் இருந்த மற்றொரு பள்ளியும். இந்த இரண்டு இடத்திலுமே உயர்நிலைக் கல்வி பயிலுவதற்காக இளையபெருமாள் இடம் கேட்ட போது தர மறுத்துவிட்டார்கள். காரணம், அப்போதெல்லாம் அந்தப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக் கொள்வதில்லை என்கின்ற தீண்டாமையை நடைமுறையில் வைத்திருந்தனர்.

இருப்பினும், படிப்பில் ஆர்வம் கொண்ட இளையபெருமாள் சிதம்பரத்திற்கும், கடலூருக்கும் இடையே கிழக்கில் உள்ள பரங்கிப்பேட்டை என்னும் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்தார். பிறகு 1944 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்தார். ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக் காலங்களிலும் அவர் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகள் மிக அதிகம். காட்டுமன்னார்குடி கடைவீதியில் நடந்து செல்வதற்கே அனுமதி மறுக்கப்பட்டும், செருப்பு அணிவதற்கும், சைக்கிள் ஓட்டுவதற்கும் தண்டனை கொடுக்கப்பட்ட அந்தக் காலத்தில், நடுநிலைப் பள்ளி பயிலும்போது அங்கே குடிதண்ணீர் வைத்திருந்த மண்பானையில் ‘பறையன் பானை' என எழுதி வைத்திருந்ததைப் பார்த்து அவர் கடும் கோபமுற்றார். பிறகு அதனை எதிர்க்கின்ற துணிச்சலை தனக்குள் உருவாக்கி, அதனை உடைத்தெறிந்து பறையன் பானை என்றிருந்ததை மாற்றி ‘எல்லோருக்கும் ஒரு பொதுப்பானை' என்கிற நிலையை ஏற்படுத்தினார்.

ஒரு முறை சாலையில் அவர் செருப்பு அணிந்து சென்றதற்காக அங்கு உள்ளவர்கள், செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக் கொண்டு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். செருப்புப் போட்டு நடந்ததற்காக அவரை அடிப்பதற்குக் கையை ஓங்கிய போதும், அதற்காகக் கொஞ்சமும் வருத்தப்படாமல், ‘‘வெயிலில் கால் சுடுகிறது. அதனால் செருப்பு அணிகின்றேன். நீங்கள் சொல்வதற்காக என்னால் கழற்ற முடியாது'' எனக் கூறி பணிய மறுத்தார். பரங்கிப்பேட்டை ராமசாமி வீரம்மாள் அவர்களின் மகளான தையல்முத்து அவர்களை 4.6.1944 அன்று வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக இருந்ததினால், 1945 ஆம் ஆண்டு நடந்த உலகப் போருக்கு ஆள் எடுக்கின்ற செய்தி அறிந்து, அதில் சிப்பாயாக சேர்ந்தார். தீண்டாமைக் கொடுமை அவரை ராணுவத்திலும் விட்டு வைக்கவில்லை.

உலகப் போர் முடிந்தவுடன், தற்காலிகப் பணிக்கு சிப்பாயாக எடுத்த ஆட்களை அரசு திருப்பி அனுப்பியது. அதனால் 1946 சனவரி 16 அன்று, ராணுவத்திலிருந்து வீடு திரும்பினார். காட்டுமன்னார்குடியில் 30.10.1946 அன்று, ஆதிதிராவிடர் நலச் சீர்திருத்த சங்கம் தொடங்கப்பட்டது. பிறகு 17.1.1947 அன்று இச்சங்கத்தின் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்தபோது, அதில் பங்கேற்க வந்த சுற்றியுள்ள கிராம மக்கள் இளையபெருமாளை தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

ராணுவத்திலிருந்து வந்த பிறகு அவர் பொறுப்பு வகித்த முதல் பதவி இதுவே. 1947 ஆம் ஆண்டு, கூலி உயர்வு கேட்டு கடலூர் மாவட்டங்களில் இளையபெருமாள் போராட்டங்களைத் தொடங்கிய போது, பண்ணையார்கள் மத்தியில் பெருத்த எதிர்ப்பு உருவாகியது. ஆனால், அதைப்பற்றி அவர் சற்றும் கவலைப்படவில்லை. காட்டுமான்னார்குடி அருகில் உள்ள மா. உடையூர் கிராமத்தில் ஏகாம்பரம் என்ற பண்ணையார், தாழ்த்தப்பட்ட ஒருவரைக் கட்டி வைத்து அடித்துக் கொடுமைப்படுத்தினார். கூலியை உயர்த்திக் கேட்டதற்காக கொடுமைப்படுத்தப்பட்ட இந்நிகழ்வைக் கண்டித்த இளையபெருமாள், தன் சங்க நிர்வாகிகளுடன் கிராமத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஏகாம்பரம் பண்ணையார் செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்க வைத்தார். அப்போதே கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதே போன்று 1947 இல் புளியங்குடியில் மாரிமுத்து மகன் வடமலை என்ற ராணுவ வீரன் மீசை வைத்திருந்தார் என்பதற்காக, அவரைக் கட்டி வைத்து வன்னியர்கள் அவரது மீசையை நெருப்பு வைத்துக் கொளுத்தினர். அந்த ஊரில் ஆண்கள் நல்ல உடை உடுத்தக்கூடாது, கிராப் வெட்டிக் கொள்ளக்கூடாது, பெண்கள் ரவிக்கை போடக்கூடாது, நகை அணியக்கூடாது என்றெல்லாம் தீண்டாமைக் கொடுமைகள் இருந்தன. அம்மக்கள் அமைதியாக வாழ விரும்பிய காரணத்தினால், அங்கிருந்த ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பைக் காலி செய்து அருகில் உள்ள பிள்ளையார்தாங்கலில் குடி அமர்த்தினார்.

கீழ்வெண்மணி படுகொலையின் (1968) போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த அவர் செய்தி அறிந்த உடன் தஞ்சைக்கு வந்து, அரசு அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கக் கோரினார். பிறகு அவர் கீழ்வெண்மணி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த வழக்கினைப் பற்றி இளையபெருமாள் கூறும்போது, ‘‘தமிழக அரசானது குற்றவாளிகளை விடுதலை செய்த செயல், எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. அதனால் 1980 இல் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரான பிறகு, அந்த வழக்கை மீண்டும் தொடரச் செய்து குற்றவாளிகள் சிலருக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தேன்'' என்றார்.

விழுப்புரம் கலவரத்தின் போதும், சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர், இந்தக் கொலைக்கு நியமிக்கப்பட்ட சதாசிவம் கமிஷனுடன் இரண்டு மாத காலம் தங்கிப் பணியாற்றி, அதன் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார். இதே போன்று பல பெரிய கலவரங்களிலும் நேரடியாகத் தலையிட்டு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அரசிடம் முறையிட்டு, நிவாரணங்கள் வழங்க வலியுறுத்தினார். குற்றவாளிகளுக்கு முடிந்த வரை தண்டனையும் வாங்கித்தர முயற்சி செய்தார். பறையடிப்பதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று போராடிய அவர், 1949 இல் காட்டுமன்னார்குடி நாட்டு சின்ன பண்ணையத்தார் வீட்டில் நடந்த சாவுக்குப் பறையடித்ததை தன்னுடைய தலைமையில் தடுத்து நிறுத்தினார். இதனால் ஏற்பட்ட கலவரத்தில், இளையபெருமாள் உட்பட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. பிறகு திட்டக்குடி, காட்டுமன்னார்குடி, பெண்ணாடம், விருத்தாச்சலம் ஆகிய ஊர்களில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 10 மாத காலம் வழக்குத் தொடரப்பட்டு, பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது.

1998 இல் தி.மு.க. அரசு இளையபெருமாளுக்கு அம்பேத்கர் விருது கொடுத்து, அவரின் சமூக உழைப்பைக் கவுரவித்தது. இருந்தாலும், அதற்காக ஒருபோதும் தி.மு.க. அரசைக் கண்டிக்க அவர் தவறியதில்லை. விருது கொடுக்கப்பட்டவுடன் தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய இடஒதுக்கீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; கைது செய்யப்பட்ட சேரி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என கருணாநிதி அரசிடம் கோரிக்கை வைத்தார்.

1952 இல் அரசியல் பணியில் ஈடுபட்ட அவர், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதனைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டில் மரகதம் சந்திரசேகர் ஒத்துழைப்போடு, நேரு அமைச்சரவையில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் குழுத் தலைவர் பதவியை ஏற்றார். இக்கமிட்டியின் மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கையை, 1969 சனவரி 30 அன்று இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது வெளியிடப்பட்டு, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதுபற்றி இளையபெருமாள் கூறும் போது, ‘‘நான் தயாரித்துக் கொடுத்த கமிட்டி அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட பிறகு, அதில் இருந்து சில பிரிவுகளை நீக்கிவிட்டு அரசுக்கு ஏற்றார் போல் அதனை வெளியிட்டிருக்கிறது'' என்றார். மேலும், இந்த கமிட்டி அறிக்கையை வெளியிடுவதற்கு முதல் நாள் இவர் தங்கியிருந்த அறையிலிருந்து இந்த அறிக்கையை எடுத்து கொளுத்துவதற்கு, சிலர் ஈடுபட்ட தாகவும், இப்படி நடக்கும் என முன்பே தெரிந்திருந்த அவர் இதனை நண்பர் வீட்டில் மறைவாக வைத்திருந்து மறுநாள் வெளியிட்டதாகவும் மிகவும் வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வறிக்கையில் தீண்டாமை (பகுதி. 1, இயல் 1) 1.2 இல், சாதிய அமைப்பு என்பது இந்து சமயத்தின் புனிதமான அங்கம் என்றும், சாதி தெய்வீகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது என்றும், அந்த அடிப்படையைக் கொண்ட சமூக முறையைப் புனிதமானது என்றதுமான நம்பிக்கையின் இன்றியமையா உடன் நிகழ்வே தீண்டாமை எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் தீண்டாமையை ஒருபோதும் ஒழிக்க முடியாது. மேலும், தாள்களிலும், சுய விருப்பத்தினாலும், மேலோட்டமான அறிவுரைகளாலும், முழக்கங்களினாலும் சாதி முறைமையையும், தீண்டாமையையும் ஒழிக்க நினைப்பது அடி முட்டாள்தனம் அல்லது திசை திருப்பும் செயல் என்றும் ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.

1.7 இரண்டாவது பத்தியில், சமுதாயக் குற்றமான தீண்டாமையை வேறு வேறு தீய நோக்கங்களுக்காக கடைப் பிடிப்போருக்கு நிதி உதவி, கடன் வழங்குதல் போன்றவை உறுதியாக மறுக்கப்படும் என்கிற அச்சுறுத்தலை அரசு கைக்கொள்ள வேண்டும். அவ்வாறு குற்றவாளிகள் என்று அறியப்பட்டோருக்கு உதவித் தொகை போன்ற கல்விச் சலுகைகள் மறுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். கல்விப் பணியின் மூலம் சமூக மேம்பாட்டையும், பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியும் என்கிற நம்பிக்கை கொண்ட அவர், சுவாமி சகஜானந்தாவால் 1914 இல் உருவாக்கப்பட்ட நந்தனார் கல்விக் கழகத்தை, 30.4.1959 அன்று சகஜானந்தா இறந்த பிறகு, அதன் முழு பொறுப்பேற்று நடத்தி வந்தார். 1976 முதல் மூன்றாண்டுகள் தமிழ் நாடு காங்கிரசின் ‘அரிஜன செல்' தலைவர் பதவி வகித்த அவர், 1979 இல் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரானார். பிறகு, 1980 இல் எழும்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் இருந்து வெளியேறிய பிறகு 1989 இல் இந்திய மனித உரிமைக் கட்சியைத் தொடங்கிய அவர், 2003 இல் காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.

சேரி மக்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும், போராடிய பெரியவர் இளையபெருமாள், பல்வேறு கட்சிகளுடன் தொடர்பும் கூட்டணியும் வைத்திருந்தாலும் அவர்களோடு சமரசமாகாமல் எதிர்க்கின்ற நேரத்தில் அவர்களை எதிர்க்க வேண்டிய பண்பையும் பெற்றிருந்தார். இவர் கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாததால், சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 8.9.2005 அன்று இறந்து போனார். மண்டல் குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கப்பட்ட அளவுக்கு, இளைய பெருமாள் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆதரவுக் குரல் கொடுக்கப்படவில்லை. தலித் மக்களுக்கான புரட்சிகர செயல் திட்டங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த இளைய பெருமாள் அறிக்கை, அவர் காலத்திலேயே மறைந்து விட்டது என்பதுதான் கசப்பான வரலாற்று உண்மை.

தலித் முரசு
அக்டோபர் 2005

மாற்றுப்பாதை - பூவிழியன்

மாற்றுப்பாதை - பூவிழியன்



 யாழன் ஆதி

 தலித் முரசு
ஜூன், 2010


தலித் வரலாற்றை எழுதுவது, ஒரு வகைமை. புனைவுகளைக் கடந்து இயக்க ரீதியான அணிதிரள்வுகளுக்கும், மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் – தலித் வரலாற்றாளர்கள் தருகின்ற ஆதாரங்களும், தரவுகளும் – தலித்துகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்குமான நியாயங்களை உணர வைக்கின்றன. பொதுப்பண்பாட்டிற்கு எதிராக ஓர் எதிர்ப்பண்பாட்டை உருவாக்கவும் தலித் வரலாறு தேவைப்படுகிறது.

வரலாற்றாய்வாளர் ஈ.எச்.கார் என்பவர், வரலாற்றில் தவிர்க்க முடியாதது, தப்ப முடியாதது என எதுவும் இல்லை என்கிறார். ஆனால் இந்திய வரலாற்றைப் பொருத்த வரையில், தலித் வரலாறு திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வரலாறு மறைக்கப்பட்ட தொல்குடி மக்களின் வரலாறாகத்தான் இருக்கிறது. ஆனால், இன்றைய நவீன எழுத்துச் சூழலில் எதையெல்லாம் வரலாற்றில் தவிர்த்தார்களோ, அதையெல்லாம் தோண்டித் துருவி தரவுகளைத் திரட்டி, அவற்றை ஆவணமாக்கும் பணிகளை தலித் வரலாற்றைக் கட்டமைப்பவர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். அதில் முக்கியமான இடம் பூவிழியனுக்கு உண்டு. அவர் வாழும் சீர்காழி அதைச் சுற்றியுள்ள தஞ்சை, கடலூர் பகுதிகளில் நிகழ்ந்த தலித் போராட்டங்களை நுண் வரலாறுகளாக மாற்றும் எழுத்தாளர் பூவிழியன்.

ரெட்டியூர் பாண்டியன், கே.பி.எஸ்.மணி, இளைய பெருமாள் போன்றவர்களின் வரலாற்று ஆவணங்கள் பூவிழியனுடையவை.  ஒரு மனிதருடைய வாழ்வை, அவருடைய மறைவிற்குப் பிறகு எழுத்தின் மூலம் கொண்டாடுவது என்பது மிகவும் அரிதான ஒன்று. எத்தனை தலித் தலைவர்கள் மின்விளக்குகூட இல்லாமல், வெறும் மண்ணெண்ணெய் குப்பி விளக்குகளை வைத்துக் கொண்டு, வரப்புகளிலும் வாய்க்கால்களிலும் படுத்துறங்கி, கிராமங்களில், சேரிப்பகுதிகளில் விடுதலைக் கருத்தியலை வளர்த்திருக்கின்றனர். அவர்கள் எல்லாம் யார் என்றே இன்றைய இளைஞர் சமூகம் அறிவதற்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது.

ஏன் அம்பேத்கர் குறித்த வரலாற்றுச் செய்திகள் கூட இன்று ஓரளவு விடுதலை பெற்று வாழ்கின்ற தலித் இளைஞர்களுக்குத் தெரியாமல்தானே இருக்கிறது! பெருவரலாறுகள் மட்டுமே வரலாறுகளாக மதிக்கப்படுகின்றன. வரலாற்றுப் பாடங்களும் பிரதிகளும் கூட பெருவரலாற்றுத்தன்மையுடையனவாகவே இருக்கின்றன. ஆனால், நுண்வரலாறுகள் என்பவை உண்மையான வரலாறுகள். அத்தகைய நுண் வரலாறுகளைக் கட்டமைப்பதன் மூலம், பூவிழியன் தலித் ஆக்கவெளியில் தனக்கென ஓரிடத்தை அடைகிறார்.

நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர் பூவிழியன். கல்லூரியில் படிக்கும் போதே கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, ஒரு தொகுப்பினை வெளியிட்டுள்ளார். பின்னர் அவருடன் படிக்கும் மாணவர் ஒருவர், மறைந்த தலித் தலைவர் எல்.இளையபெருமாள் வசித்த தெருவிலிருந்து கல்லூரிக்கு வருபவர். அவர், இளையபெருமாளின் சமூகப் போராட்டங்களைப் பற்றி சொல்ல, அதன் பிறகு அவர் பேசும் கூட்டங்களுக்கு இவரும் ஒரு பேச்சாளர் என்பதால் பேச வைக்கப்பட்டு சமூகப் பணியாற்றியுள்ளார். அப்போது கே.பி.எஸ். மணி அவர்களின் நினைவு நாள் கூட்டம் ஒன்று நடத்தப்பட, அதில் மணி அவர்களின் பணிகள் பல்வேறு நபர்களால் புகழ்ந்துரைக்கப்பட, அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்ட மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதன்பிறகு வரலாற்றை எழுதும் எழுத்து வகைமைக்கு வந்திருக்கிறார் பூவிழியன்.

கே.பி.எஸ். மணியின் வாழ்க்கையில் நடைபெற்ற போராட்டச் சுவடுகளை அணு அணுவாக ஆராய்ந்து எழுதியுள்ளார் பூவிழியன். சாதி இந்து தெரு வழியாக தலித்துகள் பிணம் போனால் வழிமறிக்கும்போது, பிணத்தை அதே இடத்தில் கொளுத்த வேண்டும் என்று மணி உத்தரவிட, ஓடிவந்து பிணத்தைப் புதைக்க வழிவிட்டிருக்கின்றனர் ஆதிக்க சாதியினர். இது நடந்தது எடமணல் என்னும் இடத்தில். இப்படிப் பல செய்திகள்.

சாதி ஒழிப்பிற்கு அவர் ஆற்றிய போரின் உத்திகள் மிக முக்கியமானவை. செத்துப்போன மாட்டைத் தூக்க ஆதிக்க சாதிகள் வலியுறுத்தினால், கே.பி.எஸ். மணி ஓர் உத்தியைக் கையாண்டிருக்கிறார். எந்த மாடு செத்துவிடுகின்றதோ, அந்த மாட்டின் இணை மாட்டை செத்த மாட்டை எடுக்கின்றவர்களுக்கு தந்துவிட வேண்டும் என்பதுதான் அது. இதனால் ஏற்படப்போகும் பொருளாதார இடப்பெயர்வுக் குறித்த அச்சமே, ஆதிக்க சாதியினரை செத்த மாட்டை எடுக்க தலித்துகளை அழைப்பதற்கு தடையாகிப் போனது. இதைப் போன்ற செய்திகள் அந்நூலில் பதிவாகியிருக்கின்றன. அதேபோல்தான் சாவுக்கு குழிவெட்ட அழைத்தால் இடம் தரவேண்டும் என்னும் கோரிக்கையும்.

போராளிகளின் வரலாறு என்பது ஒரு போராட்டத்தின் வரலாறு. எப்படிப்பட்ட போராட்டத்தை நம் முன்னோர்கள் கையெடுத்தார்கள் என்று அறிகின்ற அனுபவமே, புதிய போராட்ட உத்திகளைத் தரும் என்கிறார் பூவிழியன்.

வரலாற்றை எழுதுதல் என்பதற்கு, பூவிழியனின்  பதில் மிகத் தெளிவானதாகவும், வெளிப்படையானதாகவும் இருந்தது: “அம்பேத்கர் கூறுவதைப் போல, நாம் யார் என்று அறிந்தால்தான் போராட முடியும். தற்பொழுதுள்ள அமைப்புகள் எத்தகைய அரசியல் பார்வையோடு இருக்கின்றன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய முன்னோர்களின் வரலாறுகள், அவர்களின் போராட்டங்களை நமக்கு சொல்லித் தருகின்றன. அதன் மூலம் நம்மை நாம் அறிந்து கொள்கிறோம். அதன் மூலம் தான் சுய அறிதல் : சுய உதவி – சுய மரியாதை என்னும் தன்மையை நான் அடைவது  சாத்தியமாகும். சுவாமி சகஜானந்தாவை எடுத்துக் கொண்டால், அவர் தலித் மக்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை செய்து இருக்கிறார். தலித் விடுதலையை கல்வியின் மூலம் பெறலாம் என்று அவர் கருதியிருக்கிறார். இதை நாம் தெரிந்து கொள்ளும் போது, அது நம்மை இயக்குகிறது. நம் செயலைத் தீர்மானிக்கிறது.''

 பூவிழியனின் இன்னொரு முக்கியமான வரலாற்று ஆவணம், ரெட்டியூர் பாண்டியன் வரலாறு. சாப்பறை அடித்தலை இழிதொழிலாகக் கருதி, அதை ஒழிக்கும் போராட்டம் என்பது, தமிழ்நாட்டின் பல தலித் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்ட தலித் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துகளில் எல்லாம் சேரிக்குள்ளோ, ஊருக்குள்ளோ மரணம் நிகழுமெனில் பறையடிக்கப் போகக்கூடாது என்று போட்டிருக்கும் தீர்மானத்தை, தலித்துகள் இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றனர் என்பது கண்கூடு. அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தியதால், ரெட்டியூர் பாண்டியன் கொல்லப்பட்டு இருக்கிறார். அவருடைய ஆளுமையை மிகச்சிறப்பான வகையில் பதிவாக்கியுள்ளார்.

காட்டுமன்னார் கோயில் வட்டம் ரெட்டியூரில் பிறந்தவரான பாண்டியன், வறுமை சூழ்ந்த குடும்பத்தில் பிறந்தவர். அவர் படிக்கும்போதே சமூகப்பற்றுள்ளவராக, சீர்த்திருத்தக்காரராக இருந்திருக்கிறார். தலித் பகுதியில் படிக்கின்ற மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது, அவர்களை சுத்தமாக இருக்க வைப்பது, தலித் பகுதிகளில் பெண்கள் தெருக்களில் சமையல் செய்தால் வீட்டிற்குள் செய்ய வற்புறுத்துவது, அனைவருக்கும் கையெழுத்துப் போட சொல்லிக் கொடுப்பது, அப்பகுதியில் அமைந்திருக்கும் பள்ளியில் ஒருவேளை ஆசிரியர் வரவில்லையென்றால், தானே போய் வகுப்பெடுப்பது என்று பல பணிகளை பாண்டியன் செய்திருக்கிறார்.

ரெட்டியூர் பாண்டியனுக்கு  1983 ஆம் ஆண்டு இளையபெருமாள் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவருடன் சேர்ந்து பல பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆதிதிராவிட நலச் சங்கத்தின் தலைவராக இளையபெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிறகு, பறையடிக்கும் வேலையை யாரும் செய்யக்கூடாது என்று தீர்மானம் போடப்படுகிறது. குருங்குடி வன்னியர்கள் நடத்தும் திருவிழாவில் தீர்மானத்தை மீறி அதிக கூலி பெற்றுக் கொண்டு பறையடித்ததைக் கண்டித்த போராட்டத்தில், பாண்டியன் காவல் துறையினரால் கொல்லப்பட்டார். அவருடைய இந்தத் தியாகம் சமூக அவலத்தைப் போக்குவதற்கானது என்பது உண்மை. ஆனால் அதைப் பதிவு செய்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது, அதற்காகக் கடுமையாக உழைத்து தரவுகளைத் தேடுவது என்னும் கடினமான பணியை மேற்கொண்டது பூவிழியனின் சிறப்பு. அவர் சேகரித்து தந்திதிருக்கும் ஆவணங்கள், அந்த உழைப்பிற்குச் சான்று பகர்கின்றன.

"பரிணாமம்' என்னும் தலித் வரலாற்றுக் காலாண்டிதழையும் பூவிழியன் நடத்தி வருகிறார். அதிலும் மீட்சி பெறும் வரலாறுகளை எழுதி வருகிறார். தலித் எழுத்து தற்பொழுது எப்படி இருக்கிறது என்னும் வினாவிற்கு, “அதிகாரத்தை நோக்கிய எழுத்து என்று தலித் எழுத்துகளை எழுதியவர்கள், அதை தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். புதிதாக எழுதவரும் யாரையும் அவர்கள் ஊக்குவிப்பதில்லை. இதுதான் இன்றைய நிலை என்று கூறுகிறார்.

தலித் எழுத்து மற்றும் கலை வகைமைகளில் ஒவ்வொருவரும் ஒரு திட்டத்துடன் தலித் விடுதலைக்கான பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். நுண்வரலாறுகளை உருவாக்கி, அதன்மூலம் தலித் எழுச்சிக்கான பங்களிப்பை ஆற்றி வரும் பூவிழியனின் பணிகள் பாராட்டுக்குரியவை.                      l

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்!

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்! பூவிழியன் சனவரி 10,2017, ஆணவக்கொலை வழக்கில் முதன் முறையாக மரண தண்டனை விதிக்கப்...