கவுரி லங்கேஷ் படுகொலை:
துப்பாக்கி விழுங்கிய பகுத்தறிவு
பூவிழியன்
“மதம் என்பது அதிகாரத்திற்கான ஓர் ஆதாரம் என்பதை இந்திய வரலாறு நிரூபிக்கிறது” என்றார் அம்பேத்கர். 1936 ஆம் ஆண்டு ‘லாகூர் ஜாத்பட் - தோடக் - மண்டல்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்காக அம்பேத்கர் தயாரித்த உரையில் இந்த வரலாற்று உண்மை சொல்லப்பட்டிருக்கிறது.
எண்பது ஆண்டுகள் உருண்டோடிய சூழலில், இன்றைய மோடியின் காவிப்பயங்கரவாத அரசியலுக்கும் மதச்சார்பின்மை மீதான பா.ஜ.க.வின் வன்முறை வெறியாட்டத்திற்கும் அப்படியே ஒத்துப்போகிறது ஆபத்து நிரம்பிய இதன் கருத்துகள். அதனால் தான், இந்துத்துவக் கோட்பாட்டிற்கும் சாதிக் கட்டமைப்பிற்கும் எதிராக யார் வெகுண்டெழுந்தாலும் அவர்களின் மீது இந்துமதக் காப்பாளர்கள் தனது அதிகாரவெறியை மரணமாகத் திணிக்கின்றனர். இதற்குச் சாட்சியம் தான் கவுரி லங்கேஷ் படுகொலை.
இதுமட்டுமல்லாமல், 20.08.2013 அன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நரேந்திர தபோல்கர்(68), 16.02.2015 அன்று மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் கோவிந்த் பன்சாரே(82), 30.08.2015 அன்று கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் எம்.எம்.கல்புர்க்கி(77). இன்னும் எத்தனையோ? அதனையும்
எதிர்காலம் எழுதிக்காட்டும்.
மறைந்த கன்னட எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான பி.லங்கேஷின் மகள் தான் கவுரி லங்கேஷ்(55). பெங்களூருவில் வசித்து வந்த இவர், கன்னட வார இதழ் ஒன்றின் பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இந்து மதத்தின் மனு தர்மத்தையும் சாதி அமைப்பையும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினரையும் இவரது எழுத்துக்கள் விட்டுவைக்கவில்லை. இதனையடுத்து, சமூக வலைதளங்களின் வழியே கொலைமிரட்டல்கள் அவ்வவ்போது வந்து விழுந்தாலும் காவிகளின் மீதான கவுரியின் கோபம் கரைந்தபாடில்லை.
பயத்தையும் மௌத்தையும் கலைத்தெறிந்துவிட்டு துணிச்சலைச் சிந்தனைக்குள் ஊற்றினார். இதன் விளைவு பத்திற்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை எதிர்கொண்டார். அண்மையில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரஹலாத் ஜோஷி தொடுத்த வழக்கில் இவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும், ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பிரதமர் நரேந்தர் மோடியையும் இந்துத்துவ அமைப்பினரையும் துணிச்சலோடு விமர்சன எல்லைக்குள் நிறுத்தினார். இந்நிலையில் 05.09.2017 அன்று மர்ம நபர்களால் அவரது இல்லத்திலே சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதேபோன்று, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மர்ம நபர்களால் 2013 இல் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். சிவசேனை - பா.ஜ.க கூட்டணி 1990இல் ஆட்சியைக் கைப்பற்றிய போது சாலைகள் தனியார்மயமாவதைப் பெருமளவு ஊக்குவித்தன. ஐ.ஆர்.பி என்ற நிறுவனம் மராட்டிய மாநிலம் முழுவதும் பல சாலைகளைப் போட்டு, சுங்கச்சாவடிகள் அமைத்து பெரும் வசூல்கொள்ளையில் இறங்கியது. ஐ.ஆர்.பி.யின் நிலப்பறிப்புக்கு எதிராகத் தகவல்பெறும் உரிமைச்சட்டம் வாயிலாகச் சில விபரங்களைக்கோரிய சதீஷ்ஷெட்டி என்பவர் 2010இல் கொல்லப்பட்டார். அதன்பிறகு, கோவிந்த் பன்சாரே ஐ.ஆர்.பிக்கு எதிராக வலிமையான பல போராட்டங்களை முன்னெடுத்தார். இறுதியாக இவரையும் பலிகொண்டது அக்கும்பல்.
ஆனால், குற்றவாளிகளைக் கண்டறிய முடியாமல் திணறியது காவல்துறை. 2014இல் சி.பி.ஐ. வசம் வழக்கை ஒப்படைத்தது மும்பை நீதிமன்றம். இதனையடுத்து முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த சி.பி.ஐ., “இக்கொலையின் பின்னணியில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த வீரேந்திர டாவ்டே” இருப்பதாக 2016 செப்டம்பர் முதல்வாரத்தில் தெரிவித்துள்ளது. இவர் மாட்கான் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டவர் என்பதை அறியும்போது அதிர்ச்சி மிகுந்ததாக இருக்கிறது படுகொலையின் பின்னணி.
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்ட போது, கோவிந்த் பன்சாரேவுக்கு ஒரு கடிதம் வந்ததாம். அதில் “அடுத்தது நீங்கள் தான்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம். காரணம், சிவாஜி பல்கலைக்கழகத்தில் பேசும்போது, “கோட்சேவைப் புகழும் மனநிலை ஆபத்தானது” என்று பதிவுசெய்தார் என்பதற்காக அக்கடிதம் அனுப்பப்பட்டது என்பது அதன்பின் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், “சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவப் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் காவல்துறையால் கண்காணிக்கப்பட வேண்டும்” என்று எழுதியதற்காக முன்மே பன்சாரே கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனையடுத்து இவரும் இந்துமதப் பயங்கரவாதிகளார் கொன்று வீழ்த்தப்பட்டார்.
இவர்கள் மீதெல்லாம் மரணத்தை வீசியதற்கான ஒற்றைச்சொல் ‘இந்து’ என்னும் குறியீடாகும். அதாவது, இந்து மதக்கட்டமைப்பையும் சாதி அமைப்பையும் இந்துத்துவ அரசியலையும் தங்களது எழுத்துக்களால் சிந்தனையால் எழுதி அதன் போலித்தனத்தைச் சிதைத்த பகுத்தறிவு அடித்தளம்தான் இதன் அடையாளமாக வெளிப்படுகிறது. மூடநம்பிக்கைகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்ததற்காக அவர்கள்
உயிரையும் தியாகம் செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் 2005 இல் இருந்து 2013 வரை பன்சாரே படுகொலை சம்பவம் போன்று 53 தாக்குதல்கள் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இருப்பினும் மர்மநபர்களின் துப்பாக்கிகள் இன்னும் எத்தனை பகுத்தறிவாதிகளை விழுங்கும்? ஆளும் ஆட்சியாளர்களின் மௌனம் இன்னும் எத்தனை கொலையாளிகளை மர்மநபர்கள் என்று பாதுகாக்கும்?
எல்லாம் சனநாயகச் சமூகம் அமைதியாக இருக்கும்வரைதான். யோசிப்போம்.
- நமது தமிழ்மண் / செப்டம்பர் 2017
No comments:
Post a Comment