மீண்டெழுமா இரட்டை வாக்குரிமை!
அம்பேத்கரின் தனித்தொகுதியும்
காந்தியின் மரண அரசியலும்
பூவிழியன்
ஒருவர் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்தும்படி செய்வது அதிகாரம்தான். அவ்வாறிருப்பதால் அதிகாரத்தை ஒழித்துக்கட்ட அதிகாரம் தேவை” என்கிறார் டாக்டர் அம்பேத்கர். இன்றை அரசியல் நகர்வுநிலையில் இந்துத்துவத்தின் மேலாதிக்கமும் சாதியக்கட்டமைப்பும் ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்குவது என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ஆச்சரியமும் அதிர்ச்சியும் தவிர்க்கப்பட்டு ஆதிக்க மனநிலை தன்னெழுச்சி பெற்றுவருகிறது. ஒருபுறம், டாக்டர் அம்பேத்கர் லண்டனில் வசித்த (1921 – 1922) வீட்டை 31 கோடிக்கு விலைக்கு வாங்கி, சர்வதேச நினைவகமாக மாற்றி பாதுகாப்பதாகச் சொல்லிக்கொள்கிறது பாரதிய சனதா அரசு. மற்றொரு நிலையில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘அம்பேத்கர் மாணவர் சங்கத்திற்கு’ எதிராகச் செயல்பட்டு, சமூக ஒதுக்குதல் முறையைக் கல்விநிறுவனத்தில் பின்பற்றி ஐந்து தலித் மாணவர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களின் மீது தீண்டாமையைத் திணித்தது. இதற்குக் அடித்தளமிட்ட பி.ஜே.பி.யின் மாணவர் அமைப்பான ‘அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித்’ உடன் இணைந்து செயல்பட்ட பி.ஜே.பி.யின் மத்திய அமைச்சர்களின் சாதிய உணர்வுத்திணிப்பால் ரோகித் வெமுலா என்கிற முனைவர் பட்ட ஆய்வு மாணவரின் மரணமே சனவரி 17, 2016 அன்று மிஞ்சியது.
இதுதவிர, நாகை மாவட்டம் திருநாள்கொண்டச்சேரிக் கிராமத்தில் இறந்த தலித் முதியவர் உடலைப் பொதுப்பாதை வழியே எடுத்துச்செல்லலாம் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டபோதிலும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்த மாவட்ட நிர்வாகம் காவல்துறையினரைக் கொண்டு தலித்துகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தி அவர்களைக் கைது செய்தது. பின், தலித் பிணத்தைப் பறித்து – காவல்துறையினரைக் கொண்டு மூன்று கிலோ மீட்டர் தூக்கிச்சென்று அரசே அடக்கம் செய்த அரசப் பயங்கரவாதமும் அரச வன்முறையும் சனவரி 6, 2016 அன்று அரங்கேறியது. இப்படிச் சாதிவெறியர்களுக்குப் பயந்து, பணிந்து செயல்பட்ட மாவட்ட நிர்வாகம், தலித் துகளை ஒடுக்குவதற்காக உயர்நீதிமன்ற ஆணையையே கொச்சைப்படுத்தக்கூடிய அளவிற்குத் துணிந்தது. இதனால், நீதிமன்றத்தின் மீது தலித்துகளுக்கு இருந்த மரியாதை விலக்கிக்கொள்ளப்பட்டதோடு, குற்றவாளிகளான சாதிவெறியர்களுக்கு நீதிமன்றத்தின் மீது குவிந்திருந்த தண்டனை குறித்த அச்சத்தையும் அது சிதைத்துவிட்டது. சுதந்திர இந்தியாவில் அரசு – நீதித்துறை – ஆட்சியாளர்கள் ஆகிய ஆளுமையின் குறியீட்டு வடிவங்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்பதையே இவை உறுதிப்படுத்துகிறது. ஆகவே, நமக்கான பாதுகாப்பையும் சனநாயகத்தையும் எங்கிருந்து பெறுவது? என்கிற கேள்வி நமக்குள் கனத்துக் கிடக்கிறது.
விடுதலை இந்தியாவாக மாறுவதற்கு முன்பு, இங்கு எழுப்பப்பட்ட தீண்டப்படாதோர் அரசியல் கோரிக்கைகள் – அதற்கு எதிராக வெடித்த சிக்கல்கள் – காந்தியின் பச்சைத்துரோக நடவடிக்கைகள் – டாக்டர் அம்பேத்கரின் எதிர்த்தாக்குதல்கள் – அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் ஆகியவை இன்றும் தலித்துகளின் கவனத்தை அசைக்க வேண்டியவை. லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளால் வகுப்புப்பிரச்சினைக்கு ஓர் உடன்பாடான தீர்வு காண இயலவில்லை. இந்த மாநாட்டு அனுபவங்களை அம்பேத்கர் விவரிக்கும் போது, “வட்டமேசை மாநாடு தோல்வியடைந்தது என்றால் அதற்கு முற்றிலும் திரு.காந்தியின் தவறே காரணம். இது மிக முக்கியமான மாநாடு. இந்தியாவின் பலதரப்பட்ட நலன்களை இணங்க வைக்கும் பல்வேறு இன மக்களின் ஆர்வ விருப்பங்களை, உகந்த அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கென்று, வகுப்பதற்கென்று கூட்டப்பட்ட மாநாடு இது. இத்தகைய சிறப்புமிக்க ஒரு மாநாட்டுக்கு திரு. காந்தியைவிடவும் அறியாமையில் மூழ்கிப்போன, பெரிதும் நியாயமற்ற வேறொரு பிரதிநிதியை அனுப்பியிருக்க முடியாது. அந்த அளவிற்கு திரு.காந்தி அரசியல் சாசன சட்டத்தைப் பற்றியோ, நிதி விவகாரங்களைப் பற்றியோ அறவே அறியாதவர், புரியாதவர். உண்மையைக்கூறுவதாயின், நாட்டின், மக்களின், சமுதாயத்தின் இடர்பாடுகளுக்கு, இன்னல்களுக்குத் தீர்வு காணுவதில் அவரது பங்கு பூஜ்யமாகவே இருந்து வந்திருக்கிறது” என்றார்.
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு இந்தியா திரும்பியதும் திரு.காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். எரவாடா சிறைக்குச் சென்ற பிறகும் கூட, பிரிட்டிஷ் அரசு ஒப்புக்கொண்ட தனிப்பிரதிநிதித்துவ உரிமை தீண்டப்படாதோருக்குக் கிடைத்து விடாதபடி தடுக்க அவர் மறந்துவிடவில்லை. அந்த வட்டமேசை மாநாட்டிலே அவர் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். “என் உயிரைக் கொடுத்தேனும் இதை எதிர்ப்பேன்” என்று அப்போது சூளுரைத்தார். மேலும், “தனித்தொகுதி முறையானது இந்துசமயத்தை உடைத்துத் தகர்த்துக் கூறுபோட்டுவிடும்” என்று வெளிப்படையாகக் கூறினார். அத்துடன் நின்றுவிடாமல் “தனித்தொகுதி முறையின் அரசியல் முக்கியத்துவம் முக்கியமானதே என்றாலும் சமயப்பிரச்சினையுடன் ஒப்பிடும் போது அந்த முக்கியத்துவம் ஒடுங்கி, சுருங்கி குன்றிவிடுகிறது” என இந்துத்துவத்தின் மீதான பாசத்தைப் பதிப்பதன் வாயிலாக ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் கோரிக்கையைத் தன் மரணத்தால் முடக்கிவிட முயன்றார் காந்தி.
எரவாடா சிறையில் இருந்து, இந்திய மந்திரியாக இருந்த சர் சாமுவேல்ஹோருக்கு 1932 மார்ச் 11 அன்று ஒரு கடிதத்தை எழுதுகிறார் காந்தி. அதில், “ திட்டமிட்டு நூற்றாண்டுகள் காலமாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளுக்கு, இழிவுகளுக்கு, அவமதிப்புகளுக்கு இந்துக்கள் என்னத்தான் பிராயசித்தம் செய்தாலும் அதனை ஈடுகட்ட முடியாது என்பதை உணர்கிறேன். ஆனால் இம்மக்கள் கசக்கிப் பிழியப்பட்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அல்லல்பட்டு ஆற்றாது விடும் கண்ணீருக்குத் தனித்தொகுதி முறை ஒரு பரிகார மாகவோ, நோய்த்தீர்க்கும் மருந்தாகவோ இருக்கமுடியாது என்பதை அறிவேன். இருப்பினும் தனித்தொகுதிகள் அமைப்பதென அரசு முடிவுசெய்தால் அதனை எதிர்த்து நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்” என மன்னர்பிரான் அரசாங்கத்துக்குத் தெரிவித்தார்.
இதுகுறித்து, செப்டம்பர் 8,1932இல் பிரதமர் அவர்கள் காந்திக்குப் பதில் ஒன்றை எழுதுகிறார். அதில், “தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் அமைப்புகளிலிருந்து எங்களுக்கு எண்ணற்ற முறையீடுகள் வந்தன. அவர்கள் எத்தகைய கொடிய சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகி வேதனையும் வாதனையும் பட்டுவருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை நீங்களும் மிகப்பல சந்தர்ப்பங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான், சட்டமன்றங்களில் நியாயமான சதவிகிதத்தில் பிரதிநிதித்தும் பெறுவதற்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குள்ள உரிமைகளைப் பாது காப்பது எங்கள் கடமை என உணர்ந்தோம்” என அதில் குறிப்பிட்டார். மேலும், “குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை அவர்கள் தாங்களே தேர்ந்தெடுத்து சட்ட மன்றங்களுக்கு அனுப்புவது அவசியம் என்று நாங்கள் உணர்ந்தோம். அப்போது தான் அவர்கள் தங்கள் மனக்குறைகளையும் லட்சியங்களையும் எடுத்துரைக்க முடியும். சட்டமன்றத்திற்கு வெளியே தங்களுக்கு எதிராக முடிவுகள் எடுப்பதைத் தடுக்க முடியும்.” சுருக்கமாகக் கூறினால் “தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தாழ்த்தப்பட்ட மக்களே பேசும்படியான நிலையில் அவர்களை வைக்க முடியும் என்று கருதினோம்” என்று காந்திக்குப் பதில் அளித்தார்.
பிரதமர் முடிவில் மாற்றம் நிகழப்போவதில்லை என்பதை உணர்ந்துகொண்ட காந்தி, “தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அளவுக்கு அதிகமாகப் பிரதிநிதித்துவம் கொடுப்பதை நான் எதிர்க்கவில்லை. இந்துக்களாக அவர்கள் நீடிக்கும்வரை இந்துமதப் பிடியிலிருந்து அவர்கள் பிரிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறேன்” என்று தனது நயவஞ்சகத்தைக் கக்கினார். இருப்பினும் அவர் தொடங்கிய உண்ணாவிரதத்தை(1932 செப்டம்பர் 20) நிறுத்தி அவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற பதற்றம் இந்திய அரசியல் களத்தை வெப்பமாக்கியது. இந்நிலையை அம்பேத்கர் விளக்கும் போது, “என் முன்னால் இரண்டு வெவ்வேறான பணிகள், கடமைசார் பிரச்சினைகள் இருந்தன. மனிதத்தன்மையுடன் மரணத்திலிருந்து காந்தியைக் காப்பாற்றும் கடமை ஒருபுறம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரதமர் வழங்க முன் வந்துள்ள அரசியல் உரிமைகளை அவர்களுக்குக் காப்பாற்றித்தரும் கடமை மற்றொரு புறம். இந்நிலையில் மனிதநேயத்தின் கட்டளையை, அறைகூவலை ஏற்க முன்வந்தேன். திரு. காந்தி மனநிறைவை அடையும் வகையில் வகுப்புத்தீர்ப்பு மாற்றப்படுவதற்கு இணங்கினேன். இவ்வாறு உருவான உடன்பாடே புனா ஒப்பந்தம்” என்று தனது மனக்குமுறை வெளிப்படுத்தினார் அம்பேத்கர்.
புனா ஒப்பந்தம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்த அதேசமயம் இரட்டை வாக்குரிமையைப் பறித்துவிட்டது. இடங்கள் அதிகரிப்பு என்பது இரட்டை வாக்குரிமை இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. வகுப்புத்தீர்ப்பு வழங்கிய இரண்டாவது வாக்கு விலைமதிப்பற்ற தனிச்சலுகையாகும். ஓர் அரசியல் ஆயுதம் என்ற முறையில் அதன் மதிப்பு கணக்கிடற்கரியது என்றார் அம்பேத்கர். அதாவது தாழ்த்தப்பட்டோரை இந்துக்களின் அடிமை நுகத்தடியில் இருந்து விடுவிப்பதே இரட்டை வாக்குரிமையின் நோக்கம். ஆனால் புனா ஒப்பந்தம் இதற்கு மாறாக அவர்களை இந்துக்களின் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் திட்டம் கொண்டது என்றார்.
இன்றைய தேர்தல்களத்தின் தனித்தொகுதி முறையில் ஒருவர் போட்டியிடுவதற்கு ‘தாழ்த்தப்பட்டவர்’ என்கிற ஒற்றை அளவுகோல் மட்டுமே பின்பற்றப்படுகிறது. அவர், தாழ்த்தப்பட்டோர் தலைமையில் இயங்கும் கட்சியிலிருந்து மட்டுமே முன்மொழிய வேண்டும் எனும் கட்டுப்பாட்டிற்குள் நுழையவில்லை. அதனால் சாதி இந்துக்களின் தலைமையில் இயங்கக்கூடிய கட்சியில் இருந்தும் ஒரு தலித் களமிறக்கப்படுகிற ஆபத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஆகையால், தலித் விடுதலைக்கான போராட்டக்களத்தைக் கட்டமைக்கின்ற தலித் கட்சியின் வேட்பாளரும் தலித் விரோதப்போக்கை கொண்டுள்ள சாதியவாத சக்திகளின் சார்பாக ஒரு தலித் விலைக்கு வாங்கப்பட்டு அவருக்கு எதிராகக் களமிறக்கப்படுகிற வன்மமும் இதில் அமைந்துள்ளது. தலித் மக்களின் உண்மைப்பிரதிநிதி இதனால் தோற்கடிக்கப்பட்டு சாதி இந்துகளின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தை நிரப்புகிற ஆபத்து குவிகிறது. இதுமட்டுமல்லாமல், தனித்தொகுதியில் இருந்து வெற்றி பெறுகிற தலித் அல்லாத தலைமையின் உறுப்பினர்கள் தலித்துகளின் மேம்பாட்டிற்காகக் குரல்கொடுப்பதை மறந்து, தன்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய கட்சியின் தலைமைக்கே விசுவாசமாக இருக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தனித்தொகுதி முறையின் நோக்கம் சிதைக்கப்பட்டு, தலித்துகளின் கோரிக்கைகள் முன்வைக்கப்படாமல், விவாதிக்கப்படாமல் முடக்கப்படுவதால் அவர்களால் சமூக பொருளாதார மாற்றத்தை நுகர முடியாமல் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். இப்படித்தான் நிகழும் என்பதை அப்போதே எச்சரித்தார் அம்பேத்கர். ஆகவே, இரட்டை வாக்குரிமையைக் கைப்பற்றுவதன் வாயிலாகத்தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். அதன் வழியேதான் சமூகப் பொருளாதார மாற்றமட்டுமல்லாமல் நமது விடுதலையையும் வென்றெடுக்க இயலும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரம் எவ்வளவு பரந்ததாக, விரிந்ததாக இருந்தாலும் அவர்கள் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு இந்துக்களைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தால், அவர்கள் ஆதரவை நம்பியிருக்க வேண்டியிருந்தால் அந்த அதிகாரத்தால் எந்தப் பயனும் இருக்காது என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அம்பேத்கர். காந்தி தனது மரணத்தை முன்நிறுத்தி இரட்டை வாக்குரிமையைப் பறித்தார் என்றால் தலித்துகள் அதே மரணத்தை முன்னிறுத்தி இரட்டை வாக்குரிமையை நடைமுறைப்படுத்த களம் அமைக்கவேண்டும்.
நமது தலைநிமிர்விற்கான கடைசி ஆயுதம் அதுதான் என்பதை எப்போது உணரப்போகிறோம். இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையை முன்னெடுக்கும் அரசியலை எப்போது முழங்கப்போகிறோம்?
ஆசிரியர்-அதிர்வெண்
பிப்ரவரி 2016
No comments:
Post a Comment