Wednesday, 15 November 2017

மெர்சல் அரசியல்: யார் வன்முறையாளர்கள்?


மெர்சல் அரசியல்:

யார் வன்முறையாளர்கள்?



பூவிழியன்


“பல இந்துகளுக்கு காந்தி ஒரு தெய்வ வடிவம். அதுவும் அவர் வாயைத் திறந்துவிட்டார் என்றால் அந்த வாக்குவாதமே முடிந்துபோய் விடவேண்டும். அதற்கு மேலாக எந்த நாயும் குரைக்கக் கூடாது என்கிற அளவுக்குப் போற்றப்படுகிறார் அவர்” என்றார் டாக்டர் அம்பேத்கர். இதன் மையம் பல தருணங்களின் உண்மையை நமக்கு உணர்த்திவிடுகிறது. இப்போதும் அப்படித்தான்.

“7 சதவீதம் ஜி.எஸ்.டி வாங்குகிற சிங்கப்பூரில் மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தரப்போ, 28 சதவீதம் ஜி.எஸ்.டி வாங்குகிற நம்ம அரசாங்கத்தாலே ஏன் மருத்துவத்தை இலவசமா தரமுடியல? மெடிசனுக்கு 12 சதவீதம், தாய்மார்களின் தாலிகளை அறுக்கிற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி கிடையாதாம். நம்ம நாட்டினுடைய நம்பர் 1 அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லை. என்ன தான் காரணம்னு கேட்டா 7 வருஷமா சப்ளை பண்ணுரவனுக்குப் பணம் கொடுக்கல. இன்னொரு கவர்மெண்ட் ஆஸ்பிட்டல்ல டயாலிசிஸ் செய்கிறபோது கரண்ட் கட்டாயிடுச்சு. 4 பேரு செத்தே போயிட்டாங்க. கேவலம் அங்கே பவர் பேக்கப் இல்ல. இங்க்பேட்டரில் வைச்சிருந்த ஒரு குழந்தையை பெரிச்சாலி கடிச்சி இறந்தத நம்ம ஊர்ல பாத்திருக்கோம். அதனால, ஜனங்க நோயைப் பார்த்துப் பயப்படுவதைவிட நம்ம ஊர் ஆஸ்பிட்டல பார்த்துப் பயப்படுறாங்க. அந்தப் பயம்தான் பிரைவேட் ஆஸ்பிட்டலோட இன்வெஸ்மெண்ட்.” ‘மெர்சல்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் பேசும் இந்த வசனத்தின் வீரியமும் விவாதமும் தான் தமிழக அரசியல் களத்தைத் தற்போது வன்முறைக்காடாக வடிவம் மாற்றியதற்கு விதை. இந்த வசனத்தின் உள்ளீடான உண்மைத்தன்மையை எடை போட்டு பார்ப்பது தேவைதான். இருப்பினும், சிலரின் எண்ணத்தில் படர்ந்து கிடந்த வன்மமும் இதன் வழியே முகம் காட்டியதை உணர முடிந்தது.

தீபாவளி வெளியீடாக 18.10.2017 அன்று விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல். இதன் இயக்குநர் அட்லி. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தின் மொத்த செலவு 130 கோடி. ஆனால், அன்றைய தினம் எந்தத் திரையரங்கிலும் நேர்மையான முறையில் பார்த்திடாத பி.ஜே.பி.யின் தமிழகத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றுக்கு எதிரான, அவதூறான காட்சிகள் உள்ளன. குறை சொல்லவேண்டும், மக்களிடம் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்” என்று விமர்சனப்போரைத் தொடங்கி வைத்தார். இது அரசியல் ரீதியான கருத்தாக இருந்தாலும், தமிழகத்தில் பிஜேபியை வளர்த்தெடுப்பதற்கான முன்னெடுப்புகளில் ஒன்றாக அரசியல் பார்வையாளர்களால் உணரப்பட்டது.

எப்பொழுதுமே, எதார்த்த சமூகத்திற்கு எதிரான கருத்துகளை மட்டுமே அள்ளி வீசுவதன் மூலம் காவி அரசியலை உயர்த்திப்பிடிப்பவர் பி.ஜே.பி.யின் தேசியச்செயலாளர் எச்.ராஜா. மெர்சல் படத்தை இணையதளத்திலும் கைப்பேசியிலும் பார்த்தாக உளறி சிக்கிய அவர், தனது முகநூல் பக்கத்தில் 19.10.2017 அன்று ஒரு கருத்தைப் பதிவிட்டார். அதில், “மெர்சல் படத்தில், பொய்களின் அடிப்படையில் வெறும் மோடி வெறுப்பை அடிப்படையாக வைத்து வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மையின் அடிப்படையில் விமர்சனங்கள் இருந்தால் அதை பா.ஜ.க வரவேற்கும். ஆனால், மோடிக்கு எதிராக ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் திட்டமிட்ட சதியாகக் காட்சிகள் அமைந்துள்ளன. இது ஏற்புடையதல்ல. எனவே, விஜய்யின் வசனங்கள் பிரதமர் மோடியைக் குறிவைத்துத் திட்டமிட்ட ரீதியில் அவதூறு பரப்பும் செயலே ஆகும்” எனக் குறிப்பிட்டார். இதன்வாயிலாக, பொழுபோக்குச் செயலை நடைமுறை அரசியலுக்குள் நகர்த்தி, விமர்சன வன்மத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்சென்றார். சனநாயகத்திற்கு விரோதமான முறையில் படத்தைப் பார்த்த இவர், அரசியல் நேர்மை குறித்து கருத்துச் சொன்னது பலரின் கவனத்தில் கனத்தது.

இதனையடுத்து, மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிடும்போது, ‘எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசியலுக்கு வர உரிமை உண்டு. ஆனால், தான் இருக்கின்ற துறையினைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் செய்வது தவறு. எம்.ஜி.ஆர் திரைப்படத்துறையில் ஆர்வம் செலுத்திய அளவிற்கு அரசியலிலும் ஆர்வம் செலுத்தினார். மெர்சல் படத்தில் அரசியல் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. திரைவழியில் அரசியல் செய்வது நல்லது அல்ல. அதில் சொல்லப்பட்ட வசனங்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பது வருத்தமளிக்கிறது. இதுபோன்றவற்றை திரைப்படத்தில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும்’ எனத் திரைத்துறையினருக்கு வகுப்பெடுத்தார். இல.கணேசன் உள்ளிட்ட பி.ஜே.பி.யினரும் இதில் இருந்து விலகிவிடவில்லை.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கக்கூடிய இவ்வாளுமைகள் இப்படி, தொடர்க்குற்றச்சாட்டைத் திணிக்க, ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் 20.10.2017 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘மெர்சல் திரைப்படம் யாருக்கும் எதிரானது அல்ல. அரசுக்கு எதிரான கருத்துகளைச் சொல்லும் படமும் அல்ல. சாமானிய மனிதர்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்கிற ஒரு மருத்துவனின் கனவுதான் இந்தத் திரைப்படத்தின் கரு’ என விளக்கமளித்தது. மேலும், ‘மெர்சல் படத்தில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகளைத் தேவைப்பட்டால் அகற்றவும் தயார்’ என்று உறுதியளித்தது அந்நிறுவனம்.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் 22.10.2017 அன்று ஊடகவியலாளரைச் சந்தித்த எழுச்சித்தமிழர், “தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலின் உக்கிரம் இன்னும் குறையவில்லை. அந்தப் பிரச்சினையைத் திசை திருப்பவே ‘மெர்சல்’ பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளார்கள். நான், இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், இப்போது நடக்கும் விமர்சனங்களில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. திரைப்படத் தணிக்கைக்குழுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கமானவர்களே இருப்பார்கள். அப்படி, அவர்கள் முறையாகத் தணிக்கை செய்த பிறகே அப்படம் வெளியாகியிருக்கிறது. எனவேதான், இந்த எதிர்ப்புகளில் உள்நோக்கம் இருக்கிறது என்கிறேன். அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களை வளைத்துப்போட்டு அவர்கள்மூலம் தமிழகத்தில் கால் ஊன்ற பி.ஜே.பி முயற்சி செய்கிறது” என்று அரசியல் வரம்பிற்குள் நின்று கருத்துக்கூறினார்.

இதற்கு, 23.10.2017 அன்று பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், “விஜயை வளைத்துப்போட்டு அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. திருமாவளவன்தான் கட்டப்பஞ்சாயத்து செய்து கட்சி அலுவலக இடம் உட்பட பல நிலங்களை வளைத்துப் போட்டுள்ளார்” என விடுதலைச் சிறுத்தைகளின் நன்மதிப்பைச் சிதைக்கும் வகையில் வன்மத்தைக் கக்கினார். திரைப்படம் சார்ந்த பொதுக்கருத்திற்குத் தனிமனிதத் தாக்குதலைத் திணித்தார். அரசியல் நாகரிக எல்லையைத் நசுக்கிவிட்டு, வன்முறையைத் தூண்டும் வார்த்தைகளை அள்ளித் தூவினார். உரிமைகளை இழந்து கையறுநிலையில் நிற்கும் அடித்தட்டு மக்களை, அதிகாரத்தை நோக்கி நகர்த்தும் எழுச்சித்தமிழரின் தலைமைப்பண்பு மீது விஷத்தை வீசினார்.

தமிழக அரசியலின் திசைவழிப்போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் - தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாகவும் வெகுண்டெழுந்து வரும் விடுதலைச் சிறுத்தைகளை, தமிழிசை சவுந்தரராஜனின் இந்தக் கொடுஞ்சொற்கள் கடுமையாகக் காயப்படுத்தின. இதற்கு எதிர்வினையாற்றும் விதத்தில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 23.10.2017 அன்று சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இயக்கத் தோழர்கள். அப்பொழுது, மனுவை வாங்க மறுத்து, அவர்களின் உணர்வை அலட்சியப்படுத்தியது காவல்துறை. சமூக அமைதியைக் கட்டமைக்க வேண்டிய போலீசும் பிஜேபியுடன் இணைந்துகொண்டதோ அல்லது இது எடப்பாடி காவல்துறையா? இல்லை மோடி அரசின் போலீசா? என ஆத்திரமடைந்த சிறுத்தைகள், காவல்துறையுடன் போராடவுமில்லை கெஞ்சவுமில்லை. மாறாக, அருகில் இருந்த தமிழிசை சவுந்தரராஜனின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தனர். கோபத்தின் உச்சமாக, தமிழிசையின் உருவ பொம்மையையும் அப்போது தீ வைத்து எரித்தனர். இப்படிப் போராட்ட வடிவம் திசை மாறியதற்கும், தொண்டர்களின் குணத்தில் வெப்பம் கூடியதற்கும் காவல்துறையின் காவிப்புத்தியே காரணம். காவல்நிலையத்தில் மனுவை வாங்கியிருந்தால் தமிழிசை வீட்டிற்குத் தொண்டர்கள் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. இந்த எதார்த்தத்தை உணராத காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட வி.கோ.ஆதவன், கே.ஆர்.புதியவன், கரிகால்வளவன், அகரன், கபடி குட்டி, ஏ.சி.ராம்குமார், பழக்கடை ராஜன், உ.டேவிட், தலித் சரவணன், ப.விக்ரம், க.க.காசிநாதன், விஜய் ஆனந்த், ஆகியோரை 188, 71எ, ..பிரிவின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதன் வாயிலாக சிறுத்தைகளின் போராட்டத்தை ஒடுக்கி அச்சுறுத்திவிட்டதாக எண்ணினர். ஆனால், எதிர்ப்பலை அணையவில்லை; எகிறியது அடங்கவில்லை.

இச்சூழலில், அடுத்தநாள்(24.10.2017) கரூரில் பிஜேபியின் மாநிலப் பொதுக்குழு கூடியது. இதில் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்ட முன்னணிப் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவும் அது அடையாளம் பெற்றது. இதனையறிந்த விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு, பிறகு, சுமார் 700 மீட்டருக்கு அப்பால் கறுப்புக்கொடி காட்ட முயற்சித்தனர். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத காவல்துறையினர் தோழர்களைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றினர். அப்போது, கைது செய்யப்பட்ட மன்னன், கண்மணி ராமச்சந்திரன், பிரதீஸ்வரன், விசுவநாதன் ஆகியோரைக் கொலைவெறித் தாக்குதல் தொடுக்கும் எண்ணத்துடன் போலீஸ் ஜீப்பிற்குள் பாய்ந்தது பொதுக்குழுவிற்கு வந்த அராஜகக் கும்பல். 50க்கும் அதிகமான பிஜேபினர் வன்முறையில் குதித்தனர். போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைத்து நாசப்படுத்தப்பட்டன. பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் சிலரும் காவிகளின் தாக்குதலுக்குள் சிக்கினர். குண்டர்களின் கலவரத்தால் அவ்வீதியே போர்க்களம் போல் முகம் மாறியது.

ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை வெளிக்காட்டிய தோழர்களை ஒடுக்கிய காவல்துறை, பிஜேபி குண்டர்களைக் கட்டுப்படுத்தவும் இல்லை; கைது செய்ய துணியவும் இல்லை. ஆனால், கைது செய்தவர்களை ஏற்றி வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தவில்லை. பிஜேபி குண்டர்கள் தாக்குவதற்கு ஏதுவாக வாகனத்தை நிறுத்தி, அவர்களுடன் கூட்டுச்சேர்ந்துகொண்டது போலீசுப்புத்தி. மேலும், குற்ற எண் 878/2017 இன்படி 147, 148, 324, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விடுதலைச் சிறுத்தைகளைச் சிறையிலடைத்தது. விடுதலைச் சிறுத்தைகள் மீது நடந்த தாக்குதலில் அக்கறை செலுத்தாத அவர்கள், போலீஸ் வாகனம் நொறுக்கப்பட்டதற்காவது நடவடிக்கை எடுத்து பிஜேபியினரைக் கைது செய்தார்களா? குறைந்தபட்சம் வழக்குப்போட்டார்களா? என்றால் எதுவும் இல்லை. இப்படி, அதிகார வர்க்கத்திற்குத் தனது விசுவாசத்தைக் காட்டி, நீதிக்கு எதிராக ஒளிந்துகொண்டது காவல்துறை. ஆக, இவர்கள் யாருக்கானவர்கள்? யாரால் இயக்கப்படுகிறார்கள்? என்பது இத்தருணத்தில் அம்பலமானது.

இத்தாக்குதலில் பொதிந்துள்ள எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, சமூக அமைதியைப் பரவச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுதான் ஒரு தலைமைக்குரிய தகுதி. ஆனால், அந்தப் பண்பின் திசைவழி தெரியாத பிஜேபியின் எச்.ராஜா, அன்றைய தினமே(24.10.2017) தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் ‘எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல்’ தன் பங்கிற்கு ஒரு கருத்துக் கலவரத்தை மூட்டிவிட்டார். அதில், “கட்டப்பஞ்சாயத்து, வன்முறை, ரௌடித்தனம் இதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் அடையாளம். தமிழக அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார். இதன்வாயிலாக மீண்டும் மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் மீது திட்டமிட்ட வன்முறையைக் களத்திலும் சமூக ஊடகத்திலும் திணிக்கின்ற போக்கைக் கையாண்டது பிஜேபி தான். அப்போதும் கூட இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடாமல் ஜனநாயக ரீதியில் இதனை எதிர்கொண்டார் எழுச்சித்தமிழர். மேலும், இதுகுறித்து புகார் ஒன்றை 25.10.2017 அன்று சென்னைக் காவல்துறை ஆணையரிடம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

இப்போக்கினை அடுத்துதான், நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் கட்சியினரின் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக 27.10.2017 அன்று சென்றிருந்தார் தமிழிசை சவுந்தரராஜன். நிகழ்ச்சி முடித்துவிட்டு மயிலாடுதுறை பேருந்துநிலைய சாலைவழியே திரும்பியுள்ளார். அப்போது, “தமிழிசையே திரும்பிப் போ! எழுச்சித்தமிழரிடம் மன்னிப்புக் கேள்!” என்கிற முழுக்கங்களை எழுப்பியவாறு கறுப்புக்கொடி காட்டியுள்ளனர் விடுதலைச் சிறுத்தைகள். இப்படி அரசியல் களத்தில் கறுப்புக்கொடி காட்டுவதென்பது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான அடையாளங்களில் ஒன்று. மேலும், காலங்காலமாக இருந்து வரும் நடைமுறையும் இது. இதனை அரசியல் பார்வையோடு அணுகத் தெரியாத காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் வேலு.குணவேந்தன், ஜெய்சிங் ஜெயராஜ், தமிழ்மணி, அருண்குமார், மணி ஆகியோரைக் குற்ற எண் 746/2017 இன்படி 143, 188 உள்ளிட்ட பிரிவின் கீழ் கைது செய்து தனியார் வேன் ஒன்றில் ஏற்றினர். அப்போது தமிழிசைக் காரைப் பின்தொடர்ந்து வந்த பிஜேபியினர் தங்களது வாகனங்களில் இருந்து இறங்கி ஓடிவந்து கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் மீது தாக்குதல் முயற்சியை மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது, கலவரக்காரர்களான பிஜேபியினரைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில் விடுதலைச் சிறுத்தைகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டனர் போலீசார்.

இதில் இன்னொரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், இத்தாக்குதலில் நேரடியாகக் களத்தில் இறங்கிய பிஜேபியினர் இருவர் ஏற்கெனவே பல்வேறு கொலை வழக்குகளில் நேரடியாக ஈடுபட்டு ரௌடிப் பட்டியலில் உள்ளவர்கள். குறிப்பாக, பா.ம.க.வில் இருந்த போது தன் கட்சியினரையே வெடிகுண்டு வீசி கொலை செய்த காரணத்திற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர். பிறகு தன் பாதுகாப்பிற்காக பிஜேபியில் அரசியல் அடைக்கலம் புகுந்தவர் ஒருவர். இன்னொருவர் தமிழக முக்கியக் கொலைகளின் வழியே அறியப்பட்டவர். இதுபோன்ற குண்டர்களை பிஜேபியில் இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்கின்றது பிஜேபி தலைமை. ஆகவே அவர்களை ஏவிவிட்டு, தன்இறுமாப்பை வெளிகாட்டியதோடு மட்டுமல்லாமல், ஊடகங்களில் தொடர்ந்து வன்முறையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வந்தார் தமிழிசை.

தமிழக அரசியல் பார்வையாளர்களுடைய கவனத்தில் உச்சத்தைப் பெற்றது இத்தொடர்த்தாக்குதல். அரசியல் வரம்பையும்  நாகரிகத்தையும் மீறி அராஜகமுறையில் குண்டர்களை ஏவிய பிஜேபியின் இப்போக்கை அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட சாதிய மதவாத சக்திகளைத் தவிர்த்து அனைவராலும் கண்டிக்கப்பட்டது. அதேவேளையில் எழுச்சித்தமிழரின் முதிர்ச்சியும் நிதானமும் கலந்த நகர்வையும் பொதுச்சமூகத்திற்குப் பாதிப்பில்லாத வகையில் கட்சியினரை வழிநடத்தியதையும் அனைத்துத் தலைவர்களும் பாராட்டிக் கருத்துகளை வெளியிட்டது ஊடகத்தின் வாயிலாக உச்சரிக்கப்பட்டது.

இந்த நெருக்கடியில் தான், மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெறக்கோரிய வழக்கறிஞர் அஸ்வத்தமன் தொடர்ந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இது வெறும் திரைப்படம் தானே, இது நிஜ வாழ்க்கை கிடையாதே, அதை ஏன் நிஜம்போன்று விமர்சிக்கிறீர்கள், இந்தப் படம் ‘சொல்லும் அளவுக்கு நல்ல படம் இல்லை,’ ஆனால், இதுபோன்ற விமர்சனம் மற்றும் எதிர்ப்புகளால் அப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது’ என்று தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த மனுதாரர் ‘டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் மக்களிடம் பணம் இல்லை என வசனம் உள்ளது. இது தவறானது’ என்று தெரிவித்தார்.

அப்போது, கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், ‘டாஸ்மாக் கடைகளை மூடுவது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமை, நல்ல கல்வி தொடர்பாகப் பொதுநல வழக்குகள் தொடருங்கள். நாட்டுக்குத் தேவையான இயக்கங்களை நடத்துங்கள். ஏன் ஒரு படத்தை மட்டும் குறிவைத்து சொல்கிறீர்கள்? நீதிமன்றத்தைப் பொதுமேடையாக்க வேண்டாம்’ என்று தெரிவித்தனர். மேலும், ‘சென்சார் போர்டு ஒரு படத்தில் எந்த வசனங்களை அனுமதிப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் உரிய அங்கீகார அமைப்பு, அவர்களுக்கு அது குறித்து தெரியும். படத்தில் வருவது வெறும் வசனம். இதைக் கண்மூடித்தனமாக யாரும் நம்ப மாட்டார்கள். மேலும், அதுபோல வசனங்கள் வைப்பது அவர்களின் கருத்துரிமை. அதில் தலையிட முடியாது’ என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை 26.09.2017 அன்று தள்ளுபடி செய்தனர். இதைத்தான் எழுச்சித்தமிழரும் முதல் கருத்தாய் முன்வைத்தார்.

திமிறி எழு! திருப்பி அடி! என்கிற முழக்கத்தை முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எதிர்வினையாற்றுவதற்கான சிக்னலைக் கொடுத்திருந்தால் “தமிழ்நாடு என்பது கொலைநிகழ் காடாக காட்சியளித்திருக்கும்.” அதற்கு வாய்ப்பளிக்காமல் பொதுச்சமூகத்தில் அமைதி பூப்பதற்காக அத்தனைக்கும் அமைதி காத்தார் எழுச்சித்தமிழர். அதனால், இன்று வன்முறையாளர்கள் யார்? என்பதையும் அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியவர்கள் யார்? என்பதையும் காலம் விரைவில் காட்டும்.

- நமது தமிழ்மண் - நவம்பர் 2017

No comments:

Post a Comment

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்!

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்! பூவிழியன் சனவரி 10,2017, ஆணவக்கொலை வழக்கில் முதன் முறையாக மரண தண்டனை விதிக்கப்...