Wednesday, 15 November 2017

மாட்டிறைச்சித் தடை எனும் மோடி அரசின் சூதாட்டம்


இந்துத்துவ வெறியா?
விவசாயமில்லா இந்தியாவா?


மாட்டிறைச்சித் தடை எனும்

மோடி அரசின் சூதாட்டம்


பூவிழியன்


மாட்டிறைச்சி அரசியல் இன்றைய இந்தியாவின் திசைவழிப்போக்கையே கடுமையாக்கியுள்ளது. உலகத்திலே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் வகிக்கும் மோடி அரசு, கடந்த மே 23 ஆம் தேதி ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது, பசு, காளை, எருமை, ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காக வாங்கவோ, விற்கவோ கூடாது என்பது தான் அது. நாடாளுமன்றத்தில் விவாதிக் கப்படாமலும், மாநில அரசுகளிடம் கருத்துக் கேட்காமலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளி யிட்டுள்ள இந்த உத்தரவால் நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்புகள் தங்களது எதிர்ப்பை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியும் வருகின்றன.

மேலும், மாட்டிறைச்சி சார்ந்த ரூபாய் 1 லட்சம் கோடி சந்தை தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்புத்துறை அளித்திருக்கும் புள்ளிவிபரத்தில், “தமிழகத்தில் மொத்தம் 100 மாட்டுச்சந்தைகள் செயல்படுவதாகவும், ஒரு வாரத்திற்கு மட்டும் 53 ஆயிரம் மாடுகள் இதில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் மூலம் 80 கோடி ரூபாய் வருவாய்க் கிடைத்து வந்ததாகவும் கூறுகிறது. இதுமட்டுமல்லாமல், ஒரு வருடத்திற்கு 26 லட்சம் மாடுகள் இந்தச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதன் வாயிலாக வருடத்திற்கு 4160 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த வருமானத்தைத் தற்போது கானல்நீராய் கரைந்துவிட்டது மோடி அரசின் உத்தரவு.

அதாவது, சந்தைகளிலிருந்துதான் இறைச்சிக்கான மாடுகள் வாங்கப் படுகின்றன. விவசாயம் அல்லாத பணிகளுக்கு மாடுகளை வாங்குவது தடை விதிக்கப்பட்டுள்ளது. வாங்குபவரும், விற்பவரும் பரஸ்பரம் ஒப்பந்த நகலை உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு இதுவரை சுமுகமாக நடைபெற்று வந்த மாட்டுச்சந்தை வர்த்தகத்தை முடக்கு வதாக அமைந்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு முன்னே, கடந்த மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள பாஜக, அங்கு உள்ள சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனையடுத்து மூன்று மாதங்கள் கழித்தே தேசம் முழுவதற்குமான பொது அறிவிப்பாக வந்ததில் இருந்து இந்த வன்மத்தின் தூரம் புரிகிறது.

மத்திய விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960 இல் இறைச்சிக்காக விலங்குகளை விற்கவும் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு பசுக்கள் உள்ளிட்ட சில விலங்குகளை இறைச்சிக்காக வாங்கவோ, வெட்டவோ தடை என்கிற விதியை அமல்படுத்தியதன் மூலம் இச் சட்டத்தின் அடிப்படை விதியையே மீறியுள்ளது பி.ஜே.பி. அரசு. மேலும் மத்திய வேளாண் அமைச்சகமோ அல்லது மாநில அளவிலான கால்நடைப் பராமரிப்புத்துறையோ வெளியிடாத இந்த அறிவிப்பைச் சுற்றுச்சூழல் அமைச் சகம் கொண்டுவர வேண்டிய தேவை என்ன? என்கிற கேள்வியும் பலருக்குள் மூண்டுக் கொண்டிருக்கிறது.
இருப்பினும், நடுவண் அரசின் இந்த உத்தரவை புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. மோடி அரசின் இந்த நெருக்கடிநிலை “எங்களைக் கட்டுப்படுத்தாது, நாங்களும் இதற்குக் கட்டுப்பட மாட்டோம்” எனவும்  “எங்கள் உணவு - எங்கள் உரிமை” என்னும் பொருளிலும் வெளிப்படையாகவே முடிவைத் தெரிவித்துவிட்டன. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஒரு படி மேலே போய் “தேவைப்பட்டால் இந்த உத்தரவுக்கு எதிராகத் தனிச்சட்டமே இயற்றுவோம்” என்று துணிந்து எதிர்ப்பை விதைத்துள்ளார்.

குஜராத், உ.பி. அரசுகளும் பசுப் பாதுகாப்பு கொடுஞ்சட்டமும்
இந்நிலையில், மாடுகளை இறைச் சிக்காகக் கடத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் குஜராத்தில் இயற்றப்பட்ட பசுப் பாதுகாப்புச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. குஜராத்தில் கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் மாடுகளை இறைச்சிக்காகக் கொண்டு செல்வதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச் செல்வது தெரியவந்தால், அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டத்திருத்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் சட்டவிரோதமாக மாடுகளை இறைச் சிக்காகக் கடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போதைய புதிய சட்டத்தின்படி, 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதத் தொகை ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பிடிபடுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்குச் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அம்மாநில உள்துறைத் துணைஅமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா கூறும்போது, “புனிதமான மாடுகளைக் காக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசானது மாடுகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது” என்றார். அதேபோன்று, உத்தரபிரதேச மாநிலக் காவல்துறைத் தலைவர் சுல்தான் சிங், அனைத்து மாவட்டக் காவல் துறை அதிகாரிகளுக்கும் தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “பசுவதையில் ஈடுபடுவோர் மற்றும் இறைச்சிக்காக மாடுகளைச் சட்டவிரோதமாகக் கடத்துபவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச்சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப் பிட்டுள்ளார்.

 இவ்வாறு, ஒருபுறம் இந்த அறிவிப்பானது, தலித்துகளையும் இசுலாமியர்களையும் குறிவைக்கும் இந்துத்துவத்தின் ஆணவப்போக்காகவும், தனிமனித உரிமை மீதான கொடுந் தாக்குதலாகவும் உணரப்படுகிறது. காரணம், இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மையாக மாட்டிறைச்சித் தொழிலில் ஈடுபட்டு வருவதால் அவர்களின் பொருளாதாரத்தை நசுக்குவதற்கான உத்தியாகவும் இது பார்க்கப்படுகிறது. மேலும், தலித்துகள் உள்ளிட்ட முஸ்லீம்களின் உணவுப் பழக்க வழக்கங்களோடு இணைந்த ஒன்றாக மாட்டிறைச்சி கலந்துவிட்டதால், தனி மனிதரின் உணவு உரிமையை அரசு பறிப்பதாகவும் முணுமுணுக்கப்படுகிறது. இன்னொரு திசையில் நம் பார்வையைக் குவிக்கும் போது வேறொரு அதிர்ச்சியும் இதற்குள் புலப்படுகிறது. அதாவது, இந்திய மண்ணில், விவசாயம் சார்ந்த உற்பத்தி வடிவங்கள் அனைத்தையும் அடியோடு அழித்துவிட்டுப் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட் களுக்கான விற்பனைச்சந்தையாக இந்தியாவை மாற்றுவதே இதன் உள்ளீடாகும்.

இதன் வழியே அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பால் உற்பத்தி மற்றும் பசுக்களை இறக்குமதி செய்யும். இதனால், இந்தியப் பாரம்பரியமிக்க பசுக்களும் காளை மாடுகளும் முற்றிலும் அழிக்கப்படும் பேராபத்தும் நம்மைச் சூழ்ந்துவருகிறது. அந்நிய நாட்டு முதலாளி களின் கைக்கூலிகளாக இந்திய அரசு மாறிவருவதற்கான ஒத்திகையே இந்தக் கூட்டுச் சதியாகும்.
மாட்டிறைச்சியும் கொலைவெறித் தாக்குதல்களும்
இதன் முன்னோட்டமாக, ஜல்லிக் கட்டுத் தடை மற்றும் பசுவதைத் தடுப்பு என்கிற பெயரில் இந்தியாவில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிற மதவெறி அரசியலும் நிகழ்ந்து வருகிறது.

உத்தர பிரதேசம் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று காரணம் கூறி முகமது அக்லாக் எனும் இசுலாமியரை அடித்தே கொல்லப்பட்டார். குஜராத் மாநிலம் உனாவில் இறந்த மாட்டின் தோலை உறித்ததற்காக 4 தலித் இளைஞர்கள் கொலைவெறித் தாக்கு தலுக்கு உள்ளானார்கள். ராஜஸ்தானில் பெஹ்லூகான் என்பவர் பால் வியாபாரத்திற்காக பசுக்களை வாங்கிவரும் போது “பசுக்காவலர்கள்” என்கிற பெயரால் அடித்தே கொல்லப்பட்டார். மேலும், இருவர் படுகாயப்படுத்தப்பட்டனர். இப்படிப் பசுப்பாதுகாப்பு எனும் அடையாளத்தோடு நடத்தப்பட்டு வரும் வன்முறைகள் அடங்குவதற்குள் அடுத்த அறிவிப்பு மாட்டிக்கறித் தடை குறித்தானது என்கிற போது அச்சமும் பதற்றமும் பன்மடங்காகிறது. சமீபத்தில் மே 30, 2017 அன்று சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்தியதற்காக ஆய்வு மாணவர் சூராஜ் என்பவரை பி.ஜே.பி.யின் “ஏபிவிபி” எனும் மாணவர் அமைப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் இறக்குமதி
மாட்டிறைச்சியை மதம், உணவு பழக்கவழக்கம், பொருளாதாரம் சார்ந்து மட்டுமே சுருக்கிப் பார்க்க முடியாது. இதனை, இந்துத்துவ வெறிப் போக்குடன் இணைத்து இந்திய இறக்குமதிச் சூழலையும் உள்வாங்க வேண்டும். அதாவது, விவசாயத்தை முற்றிலுமாக இந்திய மண்ணில் இருந்து ஒழிப்பதுதான் ஆட்சியாளர்களின் இறுதி எண்ணம் என்பதையும் பகுப்பாய்வு செய்து பார்க்கவேண்டும். இதற்காக, இந்திய மண் வளத்தை நாசப்படுத்தி இயற்கைச்சூழலை விஷமாக்கி, நோய் பரப்பும் உத்தியும் அரங்கேற்றி வருகிறது பன்னாட்டு நிறுவனங்கள்.

இதனால், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட Carbaryl, Malathion, Acephate, Dimethoate, Chlorpyrifos, Lindane, Quinalphos, Phosphomidon, Carbandizm, Captan, Tridamorph, Practilachlor, 2.4–D and Glyphosate
 உள்ளிட்ட 67 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய நிலங்களில் கொட்டப்பட்டு மொத்த நாட்டின் விளைநிலங்களும் விஷமாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு உர நிறுவனங்கள் மேற்கு நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை எவ்வித கட்டுபாடுமின்றி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இதன் விளைவாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காய் கறிகள், பழங்கள், பால் பொருட்களில் விஷத் தன்மை இருப்பதாகச் சொல்லி, மேற்கத்திய சந்தையில் தடைசெய்யப்படுவது அல்லது திருப்பியனுப்பப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், இவை யனைத்தும் உள்நாட்டுச் சந்தையில் எந்தத் தடையுமின்றி நுகர்வோருக்குக் கிடைத்து வருகிறது.

அதேபோன்று மரபணு மாற்றம் செய்யப்பட்டதும் மலட்டுத்தன்மை கொண்ட விதை களைப் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்து லாபக் கொள்ளை யடிப்படுத்துடன், இந்திய பாரம்பரிய விதைகளை ஒழித்துக் கட்டுகிறது. அதாவது, அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ தொடங்கி டியூபாண்ட், லேண்ட் ஓ லேக்ஸ், சின்ஜென்டா, கேடபிள்யூ ஏஜி, குரூப் லிமகிரைன், பேயர் கிராப் சயின்ஸ் ஆகியவையும் களத்தில் உள்ளன. அதிக மகசூல், பூச்சி எதிர்ப்புத் திறன் கொண்ட பி.டி வகை எனக் கூறப்பட்டாலும் அத்தனையும் மனித இனத் திற்குக் கொடுமையான பாதிப்பை உருவாக்குபவையே. இருப்பினும், சிலவற்றை அரசு தடை செய்துள்ளது. இந்த ஆபத்தை எல்லாம் உணராதவர்களாகவும் கொடும் நோய்களின் தாக்குதலின் மூலத்தைக் கண்டறிய இயலாதவர்களாகவும் நாம் இயங்கி வருவதுதான் ஆட்சியாளர் களுக்குள் நிம்மதியைப் பாய்ச்சுகிறது.

ஜல்லிக்கட்டுக்குத்தடையும் நாட்டு மாட்டினங்களின் அழிவும்
உள்நாட்டு மாட்டினங்களின் எதிர் காலம் குறித்த சர்ச்சை தற்போது பெரிதாகி இருக்கிறது. இந்நிலையில் நம்மைச் சுற்றி இன்றைக்கு வாழும் பால் மாடுகள் நாட்டு மாடுகள் இல்லை. பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மாட்டினங்கள் அல்லது அவற்றின் கலப்பினங்கள். தமிழகத்தில் பெருமளவு காணப்படுவது ஜெர்சி வகைக் கலப் பினமே. வெண்மைப் புரட்சியின் ஒரு பகுதியாக 40 ஆண்டுகளுக்கு முன் அயல்நாட்டு மாட்டினங்கள் இந்தியா விற்குள் நுழைந்தன. இந்தியாவின் மலைப் பகுதிகளில் நிலவும் குளிரால், அந்தப் பகுதிகளில் வாழக்கூடிய ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் மாட்டினம் வளர்க்கப்பட்டது. அதேநேரம் வெயிலுக்குத் தாக்குப்பிடித்த ஜெர்சி வகை, தென்னிந்தியாவிலும் சமவெளிப் பகுதிகளிலும் காலூன்றியது. அதன் கலப்பினங்கள் இங்கே பரவலாகின. இன்றைக்கு நாம் பார்க்கும் பெரும் பாலான செம்பட்டை நிறத்திலான மாடுகள், ஜெர்சி கலப்பின வகைகளே. அதன் பிறகு, ஜெர்சி, ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன், பிரவுன் ஸ்விஸ் ஆகிய வெளிநாட்டு மாட்டினங்களுடன் இந்திய மாடு வகைகள் கலப்பினம் செய்யப்பட்டன. இந்தியக் கால்நடைப் பல்கலைக்கழகங்கள் வழியாக அறிமுகமான இந்த நடைமுறை, பின்னர் பிரபலமடையத் தொடங்கியது.பால், இறைச்சி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடனே வெளிநாட்டு மாட்டினங்களின் கலப்பினம் உருவாக் கப்பட்டது. ஆனால், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் கணக்கில் கொள்ளப் படவில்லை என்றே சொல்ல வேண்டும். கலப்பினமாகப் பிறக்கும் புதிய மாடுகளின் இனப் பெருக்கத் திறனும் குறைந்தே காணப்படுகிறது.

ஆண்டிற்கு 30 ஆயிரம் எக்டேர் விளைநிலங்கள் குறையும் ஆபத்து
நாட்டில் விவசாயத்திற்கான விளை நிலங்களின் பரப்பளவு குறைந்துள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதாமோகன் சிங் கடந்த 5,மே 2016 இல் கூறுகையில், 2005-06 ஆம் ஆண்டுகளில் 182.7 மில்லியன் எக்டேர்களாக இருந்த விளைநிலங்கள் 2012-13 ஆம் ஆண்டில் 182 மில்லியன் எக்டேர்களாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும்,நாடு முழுவதும் உள்ள விளை நிலங்களின் பரப்பளவு, ஒவ்வொரு ஆண்டும், 30,000 ஹெக்டேர் அளவுக்கு குறைந்து வருவதாக, மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும், 45 சதவீத நிலம் மட்டுமே பாசன வசதி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 32.8 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில், 18.19 கோடி ஹெக்டேர் மட்டுமே விளை நிலமாகும். 2.6 ஹெக்டேர் அளவிலான நிலத்தில் பாசன வசதியை மேம்படுத்தி விளைச்சல் பெற முடியும். தற்போது, 1.52 ஹெக்டேர் தரிசு நிலமாகவும், 1.1 கோடி ஹெக்டேர் கடந்த 5 ஆண்டுகளாக விளைச்சல் இல்லாமலும் உள்ளன. இவ்வாறு அமைச்சர் சஞ்சிவ் அதில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்ற அபாயகரமான செய்தி தமிழக அரசின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக விவசாயத்துறையில் இன்றைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 1993, 94ல் 25 சதவீதமாக இருந்த வேளாண்மை உற்பத்தி 2005, 2006ல் 13.03 சதவீதமாக சரிந்துள்ளது. அதே போல் 2001, 2002ல் 76.89 லட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2004, 2005ல் 61.40 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.
விவசாயம் பொய்த்துப் போகுதல், இயற்கைச் சீற்றம், நீர் பற்றாக்குறை, லாபமின்மை, கடன் சுமை, விவசாயக்கடன் வழங்க அரசு மறுப்பு, போதுமான விலையின்மை, நகரமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவு என பேராபத்தை எதிர்கொண்டுவரும் விவாசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டுவருவதை ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. அவ்வாறு, இம்மாத தொடக்கத்தில், மத்திய பிரதேசத்தில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய போராடியவர்களில் ஆறு விவசாயிகளை அரசின் காவல்துறை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதேபோன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யா கண்ணு உள்ளிட்டோர் தில்லியில் நிர்வாணமாகப் போராடியும் இந்தியப் பிரதமர் கண்டுகொள்ளாத நிலையும் விவசாயத்தின் அழிவை அரசு திட்டமிட்டு விரும்புவதை உணர்த்துகிறது.

மேலும், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற பாரம்பரியச் சிந்தனை, செயல்முறை அழிக்கப்படுவதும் இன்றைய நலிவிற்கு ஒரு முக்கியக் காரணமாகலாம். இந்தியா தன்னை ஒரு மிகப்பெரிய வளரும் பொருளாதார நாடாகவும், வல்லரசாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டுவரும் அதே வேளையில் 40% குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத சூழல் உள்ளது. இன்று உலகெங்கிலும் உணவின்றி பட்டினி கிடக்கும் 2.6 கோடிப் பேரில் கால் பகுதியினர், அதாவது 65 இலட்சம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. 1951இல் மக்கள் தொகையில் 72% விவசாயிகள். ஆனால், தற்போது 58% மட்டுமே.

இந்தப் புள்ளிவிபரங்களால், ஆட்சியாளர்கள் விவசாயத்தைப் புறக் கணித்து விட்டனர் என்ற கொள்கை நிலவுகிறது. இதுவரை (1997லிருந்து 2008 வரை) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,82,936. ஆனால், இன்று வரை 2 லட்சத்து 20 ஆயிரம் என்று தற்கொலை எண்ணிக்கை கூடியுள்ளது. இவர்களின் சராசரி வயது 25லிருந்து 45 வரை ஆகும். விவசாய செய்நிலங்கள் பரப்பு குறைந்துவிட்டது. நகர விரிவாக்கத்தில் வயல்கள், நீர் நிலைகள் வீடுகளாகிவிட்டன. எதிர் காலத்தில் விவசாய பூமிகள், மொகஞ்சதாரா, ஹரப்பா போன்ற வரலாற்றுச் சின்னங்களாகக் காட்சி அளிக்கலாம் என்ற கவலை முன்வைக்கப்படுகிறது. இத்தனையும் எதிர்க்காமல் நாம் அமைதி காத்தால் இறுதியில் விவசாயமில்லாத இந்தியாவையும் உற்பத்தி தளங்களின் கல்லறை மீது “இறக்குமதி இந்தியா” எனும் பெயர்ப்பலகையையும் மோடி அரசு திறந்து வைக்கும்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கான தரகர் களாக ஆட்சியாளர்கள் மாறுவதும், அந்நிய நாட்டின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைச்சந்தையாக இந்திய தேசம் கட்டமைக்கப்படுவதும் மீண்டும் நம்மை அதிகார வர்க்க நாடுகளிடம் அடிமை யாக்குவதற்கான உத்தித்தான் இது. மாட்டிறைச்சித் தடை என்பதெல்லாம் நம் சிந்தனையைச் சிதைத்து, செயலை மடைமாற்றிவிடுவதற்காக மோடி அரசு நடத்தும் சூதாட்டமே. இதனைப் புரிந்துகொள்வதும் போராட்டக்களத்தை வலிமைப்படுத்துவதும் அதிகார வர்க்கத்தை எதிர்க்க துணிவதுமே நம்மை மீட்டெடுக்கும் என்பது மட்டும் உறுதி.

நமது தமிழ்மண் சூன் 2017

No comments:

Post a Comment

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்!

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்! பூவிழியன் சனவரி 10,2017, ஆணவக்கொலை வழக்கில் முதன் முறையாக மரண தண்டனை விதிக்கப்...