Saturday, 25 November 2017

தீண்டாத சாதி தீண்டும் போலீஸ்

தீண்டாத சாதி தீண்டும் போலீஸ்

பூவிழியன்


‘ஒரு மனிதன் – ஒரு மதிப்பு’ என்பது தான் சனநாயகத்தின் ஆன்மா. துரதிருஷ்ட்டவசமாக சனநாயகம் தனது அரசியல் கட்டமைப்பில் மட்டுமே ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதுடன் நின்றுவிட்டது. மேலும் ஒருமைப்பாட்டின் கட்டமைப்பை வடிவமைக்க சனநாயகத்தின் ஆன்மா தவறிவிட்டது” என்று தனது வேதனையை வெளிப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர்.
தலித்துகளின் போராட்ட வாழ்நாட்களில் எதிர்கொள்கிற எதிர்ப்புகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் மேற்கண்ட வரிகள் இன்றும் பொருந்திப்போவது பொறுக்க முடியாத வலிகளை விதைக்கிறது. சாதியச்சமூகம் ஏற்றத்தாழ்வு மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சாதியக்கட்டமைப்புத்தான் சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்து சிதைத்துவிடுகிறது. ஆனால் மக்களால் உருவாக்கப்பட்டிருக்கிற அரசும் அதன் கீழ் இயங்குகிற நிர்வாகக்கட்டமைப்புகளும் சாதியச் சிந்தனைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒன்றாக இருக்கவேண்டும் என்பது அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பினை எரித்துச் சாம்பலாக்குகிற ஒன்றாக அமைந்துவிடுகிறது காவல்துறை தலித்துகள் மீது குறிவைத்துத் தொடுக்கும் தாக்குதலின் வன்மம்.

சட்டம் ஒழுங்கை நிர்வாகம் செய்வதன் வாயிலாக மண்ணின் அமைதியையும் மக்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்வதுதான் காவல்துறை. ஆனால், காவல்துறையின் அதிகாரப் போக்கும் ஆணவப்பண்பும் சேரிகளை மட்டும் சிதைப்பது என்பது அந்தப் பாதுகாப்புத்துறை மீதான நம்பிக்கையைக் கரைத்துவிடுகிறது. அடக்குமுறை – தீண்டாமை – பொருளாதார வறட்சி ஆகியவற்றிற்குள் தொடர்ந்து சுழல்வதற்கான சூழலைத் தலித்துகள் மீது வலிந்து திணிக்கிறது. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாதபடி வன்முறைகளாலும் கொடூர அணுகுமுறைகளாலும் எளிய ஒடுக்கப்பட்ட மக்களைத் தீண்டிக்கொண்டே இயங்குகிறது போலீஸ். சாதிய மோதல் – கலவரம் – சமூக அமைதி – பதற்றம் ஆகிய சொல்லாடல்களைக் கையில் வைத்துக்கொண்டு மென்மையான செயல்பாட்டிற்குள் நுழையாமல் சின்ன சின்ன தலித் நிகழ்வுகளைக்கூடத் துப்பாக்கிச்சூட்டைக் கொண்டே கட்டுப்படுத்துகிறது இத்துறை. அதனால்தான் இந்தப் பார்வை நமக்குள் துளிர்விடுகிறது. இதற்கு எண்ணிலடங்காத் தலித் விரோதப்போக்குகளையும் போலீஸ் தாக்குதல்களையும் மக்கள் முன் குவிக்க முடியும்.

சூலை 23, 1999இல் திருநெல்வேலியில் மாஞ்சோலைத் தோட்டத்தொழிலாளர்கள் 17 பேர் தாமிரப்பரணி ஆற்றில் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டார்கள். இதில் 11 பேர் தலித்துகள். தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேரணியாகச் சென்றதுதான் அவர்கள் செய்த தவறு. இதற்காக 17 பேரைப் பலிக்கொண்டது காவல்துறை. நீதிபதி மோகன் தலைமையின் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டது. அதன் தீர்ப்பும் போலீசைத்தான் காப்பாற்றியதே தவிர மக்களை அல்ல. அதாவது காவல்துறை தடியடி நடத்தவில்லையென்றால் பேரணியில் ஈடுபட்டவர்களால் திருநெல்வேலி நகரமே பெருத்த சேதத்தைச் சந்தித்திருக்கும் எனக் கூறி இறப்பை நியாயப்படுத்தியது.

செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 தலித்துகள் பிணமாக்கப்பட்டார்கள். நெஞ்சை உலுக்கும் கொடூரத்தாக்குதல் அது. இறந்த விலங்குகளைச் சவுக்குப் போன்ற மரத்தில் கட்டித்தூக்கிச் செல்வது போல் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களை எடுத்துச்செல்லும் வன்மம் – நாயைத்தூக்கி எறிவது போல் போலீஸ் வாகனத்திற்குள் வீசும் காட்சிகள் இன்றும் மனதிற்குள் இனம்புரியாத ஒருவிதப் பதற் றத்தையே பரவச் செய்கிறது.

தியாகி இம்மானு வேல் சேகரன் நினைவு நாளான அன்று ஜான்பாண்டியனைக் காவல்துறை கைது செய்தது. இதனைக் கண்டித்தும் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு நினைவஞ்சலி செலுத்த அவரை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து அவரது அமைப்பினர் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவ்வளவுதான் இதற்காகத் தடியடி – துப்பாக்கிச்சூடு. நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் போடப்பட்டது. ஆட்சியாளர் களையும் காவல்துறையினரையும் வழக்கம்போல் குற்றமற்றவர்களாகக் காண்பித்து தலித்துகளின் இறப்பை மதிக்காமல் தீர்ப்பை முடித்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது குண்டுப்பட்டி. 1998 நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்பதற்காகக் குண்டுப்பட்டியில் உள்ள விடுதலை நகர், பாரதிநகர் பி.காலனி ஆகிய இரண்டு பகுதிகளை போலீஸ் கும்பல் அடித்து நொறுக்கியது. சுமார் 50 இலட்சம் மதிப்பிலான சொத்துகள் சூறையாடப்பட்டன. 16 பெண்கள் உட்பட 32 தலித்துகள் காவல்துறையினரால் பிடித்துச்செல்லப்பட்டு இரண்டு வாரங்கள் சட்ட விரோதக்காவலில் அடைத்து வைக்கப்பட்டனர். போலீசின் கொலைவெறித் தாக்குதலில் மூன்று பெண்கள் கருச்சிதைவுக்கு உள்ளானார்கள். குழந்தைகள், பெண்கள் என எவரையும் விட்டு விடாமல் உச்சக்கட்ட தாக்குதலைத் தொடுத்தது போலீஸ். தேர்தல் புறக்கணிப்புச் செய்ததற்காகத் தலித்துகள் இவ்வளவு பெரிய கொடுமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்கிற போது மனது கனக்கிறது.
சூன் 20, 1992இல் தருமபுரி மாவட்டம் வாச்சாத்திக் கிராமத்தையே காவல்துறையினர் நாசப்படுத்தியதையும் விசாரணை என்கிற பெயரில் 18 பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்து சிதைத்ததையும் நினைத்தால் இன்றும் உயிருக்குள் வலியை ஊற்றுகிறது அதன் வேதனை.

மலைக்கிராமமான வாச்சாத்தியில் வசிக்கும் பழங்குடி மக்கள் சந்தன மரங்களை வெட்டிப் பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளடக்கிய காவல்துறையினரின் கூட்டுநடவடிக்கையில் தான் இந்த நாற்றமெடுக்கும் செயல் நடந்தேறியது. இந்த வழக்கு மையப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றப்பட்டு இதனை விசாரிக்க தனி நீதிமன்றமும் உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 28, 2011 அன்று தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குற்றம் சுமத்தப்பட்ட 269 பேரில் தற்போது உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் என உறுதிசெய்தது. இதில் 126 பேர் வனத்துறையினர், 84 பேர் காவல்துறையினர், 5 பேர் வருவாய்த்துறையினர். இவர்களுக்கு ஒரு வருடம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
காவல்துறை இதன்பிறகாவது மானம் மரியாதை யோடு தலித்துகளிடத்தில் நடந்துகொண்டதா என்றால் ஏமாற்றமே எதிரே காத்திருக்கும். சூன் 3, 1992இல் சிதம்பரம் அருகிலுள்ள அண்ணா மலை நகர் காவல்நிலையத்தில் வைத்து பத்மினி என்கிற தலித் பெண்ணைப் பாலியல் வன்புணர்ச்சி செய்தனர் போலீசார். இப்படித் தலித் விரோதப்போக்கில் காவல்துறையின் தொடர் அத்துமீறல் தேசிய அவமானத்தைக் காவல்துறை மீது கட்டியெழுப்பியது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர்கள் கவலைக்கொண்டதாக அறிவிக்கவில்லை அடுத்தடுத்துத் தொடரும் செயல்கள்.

1993இல் விழுப்புரம் மாவட்டம் அத்தியூரைச் சார்ந்த விஜயாவை விசாரணை என்கிற பெயரில் அழைத்துச்சென்றது புதுச்சேரிக் காவல்துறை. அப்போது பணியில் இருந்த ஆறு போலீசாரும் மாறி மாறி விஜயாவை வன்புணர்ச்சி செய்தனர். இந்தக் குற்றம் குறித்துத் தொடரப்பட்ட வழக்கில் ஆறு போலீசாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். அதே மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள மண்டபம் கிராமத்தைச் சார்ந்த நான்கு பழங்குடி இருளர் பெண்களை விசாரணை என்கிற பெயரில் அழைத்துச்சென்ற திருக்கோவிலூர் போலீசார் 26.11.2011 அன்று இரவு முழுவதும் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி காவல்துறை மீது அசிங்கத்தை வாரி அப்பிக்கொண்டனர் இவர்கள்.

விடுதலைச் சிறுத்தைகளின் “அடங்க மறு – அத்து மீறு – திமிறி எழு – திருப்பி அடி” என்கிற மைய முழக்கம் வடிவம் பெறுவதற்கு காவல்துறையின் அடக்குமுறைதான் வேராக வெளிப்பட்டது. பிப்ரவரி 22, 1994இல் விடுதலைச் சிறுத்தைகள் மதுரையில் அறிவித்த ரயில் மறியல் போராட்டம் தான் இதற்கான சூழலை அடைகாத்தது. மராட்டிய மாநிலத்தில் மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்டுவதற்குத் தடையாக இருந்த சிவசேனாவைக் கண்டித்து மேற்கொள்ளப்பட்டது அந்தப் போராட்டம். அவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருந்த ரயில் மறியல் போராட்டத்தில் போலீசார் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இயக்கப் பெண்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோரின் மண்டை உடைக்கப்பட்டு ரத்தம் வழிந்தோடியது. 350க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து வழக்குப்போட்டனர். ஆடைகளின் நிறத்தை ரத்தம் மாற்றிய நிலையிலும் அவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. ரயில் நிலையமே போர்க்களமாகக் காட்சியளித்தது. அந்த உச்சநிலை கொடூரத்தாக்குதலை நேரில் கண்டு கொதிப்படைந்த அவ்வமைப்பில் அமைப்பாளர் இரா.திருமாவளவன் அப்போது எழுதிய முழக்கங்கள்தான் அவை. விடுதலைச் சிறுத்தைகளின் வீரியத்தையும் அடிமைத்தனத்திற்கு எதிரான கலகக்குரலையும் மக்களிடத்தில் சுமந்து சென்றதில் இந்த வரிகளின் பங்களிப்பு முதன்மையானது.

அக்டோபர் 10, 1994 இல் செங்கல்பட்டுத் துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர் காரணை கிராமத்தைச் சார்ந்த தலித் மக்கள். தங்களது பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்பது தான் அவர்களது நீண்ட நாள் கோரிக்கை. அரசு அதிகாரிகளால் அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வந்ததால் போராட்ட வடிவத்தை மாற்றி வீதிக்கு வந்தனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோர் சுட்டுவீழ்த்தப்பட்டனர். அதேபோன்று சனவரி 20, 1995 அன்று தலித் குடியிருப்புகள் சூறையாடப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதற்காக போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் திட்டக்குடி சண்முகம், தொளார் ரமேஷ் ஆகியோர் துப்பாக்கிக்குண்டுக்கு இரையாயினர்.

கொடியங்குளத்தில் ஆகஸ்ட் 31, 1995 இல் போலீஸ் நடத்திய தொடர்த்தாக்குதல் என்பது நெஞ்சில் ஆறாத காயங்களை இன்றும் அவிழ்த்துவிடுகிறது. அந்நிய நாட்டின் மீது படையெடுப்பதைப் போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சோதனை என்கிற பெயரில் தலித் பகுதிக்குள் நுழைந்தனர். பெண்கள், குழந்தைகள் என வகைப்படுத்தி யாரையும் ஒதுக்காமல் அனைவரின் மீதும் கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்தனர். தலித் குடியிருப்புகளையே தரைமட்டமாக்கும் எண்ண ஓட்டத்தின் விளைவாய்க் கண்ணில் தென்பட்டவற்றை எல்லாம் அடித்து நொறுக்கினர். பொருட்களையெல்லாம் சூறையாடினர். இதற்கும் நீதிபதி கோமதிநாயகம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அறிவிக்கப்பட்டது. மற்றவை வழக்கம் போல் என்பதைப்போல் எல்லாம் நடந்து முடிந்தது.
சனவரி 16, 1996 இல் அருப்புக்கோட்டையில் உள்ள சத்யவாணி முத்து காலனியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சாதி இந்துக்கள் விழாவைச் சீர்குலைக்கிற செயல்களில் இறங்கினர். அப்போது கட்டவிழ்க்கப்பட்ட சாதிவெறியாட்டத்தில் தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. குடிசைகளைக் கொளுத்திவிட்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். இந்தச் சாதிய கலவரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். சமீபத்தில் திருநாள்கொண்டச்சேரி தாக்குதலும் எனக் காட்சிகள் தொடர்கின்றன. இப்படி தலித்துகளுக்கும் காவல்துறைக்கும் நிகழ்ந்த முரண்பாட்டு நிகழ்வுகளை ஏரளாமாக வரிசைப்படுத்த முடியும்.

இளவரசன் – திவ்யா காதலையொட்டி நவம்பர் 7, 2012இல் தருமபுரி நாயக்கன்கொட்டாய், அண்ணா நகர் உள்ளிட்ட மூன்று தலித் கிராமங்கள் மாலை நேர வெளிச்சத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. பெட்ரோல் குண்டுகள் வீசி கான்கிரீட் வீடுகள் தகர்க்கப்பட்டன. மூன்று மணி நேரத் தாக்குதலின் உச்சமாய் குடிசைகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தக் கட்டுப்பாடற்ற சாதிய வன்முறையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர – கலவரக்கும்பலை விரட்டியடிக்க ஏன் காவல்துறையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. குறைந்தபட்சம் தடியடிக்கான முயற்சிகள் கூட எடுக்கப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் தலித் மக்கள் வழிபடக்கூடிய தெய்வம் மாரியம்மன். அந்தத் சாமியைத் தேரில் வைத்துப் பொதுச்சாலையின் வழியே ஊர்வலமாகக் கொண்டு வருவதற்குக் கடந்த சில ஆண்டுகளாகச் சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 16, 2015 அன்று தேர் இழுப்பதற்கு அரசு அதிகாரிகளின் அமைதிப்பேச்சுவார்த்தையின் முடிவில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சுதந்திரத் தினத்தன்று காவல்துறை முன்னிலையில் எப்படிச் சேரி சாம்பலாக்கப்பட்டது. பெட்ரோல் குண்டுகள் வீசி தேர் எரிக்கப்பட்டது. இதில் போலீசாரும் தாக்குதலுக்கு உள்ளான சூழலில் கூட அவர்கள் மீது ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட வில்லை.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் (1989) பலவீனப் படுத்தப்படுவதும் வழக்குகள் நீர்த்துப்போய் எதிரிகள் வெற்றியைச் சுமப்பதற்கும் காவல்துறையின் பங்களிப்பு வலிமையானது. உதாரணமாக 1990 – 2000 வரை தமிழகத்தில் இருந்த காவல்நிலையங்களின் எண்ணிக்கை 13000. இதில் தலித் வன்கொடுமைகள் குறித்துப் பதிவான மொத்த வழக்குகள் 7362. இவற்றில் பல்வேறு காரணங்களைச் சொல்லி தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகள் 3399. மீதமுள்ள வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை வெறும் 164. ஒவ்வொரு வருடமும் ஒரு காவல்நிலையத்திற்கு ஒரு வழக்கு என வைத்துக்கொண்டாலே வருடத்திற்கு 13000 வழக்குகள். ஆனால் 11 ஆண்டுகளுக்குச் சேர்த்தே 7362 தான் என்றால் வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் குறைந்துவிட்டது என்று பொருளா? அல்லது வன்கொடுமைத் தடு¢ப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவதில்லையா? என்கிற காரணத்தை தலித் செயல்பாட்டாளர்கள் உணர்வார்கள். ஒரு வழக்குப்பதிவிற்கு எத்தனை போராட்டங்களையும் மனுக்களையும் உருவாக்கவேண்டியுள்ளது என்பதை அவர்களின் அனுபவமே உணர்த்தும்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளாக மாறுகிற போக்குப் பெரும் எண்ணிக்கையில் தலித்துகளிடத் திலே நிகழ்கிறது. தலித்துகள் என்றால் கேட்பாரற்றுக் கிடக்கும் சமூகம் – பொதுத்தளத்தில் புறக்கணிக்கப் பட்டவர்கள். அதனால் இவர்கள் மீது எந்தவொரு வன்முறைத் தாக்குதலையும் அச்சமின்றி அவிழ்த்து விடலாம் என்கிற சாதியப்போக்கும் ஆதிக்க மனநிலையும் தான் இதன் மூலக்கூறு. உங்களின் நண்பன் எனச் சொல்லும் காவல்துறை தலித்துகள் நீங்கலாக எனத் தோற்றமளிப்பதை இங்கே சுட்டிக்காட்டப்பட்ட சில நிகழ்வுகளே அதை வழிமொழிகிறது. இது சாதி இந்துகளுக்கு சாதகமாக வலிமைப்பெற்று வருவதைக் கணக்கில் கொள்ளவேண்டும். மேலும் காவல்துறை தனது மென்மையான அணுகுமுறையால் தலித்துகளைத் தீண்டாமல் வன்முறைகளால் மட்டுமே தீண்டுவது எந்த ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு என்பதை காலம் வரையும் ஓவியத்தில் காட்சியாய் இடம்பெறும் என்பது மட்டும் உறுதி…

அதிர்வெண்
பிப்ரவரி 2016

No comments:

Post a Comment

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்!

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்! பூவிழியன் சனவரி 10,2017, ஆணவக்கொலை வழக்கில் முதன் முறையாக மரண தண்டனை விதிக்கப்...